இரண்டாம் முறை சென்னை வந்த ரஜினியை மீண்டும் பெங்களூருவுக்குத் திரும்பி அனுப்பியது ‘எதிர்நீச்சல்’ திரைப்படம். அப்படத்தில், நாகேஷ் ஏற்று நடித்த ‘மாடிப்படி மாது’ கதாபாத்திரத்துடன் ரஜினி தன்னைப் பொருத்திப் பார்த்தார். தனது கதைதான் திரையில் ஓடுகிறது என்று நினைத்த ரஜினி, இனி வீட்டுக்குப் பயனுள்ள பிள்ளையாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டார். பெங்களூருவுக்கு டிக்கெட் எடுக்கப் பணம் இல்லை. என்ன நடந்தாலும் சரி என்ற முடிவுடன் ரயிலில் ஏறிக்கொண்டார். அதிர்ஷ்டவசமாக டிக்கெட் பரிசோதகர் யாரும் வரவில்லை.
சுமைதாங்கி
அதிகாலை பெங்களூரு போய் இறங்கியதும், சிறிதும் தயங்காமல் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார். வீட்டில் யாரும் பேசவில்லை. தலைப்பிள்ளை போல தன்னை வளர்த்து வந்த அண்ணியின் முன்னால் போய் நின்றார். 12 மணி நேர ரயில் பயணத்தில் பச்சைத் தண்ணீர்கூட அருந்தாமல் பசியால் வாடி, விழிகள் சோர்ந்து வந்திருந்த ரஜினியைப் பார்த்த அண்ணி பதறிப்போனார். உடனே அவருக்கு சாப்பாடும் தந்தார். ஆனால், ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன் மீது கோபமிருந்தாலும் பாசத்தையும் கருணையையும் அப்படியே வைத்திருந்த அண்ணியின் கால்களைத் தொட்டு வணங்கிய ரஜினி, “இனி சொல்லாமல் எங்கும் செல்லமாட்டேன்” என்று உறுதிமொழி கொடுத்தார்.
குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் நாம் வேலைக்குப் போய் உதவுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்த ரஜினி, மறுநாள் தனது அக்காள் அஸ்வத் பானுபாயின் வீட்டுக்குப் போனார். அக்காளின் கணவர் அரிசி மண்டியில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்து வந்தார். அவர்தான் ரஜினிக்கு மூட்டை தூக்கும் வேலையை அறிமுகப்படுத்தினார். நாளொன்றுக்கு 120 முதல் 160 மூட்டைகள் தூக்கி, தினசரி 6 ரூபாயும் சில நாட்கள் 10 ரூபாயும் கொண்டு வந்துகொடுத்த ரஜினியைப் பார்த்து, அண்ணன், அண்ணி இருவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ஆனால், தான் சுமை தூக்கும் வேலைக்குச் செல்வது அப்பாவுக்குத் தெரிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் ரஜினி.
பத்திரிகையாளர் அவதாரம்
ரஜினி ஊருக்குத் திரும்பி வந்துவிட்டதையும், மண்டி மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக இருப்பதையும் கேள்விப்பட்டார் ரஜினியின் எதிர்வீட்டு நண்பனான ராமசந்திர ராவ். ரஜினியைப் பார்க்க மண்டிக்குப் போனார். ஏ.பி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு முதல் பி.யூ.சி. இரண்டாம் ஆண்டுவரை இணைந்து படித்தவர்கள் இருவரும். தன்னைத் தேடி வந்த நண்பனைப் பார்த்த ரஜினி, “என்னடா... உனக்கும் வேலை வேணுமா?” என்றார். அதற்கு, “அவசியமில்லைடா... நான் இப்போ ‘சம்யுக்த கர்நாடகா' பத்திரிகை அலுவலகத்தில் உதவி ஆசிரியரா வேலைக்குச் சேர்ந்துட்டேன். மாசம் பொறந்தா 150 ரூபா சம்பளம்” என்றார் ராமசந்திர ராவ். அதைக் கேட்டு ரஜினிக்கு ஆச்சரியம்! “எனக்கும் அங்கேயே வேலை வாங்கிக் கொடு” என்கிறார்.
