என்.பாரதி
readers@kamadenu.in
குமரி மாவட்டத்தைத் தமிழகத்தோடு இணைப்பதற்குப் பாடுபட்ட தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா. 89 வயதிலும் நடமாடும் தகவல் பெட்டகமாக வலம்வரும் இவர் பன்முகத்தன்மை கொண்டவர். பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த செல்லப்பாவாகத் தனது பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர், திருத்தமிழ் போராட்டத் தியாகி என உருவெடுத்த செல்லப்பா, சாதிய விடுதலைக்காக தன் வாழ்வின் பிற்பகுதியில் ஷேக் அப்துல்லாவாக மாறினார்.
குமரி மாவட்டத்தின் வரலாற்றை கொடிக்கால் ஷேக் அப்துல்லாவைப் புறக்கணித்துவிட்டு எழுதிவிட முடியாது எனும் அளவுக்கு முன்னோடியாக நம்மிடையே வாழ்ந்துவரும் அவரை ‘காமதேனு’ மின்னிதழுக்காகச் சந்தித்தேன்.
தமிழக அரசியல் நிலவரங்களைப் பற்றிப் பேச்சு தொடங்கியது. “திமுக, அதிமுக என இரு அணிகளுமே ரொம்பத் தீவிரமா களப்பணி செய்றாங்க. டிவியைப் போட்டாலே ‘வெற்றிநடை போடும் தமிழகமே’ன்னு ஒருபக்கம் அதிமுக விளம்பரம், இன்னொரு பக்கம் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’னு திமுக விளம்பரம்னு ரொம்பப் பரபரப்பா இருக்கு. கமல் ஒருபக்கம் மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கிறாரு. ஆனா, இதெல்லாம் இன்னும் நாலு மாசக் கூத்துதானே? அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்கும் போக்கில் இருந்து மாற்றம் தொடங்க வேண்டும்” என்று நிதானமாகப் பேச ஆரம்பித்தார் கொடிக்கால்.