கட்டக்காளை பொஞ்சாதி லச்சுமாயியெ, பெறந்த வீட்டுக்கு கூட்டியாந்திட்டாக… ஏழாம் மாசமின்றதினால மருந்துக்களி குடுக்க வந்த புருஷன் வீட்டாளுக, சடங்கு சம்பிரதாயத்த முடிச்சிட்டு ‘கலகல’ன்னு சந்தோசமாப் பேசிட்டுருக்காக.
கண்டதுகடிதெல்லாம் அள்ளியாந்து கொட்டுன சூறாவளிகெனக்கா… வாயிக்கி வரக்கூடாத வாத்தையெ வண்டிவண்டியா கொட்டிக்கிட்டே… வீட்டுக்குள்ள வந்துட்டா கச்சம்மா.
“மனுசமக்க வந்திருக்கிறப்ப இப்படியா கேவலப்படுத்துவெ…” பெருமாயி கோவமா அமட்டுனா. அதச்சட்டபண்ணாம “க்கூம்… வந்திருக்கிறது சொந்தபந்தமின்டா ? அப்பநாங்… யாரு” கச்சம்மா கண்டமேனிக்கு கத்துறா.
கச்சம்மா.., பின்னத்தேவனுக்கு மூத்த மக, மொதப்பிள்ளய ஊரேமெச்ச… கட்டிக் குடுக்கணுமின்டு நக நட்டு, சவுடி, சீருசெனத்தின்டு, சகலமும் போட்டுக் கல்யாணங் கட்டிக்கொடுத்தும் ஒண்ணும் வெளங்கல. அன்னும் மறுநாத்தே... வித்துத் தின்டுபுட்டாங்கா. பொட்டுத் தங்கங்கூட இல்லாம, மூழியாத் திரியிறா... புருஷன், ஊதாரித்தனம் பண்ணுறான்டு தெரிஞ்சும், தட்டிக்கொட்டி வைக்காம, வாலுருவி விட்டு, சொத்து சொகத்தயெல்லாம் சூறவிட்டுப்புட்டு சும்மா திரியுறா.
எப்பெல்லாம் கைக்கும் வாய்க்குமில்லாமப் போதோ… அப்பெல்லாம், எதாச்சும் சாக்குப் போக்கச் சொல்லி, கிறுக்குப் புடிச்சவ கெனக்கா, இப்படி ஆட்டம் போட்டுக்கு வருவா.
வெறுத்துபோன பின்னத்தேவன், இவ சாவகாசமே வேணாமின்டு பெறப்பா முறி எழுதி வாங்கி, ஒட்டுமில்ல ஒறவுமில்லன்னு ஒதுக்கி வச்சாளும், வேட்டியில சிக்குன இண்டமுள்ளு கெனக்கா, தொத்திக்கிட்டு விடமாட்டேன்டுறா.
"அனாதச் சிறுக்கி கெணக்கா… இங்கொருத்தி கத்திட்டு இருக்கேனே... ஒருத்தருக்கும் கேக்கலயா... அம்புட்டுப் பேரும் என்னா செகுடா?" வீரியம் கொறையாம வேகம் பன்றா கச்சம்மா.
அசிங்கப்படுத்துறாளேன்டு பின்னத்தேவனுக்கு கோபம் வந்தாலும், பெத்த புள்ளயாச்சேன்டு மனசத் தேத்திக்கிட்டு "பெருமாயி, அத… உள்ள கூட்டிக்குப் போயி சோத்தப் போடு... " பின்னத்தேவன் தாம் பொஞ்சாதி பெருமாயிகிட்ட சொல்ல…
பொத்துனாப்புல கச்சம்மா கிட்ட போன பெருமாயி, "வாத்தே... ஓ…நெனப்பாத்தாங் இருந்துச்சு. நீ… எங்க வராமப் போயிருவியோன்டு பாவிமனசு துடிச்சுப் போச்சுத்தே… நம்ம சாமி மலைராமந்தான், ஒன்னிய கொண்டு வந்து சேர்த்திருக்கு… வா… ஒரு வாயி சாப்புடுத்தே…”ன்டுக்கிட்டே பொதபொதன்டு கண்ணீர விட்டா பெருமாயி. “நீ எதுக்குத்தா அழுகிறவ... வான்டு கூப்பிடலயின்டாலும் ஏந்தங்கச்சிக்கு நல்லகாரியம் நடக்கறப்ப வராமயா போயிருவேன்…” ஆத்தா பெருமாயைத்தேத்துனா கச்சம்மா.
நெறமாத்தக்காரி லச்சுமாயி எந்திரிச்சு வந்து, கச்சம்மா கையப் புடிச்சு, “வாக்கா…” சாப்பிடக்கூப்பிட்டா.