மறுநாளே ரஜினியை அழைத்துக் கொண்டுபோய் ஆசிரியர் முன்பு நிறுத்தினார் ராமசந்திர ராவ். ரஜினியை மேலும் கீழும் பார்த்த பெங்களூரு பதிப்பின் ஆசிரியர், “இவருக்கு உடம்பு வளையுமா? ஆள் வாட்ட சாட்டமா இருக்காரே...” என்றார். தான் நேற்றுவரை மூட்டை தூக்கிக்கொண்டிருந்ததைக் கூறிய ரஜினியை ஆச்சரியமாகப் பார்த்தார் ஆசிரியர். அவர் ரஜினியிடம் விசாரிக்கும் முன்பே, “எனக்குக் கன்னட இலக்கியம் நல்லாத் தெரியும் சார். குவெம்பு, தாரா பேந்த்ரே, சிவராம் காரந்த் போன்றோரின் படைப்புகளை வாசிச்சிருக்கேன். கன்னடத்துல கவிதைகூட எழுதுவேன்” என படபடவென்று தனக்கேயுரிய வேகத்தில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் 20 வயதே நிரம்பிய ரஜினி. அவரது ஆர்வத்தைக் கண்ட ஆசிரியர் உடனடியாக ரஜினிக்கு உதவியாசிரியர் வேலை கொடுத்தார்.
ஹனுமந்த் நகரிலிருந்து ராமசந்திர ராவும் ரஜினியும் ஒரே மிதிவண்டியில், ‘சம்யுக்த கர்நாடகா’ நாளிதழின் பெங்களூரு பதிப்பு அலுவலகத்துக்கு காலை 10 மணிக்கெல்லாம் சென்றுவிடுவார்கள். வேலைகள் முடிய இரவு 10 மணி ஆகிவிடும். அதுவரை ஈடுபாட்டுடனும் வேலை செய்தார் ரஜினி. ஆசிரியருக்குச் செய்தியைப் படித்துக் காட்டுவது, பிழை திருத்துவது என்று ஒரு தேர்ச்சிபெற்ற உதவி ஆசிரியராக எல்லா வேலைகளையும் திறம்படச் செய்து வந்த ரஜினியை, பத்திரிகை அலுவலகத்தில் அனைவருக்கும் பிடித்துப் போய்விட்டது. நன்றாகப் போய்க் கொண்டிருந்த பத்திரிகையாளர் வேலையை ரஜினி பாதியில் விடும்படி நேர்ந்தது. அதற்குக் காரணம், ரஜினியின் சின்ன அண்ணன் நாகேஷ்வர ராவ்.
‘கண்டக்டர்’ ரஜினி
ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நாகேஷ்வர ராவ், அண்ணன் சத்தியநாராயணாவுக்கும் கடிதம் எழுதி, “சிவாஜியை உடனடியாகப் போய் எனது மாமனார் வெங்கோப ராவைப் பார்க்கச் சொல்லுங்கள். அவர், சிவாஜிக்கு பஸ் கண்டக்டர் லைசென்ஸ் எடுத்துக்கொடுக்க ஏற்பாடு செய்வார். லைசென்ஸ் கிடைத்ததும் வேலையும் வாங்கிக் கொடுப்பார். மாதம் 350 ரூபாய் சம்பளம் கிடைக்கும்” என்று எழுதியிருந்தார்.
சின்ன அண்ணன் சொல்லி ரஜினி எதையும் தட்டியதில்லை. ஏனென்றால், ரஜினியின் ‘அடாவடி நண்பர்கள் குழு’வில் நாகேஷ்வர ராவும் உண்டு. கர்நாடகப் போக்குவரத்துக் கழகத்தில் நிதிக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த வெங்கோப ராவைச் சந்தித்து அவர் சொன்னபடி 30 நாட்கள் பெங்களூரு போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பயிற்சி முடித்து, அதற்கான சான்றிதழ் கிடைத்ததும் நடத்துநர் உரிமம் பெற்றார் ரஜினி.
அடுத்த மூன்று மாதங்களில் வேலையும் வாங்கிக் கொடுத்துவிட்டார் மாமனார். ரஜினியால் நம்ப முடியவில்லை. “அப்பா விரும்பியதுபோல் போலீஸ் அதிகாரி ஆகாவிட்டாலும் அரசு வேலை கிடைத்துவிட்டது. கைநிறையச் சம்பளம்... அன்றாடம் மக்களின் முகங்களைப் பார்த்துப் பழகும் வேலை என்பதில் ரஜினிக்கு நிலைகொள்ளாத மகிழ்ச்சி. ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை. முதல் மாதச் சம்பளமாக 350 ரூபாயை வாங்கிக்கொண்டு நேரே வீட்டுக்கு வந்தார் ரஜினி. அப்பாவின் கையில் சம்பளக் கவரைக் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினார். “சம்பளத்தைக் கொண்டுபோய் அண்ணன் - அண்ணியிடம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்” என்றார் அப்பா.
