குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in
“திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றவர்களையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” - துக்ளக் ஆண்டு விழாவில் அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சாட்சிக்கு வைத்துக் கொண்டு அதிமுகவுக்கு சொன்ன இந்த யோசனை தமிழக அரசியல் திகில் திருப்புமுனைகளுக்கு தயாராகி விட்டதை திட்டவட்டமாகச் சொல்கிறது.
சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் ஐக்கியப்படுத்த பாஜக எடுத்து வரும் முயற்சிகள் குறித்து காமதேனு இதழில் தொடர்ந்து நாம் சொல்லி வருகிறோம். இப்போது அந்த முயற்சிகளின் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது பாஜக. அதற்கான அறிகுறிதான் ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு. இத்தனைக்கும், “சசிகலாவை மீண்டும் அதிமுகவுக்குள் விடவே கூடாது” என சங்கநாதம் எழுப்பிக் கொண்டிருந்தவர் குருமூர்த்தி. அப்படிப்பட்டவர் திடீரென சசிகலாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருப்பது தமிழக அரசியலை பரப்பாக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, அமமுகவினர் இந்த சமிக்ஞையால் உற்சாகத் துள்ளலில் இருக்கிறார்கள்.
“வீடு தீப்பற்றி எரியும்போது கங்கை நீருக்காகக் காத்திருக்கக் கூடாது. சாக்கடைத் தண்ணீராக இருந்தாலும் எடுத்து ஊற்ற வேண்டும் என பத்திரிகையாளர் அருண் ஷோரி சொல்லி இருக்கிறார். ஆகவே, திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் சசிகலா போன்றவர்களையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்” - துக்ளக் விழாவில் குருமூர்த்தி இப்படிப் பேசியது வியாழக்கிழமை. அதற்கு முன்பாக சனிக்கிழமையே டெல்லியிலிருந்து வந்திருந்த ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர் ஒருவர் குருமூர்த்தியைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.