அக்காளும் தங்கச்சியும் பேசிட்டுருக்கப்பவே, வட்டி நெறயாச் சோத்தப் போட்டுக்கு வந்த பெருமாயி கச்சம்மாள சாப்புடச்சொன்னா. மூஞ்சியத்தொடச்சிக்கிட்டே, எதுமே நடக்காதமாரி… சோத்த உருண்ட தெரட்டி லபக் லபக்குன்டு வாயில போட்டா கச்சம்மா.
“யேய்… மூத்தமருமகளே… வாடிவாசலப் பாக்காத ஜல்லிட்டுக்காள மாரி, செத்தநேரம் அலசிப்பிட்டியே...” கழுச்சியாத்தா சொல்ல, அதக்கேட்டு அங்கருந்த அம்புட்டுப்பேரும் ‘கெக்கெப்பிக்கெ’ன்டு சிரிக்க, செத்தநேரத்திலயே கலகலப்பு கூடிருச்சு.
"வந்த வேல முடிஞ்சுருச்சுல்ல... வாங்க கெளம்புவோம்..." திண்ணையில ஒக்காந்த கட்டக்காளை சொல்ல… ஒச்சுக்காளை வண்டியப் பூட்டித் தயாரானான். சம்பந்தக்காராளுகள, பின்னத்தேவன் வீட்டாளுக தெருமொன வரைக்கும் வந்து வழி அனுப்பி வச்சாக.
லச்சுமாயி மனசுதான்… ‘போ’ன்டும் சொல்லமாட்டாம ‘இரு’ன்டும் சொல்லமாட்டாம, தவிச்ச… தவிப்பு… அவ கண்ணுலயே தெரியுது. லச்சுமாயி ஏக்கமா பாத்தா பார்வை, கட்டக்காளை மனச என்னமோ செய்யுது.
வண்டி ஊருக்குத் திரும்பிருச்சு... கட்டக்காளை மனசு, வண்டிச் சக்கரங்கெனக்கா லச்சுமாயியெ நெனச்சு, சுத்திச் சுத்தி வருது…
உசுலம்பட்டி சந்தையில வாழக்கா வித்த, பணத்த, ஏவாரிகிட்ட வாங்கிட்டு வாரதுக்கு நேரமாயிப்போச்சு... “இப்பயே மசங்கிப் போச்சு… ஒச்சுக்காளை சொல்லிக்கிட்டே வண்டியப் பூட்டுனான்.
பணத்த வால்பையில வச்சு, இடுப்பில சுத்தி பத்தரமா கட்டிக்கிட்டு, இடுப்பு வாருள சொருகி வச்சிருந்த கத்திய, செவைக்க எடுத்து வச்சுக்கிட்ட கட்டக்காளை, வண்டியில ஏறி ஒக்கார, ரெண்டு மாட்டு முதுகுலயும் கைய வச்சு அமிக்கி “ஆய்க்… த்தே…”ன்டு நாக்க மடிச்சு கொரலுக்குடுத்திக்கிட்டே ஒச்சுக்காள வண்டிய கெளப்புனான். எப்ப எப்பன்டு காத்துக்கெடந்த காளைக ரெண்டும் சந்தப்பேட்டையில கழிச்சுக்கெடந்த வாழமட்டைய சதசதன்டு நசுக்கிக் கிட்டு கெளம்பிருச்சு. பழக்கப்பட்ட பாதன்றதனால மாடுரெண்டும் ‘கடகட’ன்டு அதுபாட்டுல போயிட்டுருக்கு.
பாதித்தூரம் போறதுக்குள்ள நல்லா இருட்டிப் போச்சு… ரோட்டுல ரெண்டு பக்கமும் ‘கீங்கீங்’ன்டு சீவண்டுச் சத்தம் கேக்கிது… ‘மினுக்…மினுக்’கின்டு மின்னிக்கிட்டு, மினுக்கிட்டாம் பூச்சிக வண்டிக்கு இங்கிட்டுங் அங்கிட்டும் பறந்து போகுதுக.
நடுப்பட்டியைக் கடந்து, எடையபட்டி வெலக்குல வண்டி திரும்பிருச்சு…மண்ணு ரோட்டுல, ‘சரசர’ன்டு சக்கரம் உருளுர சத்தமும், ‘கினிங்…கினிக்’ ன்டு மாட்டு மணிச்சத்தமும் கேக்குது.
மானத்துல நெறஞ்சிருந்த வெள்ளி வெளிச்சமும், மினுக்கிட்டாம் பூச்சி வெளிச்சமும் சேந்ததுனால இப்ப எளம் வெளிச்சமாருக்கு.
மரம் செடிகொடின்டு வண்டிப்பாதையில ரெண்டு பக்கமும் பொதறா அடச்சு நிக்கிது. பொதருக்குள்ள வெளிய வந்த, ஒரு உருவம் திடுதிடுன்டு வண்டிக்குப் பின்னாடி ஓடியாருது.