அப்போது முதல், சம்பளத்தில் ஒரு பைசாகூட எடுக்காமல் அப்படியே மொத்தமாக அண்ணனிடம் கொடுத்துவிடுவார் ரஜினி. அண்ணன் சம்பளப் பணத்திலிருந்து செலவுக்குக் கொடுத்தாலும் வாங்கமாட்டார். இதைப் பார்த்த அப்பா ரானோஜி, தனக்கு மாதா மாதம் பென்ஷன் பணமாக வரும் 30 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயை ரஜினிக்குக் கொடுத்துவிடுவார். அந்தப் பணத்துடன், வாரம் தோறும் போக்குவரத்துக் கழகத்தில் தனக்குக் கிடைக்கும் கலெக்ஷன் பேட்டாவையும் சேர்த்து மாதம் ஒரு புதிய உடை வாங்கி அணிந்து, ஸ்டைலாக வலம் வருவார் ரஜினி. ஒரு கட்டத்தில் பேருந்து நடத்துநருக்கான சீருடையை விட்டுவிட்டு ஸ்டைலான பேன்ட், சட்டைகளை அணியத் தொடங்கினார்.
தடம் பதித்த நடத்துநர்
ரஜினி நடத்துநராகப் பணிபுரிந்த முதல் வழித்தடம், பெங்களூரு மகாராணி பெண்கள் கல்லூரி அமைந்திருக்கும் சிவாஜி நகர் - சாம்ராஜ்பேட்டை பகுதிகளுக்கு இடையிலானது. 134-ம் எண் பேருந்தில்தான் முதல் பணி. காலையிலும் மாலையிலும் கல்லூரி மாணவ - மாணவிகள் அதிகமாகப் பயணிக்கும் வழித்தடம். அதில் ரஜினிதான் ஹீரோ. தலைநிறைய முடியை வளர்த்துக்கொண்டு, ஸ்டைலாக அடிக்கடி கோதிக்கொண்டு, ரஜினி டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் விதமும், டிக்கெட் போக மீதிச் சில்லறையைக் கொடுக்கும் வேகமும் பயணிகளைச் சுண்டியிழுக்கும். அதேபோல், பேருந்தின் படிக்கட்டுகளில் மின்னல் வேகத்தில் ஏறி, இறங்குவது, விசிலையோ, விரல்களையோ பயன்படுத்தாமல் வாயாலேயே விசில் கொடுப்பது என ரஜினியின் மேனரிஸங்களைப் பார்ப்பவர்கள் அவரைப் பேருந்து நடத்துநர் என்றே நம்பத் தயாராக இல்லை. அந்த அளவுக்கு பயணிகளுக்குப் பிடித்தமான நடத்துநராக இருந்தார். அன்றாடம் பார்க்கும் பயணிகளில் பலரைப் பேர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அவர்களோடு நெருக்கமானார் ரஜினி.
காப்பாற்ற ஓடிய ரஜினி
ஒருநாள் மதியம் 2 மணிக்குத் தனது ‘ஷிஃப்ட்’ முடிந்து சைக்கிளில் வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார் ரஜினி. ஒரு சிறிய பூங்காவை ஒட்டிய சாலையில் வந்துகொண்டிருந்தபோது, “ஐயோ... யாராவது ஓடி வாங்க... என்னைக் காப்பாத்துங்க...” என்ற இளம் பெண்ணின் அலறல் கேட்டது. சைக்கிளை அப்படியே போட்டுவிட்டு பூங்காவுக்குள் ஓடினார். ஆங்கே, ரஜினி கண்ட காட்சி அவரை அதிர வைத்துவிட்டது. அவர் நினைத்ததுபோலவே ஓர் இளம் பெண்ணை நடுத்தர வயதுடைய ஒரு நபர் கத்தியைக் காட்டி, மிரட்டியபடி நெருங்கினார். கொஞ்சமும் யோசிக்காத ரஜினி, ஒரே ஜம்பில் அந்த ஆளின் முன்னால் போய் நின்று, “ரவுடிப் பயலே... இப்பக் குத்துடா பார்க்கலாம்” என்றார். அவ்வளவுதான்! கத்தியைக் கீழே போட்ட அந்த ஆள்... தனது விரலை புல் வெளியை நோக்கிக் காட்டினார். ரஜினி ஒன்றும் புரியாமல் அங்கே தலையைத் திருப்பினார். அங்கே கையில் நோட்டுப் புத்தகத்துடன் ஒருவர் உட்கார்ந்திருப்பதையும்... அவரைச் சுற்றி மேலும் ஐந்தாறு பேர் உட்கார்ந்திருப்பதையும் பார்த்தார்.
ஆம்! அங்கே நடந்துகொண்டிருந்தது நாடக ஒத்திகை. அபயம் கேட்டு அலறிய பெண் இப்போது வாய்விட்டு கலகலவென்று சிரித்துக்
கொண்டிருந்தார். இப்போது ரஜினியின் தோள் மீது ஒரு கரம் படர்ந்தது...
(சரிதம் பேசும்)