வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் இடையிலான அரசியல் சமர் உச்சத்தை அடைந்திருக்கிறது.
உபி மருத்துவமனைகள் குறித்தும், முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ-வான சோம்நாத் பாரதி, ரே பரேலியில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். சோம்நாத் மீது மை ஊற்றி தனது எதிர்ப்பைத் தெரிவித்த இந்து யுவா வாஹினி அமைப்பைச் சேர்ந்த ஜிதேந்திர சிங்குக்கு பாஜக தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிகின்றன. பாஜகவில் சேரத் திட்டமிட்டிருக்கும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-வான ராகேஷ் சிங், 51 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசை அளித்து அவரைப் பாராட்டியிருக்கிறார்.
தான் விரைவில் பிணையில் வெளிவருவதைத் தாமதப்படுத்தும் வகையில், காவல் துறையினரின் நடவடிக்கை இருப்பதாக சோம்நாத் குற்றம்சாட்டியிருக்கிறார். சோம்நாத் மீதான தாக்குதல், கைது நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியினர், யோகி ஆதித்யநாத்தையும் உபி போலீஸாரையும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.