“ஆரோ ஆளு வாரதுமாரி இருக்குடா… ஒச்சு மாட்டத்தட்டி ஓட்டு” கட்டக்காளை சொல்ல, ஒச்சுக்காளை மாட்டோட அடிவகுத்த, பெருவெரலால சுண்டிவிட, மாடு இன்னும் வேகமா கெளம்பிருச்சு.
“யேய்யேய்ய்... மாப்ள.., வண்டிய நிப்பாட்டு... நாந்தேங் ஓம் மாமெங்” சத்தங்கேட்ட ஒச்சுக்காளை மாட்டுக் கயித்த லேசா இழுத்துப் புடிச்சு, வேகத்தக் கொறச்சுக்கிட்டே திரும்பிப் பாத்தான்... இருட்டுல உருவம் சரியாப் பொலப்படல...
கொரலுச் சத்தத்த கேட்ட கட்டக்காளை தெரிஞ்சாளு சத்தம்மாரி இருக்கேடா யேலே.... வண்டிய நிப்பாட்டு” ஒச்சுக்காளைகிட்ட கட்டக்காளை சொல்ல... மாட்டுக்கயித்த இழுத்துப் புடிச்சு நிப்பாட்டுனான் .
ஓடியந்தவென், வண்டிக்கிட்ட நெருங்க... "யார்ரா… கினிங்கிட்டி மாயானா..? ஏன்டா இப்படி உசுற வெறுத்துக்கிட்டு ஓடியாரா..? யாரொ…என்னமோன்டு நெனச்சுட்டோம்..." கினிங்கட்டிமாயன கட்டக்காள கேக்க, வந்தது கினிங்கட்டிமாயன்டு தெரிஞ்ச ஒச்சுக்காளை “இவனயெல்லாம் வண்டியில ஏத்தப்பிடாது” ன்டு சொல்லி, நிப்பாட்டுன வண்டிய, மறுபடியும் ஓட்டுனான்.
“யேலே ஒச்சு, அவன ஏத்திக்கிடா…” கட்டக்காளை சொல்ல, பேச்சத் தட்டமாட்டாம… புடிக்கயித்த லேசா இழுத்து பொத்துனாப்புல ஓட்டுனான். வண்டிக்கு பின்னாடி, தொங்கோட்டமா ஓடியாந்த கினிங்கட்டி மாயன், போல்மரத்தில தவ்வி வண்டியில ஏறமாட்டாம ஏறி ஒக்காந்தான்.
குப்புன்டு சாராய வாட... "யேய் குடிச்சிருக்கியா..? கட்டக்காள கேக்க, "இல்ல மாமு..." ன்டுக்கிட்டு, அங்கிட்டுத் திரும்பிக்கிட்டான். தானா மொனங்கிக்கிட்டே வந்த கினிங்கட்டிமாயன், செத்தநேரம் பேசாம இருந்தான். " யேம்மாமு... நாஞ்சொன்னா கோவிச்சுக்க மாட்டியே..."ன்னு லேசா பேச்சுக்குடுத்தான். கட்டக்காள ஒண்ணும் பேசல.
"ஏ...ம் மாமேய், நீயெ கெதின்டு கெடக்கானே ஒச்சுக்காளை... இவனுக்கு எந்த தோட்டத்த பங்கு பிரிச்சுத் தரப்போற..." மாசிப்பெட்டியன்னைக்கு கேட்ட அதே வாத்தய கினிங்கட்டி மாயன், இன்னைக்கும் கேட்டான்.
வண்டி மாட்ட ஓட்டிக்கிருந்த ஒச்சுக்காளை, மாட்டுப்புடி கயித்த அப்பிடியே விட்டுட்டு, படக்கின்டு எந்திரிச்ச, பின்னாடி ஒக்காந்திருந்த கட்டகாளையத் தாண்டிப்போயி கினிங்கட்டிமாயங்கிட்ட நின்டு மொறச்சான்.
"ஊரக்கெடுத்த நாயி... எங்ககிட்டயே ஓங் வேலய காட்டுறீயா... தொலச்சுப் புடுவேன். அன்னைக்கே ஒன்ன அடிச்சுக் கொல்லாம விட்டது, தப்பாப் போச்சு வண்டிய விட்டு கீழ எறாங்கு…" ஒச்சுக்காளை கத்துனான்.
"யே...ய்ய்ய் கீழ எறங்கு..." கினிங்கட்டி மாயன வண்டிய விட்டு எறங்கச் சொன்னான்.
"ஓங்… நல்லதுக்குத் தான மாப்ள சொன்னேன்... அதுக்குப் போயி எறங்கச் சொல்ற... இன்னஞ் செத்தநேரத்தில வீட்டுக்குப் போயிரலாம். ஓம்பாட்ல வண்டிய ஓட்டுமாப்ள." கினிங்கட்டிமாயன் சொல்ல, "நீ எறங்கப் போறியா இல்லியா ..?" ஒச்சுக்காளை கோவிக்க, "இந்தா... இன்னமேலுக்கு ஒண்ணும் பேசமாட்டேன்... இப்பிடிப் பொத்திக்கிறேன். போதுமா " மேத்துண்டச்சுருட்டி வாயில வச்சு, வக்கனயா பொத்திக் காமிச்சான்.
"யோவ்… குடிச்சுப்பிட்டு கோமாளித்தனமா பண்ற, குடிகாரப் பயலே… எறங்குய்யா... ஆளுங்… மூஞ்சியும் பாரு... வயசுல மூத்தாளுன்டும் பாக்கமாட்டேன்" கோபத்தில ஒச்சுக்காளை கொந்தளிச்சான்.
"குடிகாரன்டா ஒனக்கு எகத்தாளமாப் போச்சா... நீயே ஒரு அனாதிப்பய… என்னிய குடிகாரென்டுறியா..? கட்டக்காள மாமெங்க் இருக்காருன்ற தாட்டியத்தில பேசுறியா? இரு ஒன்ன வச்சுக்கிறேன்” கினிங்கட்டி மாயன் ஒச்சுக்காளை கோவத்த தூண்டுனான்.
‘அனாதிப்பய’ன்டு, கினிங்கட்டி மாயன் சொன்ன வாத்தை, ஒச்சுக்காளை மண்டயில சுர்ருன்டு ஏறிருச்சு…
கையில வச்சிருந்த சாட்டக் குச்சிய வச்சு ‘சடார் சடார்’ன்டு மாயன கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு வெளுத்துக்கிருக்கான்…
“ஆத்தே…ய்… அடிச்சுக் கொல்றானே… விடுறான்டு…” சொல்லிக்கிட்டே… கத்திக்கூப்பாடு போட்டான் கினிங்கட்டி மாயன். அவன் போட்ட சத்தம்... மரத்தில கூடுகட்டிப் படுத்திருந்த காக்கா குருவி எல்லாத்தையும் பதறடிச்சுக்கிட்டு பறக்க வச்சுப் புடிச்சு.
எதோ வில்லங்கமாகப் போகுதுன்டு சுதாரிச்சு எந்திரிச்ச கட்டக்காளை, ஒத்தக் கையில வண்டி மொளக்குச்சியயும், இன்னொத்தக் கையில கினிங்கட்டி மாயன அடிச்சிக்கிருந்த ஒச்சுக்காளைய இடுப்பச் சுத்தியும் இழுத்து, கெட்டியாப் புடிச்சிக்கிட்டான்.
கட்டக்காளையோட இரும்பு பிடியிலருந்து மிசுங்கமாட்டாத ஒச்சுக்காளை, “விடுண்ணே…”ன்னு திமிறினான்.
“பேசாம இர்றா… செத்துக்கித்துப் போவான்…” கட்டக்காளை சத்தம் போட, கினிங்கட்டிமாயன் மண்டமசுத்த கெட்டியாப் புடிச்சிருந்த ஒச்சுக்காளை, “இவெனயெல்லாம் ஊருக்குள்ளயே விட்டிருக்கப்பிடாதுன்டா…கேக்குறீங்களா? பாவம் பாத்துப்பாத்து… இப்ப நம்மளுக்குள்ளயே கம்பெடுத்துப் போட்டுதுமில்லாம என்ன எப்பிடிப் பேசிப்புட்டான்…” கோவமா கத்துன ஒச்சுக்காளை, கினிங்கட்டி மாயன ஒரே எத்து, ஓங்கி எத்துனான்… “யாத்…தே…”ன்டு வண்டியிலருந்து கீழ விழுந்த சத்தங்கேக்க… வண்டி மாடு ரெண்டும்… சிட்டாப் பறந்திருச்சு.
இம்பிட்டு கோவங்கோவிக்கிற ஒச்சுக்காளைய, இன்னைக்குத்தான் கட்டகாளை,நேரில பாத்தான். ‘ஆளில்லாத நேரத்தில சிக்கிருந்தா… கினிங்கட்டிமாயஞ் சோலிய முடிச்சிருப்பான் போலருக்கே…’ ன்டு நெனச்ச கட்டக்காளைக்கு…. ஓடுற வண்டியிலருந்து கீழ விழுந்த கினிங்கட்டிமாயன் செத்துக்கித்துப் போயிருந்தான்டா…ன்னு நெனச்சுப் பாத்தான். அவனுக்கு மனசுக்குள்ள பக்கின்டுருந்துச்சு.
(தொடரும்)