கே.சோபியா
readers@kamadenu.in
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக முழு தோல்வியடைந்த மாவட்டங்களில் ஒன்று, தேனி. ஆனால், இம்முறை அதே நிலை தங்களுக்கு வந்துவிடுமோ என்று கலங்கி நிற்கிறார்கள் அதிமுகவினர்.
தேனி மாவட்டத்தில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாத அளவுக்கு அதிமுகவின் செல்வாக்கு உயரப் பறந்தது. ஜெயலலிதாவே போட்டியிட்டதுடன், ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளையாக இருந்த டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், தங்கதமிழ்ச்செல்வன் போன்றோர்களும் போட்டியிட்ட மாவட்டமல்லவா? ஆண்டிபட்டி மற்றும் போடி தொகுதியின் பல ஊர்களில் திமுகவுக்கு கிளைகளே இல்லாத சூழல் எல்லாம் இருந்தது. இப்போது அதெல்லாம் பழங்கதையாகிவிட்டது.
2016-ல் மாவட்டத்தில் உள்ள நான்கு (தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி)தொகுதிகளும் அதிமுக வசமிருந்தன. அதிமுகவில் இருந்து சசிகலா வகையறா ஓரங்கட்டப்பட்டபோது, தங்கதமிழ்ச்செல்வனும், கதிர்காமுவும் வெளியேறி, பின்னர் எம்எல்ஏ பதவியை இழந்தார்கள். இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகள் திமுக வசமாகின. மாவட்டத்தின் பிரதான முகமும், அமமுகவின் இரண்டாம் கட்டத் தலைவருமான தங்கதமிழ்ச்செல்வன் திமுகவுக்கு வந்ததும் நிலைமை இன்னும் மாறியது. ஆண்டிபட்டியிலும், போடியிலும் திமுக கிளைகள் பலம்பெற்றன. கடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஓபிஎஸ்ஸின் சொந்தத் தொகுதியான போடியிலேயே ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது.