கதறவிடும் கதர் அமைச்சரின் மகன்!
கதர்கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரனின் இரண்டாவது மகன் பாலமுருகன். அமைச்சருக்குப் பயப்படுகிறார்களோ இல்லையோ இந்த பாலாவைக் கண்டால் சிவகங்கை மாவட்ட அதிகாரிகள் பயந்து ஓடுகிறார்களாம். பொழுது விடிந்து போழுது போனால் ஏதாவது ஒரு அதிகாரியின் முன்னால் போய் உட்கார்ந்து கொண்டு, “அந்த காண்ராக்ட் என்ன ஆச்சு, இந்த பில் என்ன ஆச்சு? யாரைக் கேட்டு இவருக்கு பில் பாஸ் பண்ணுனீங்க?” என்று நமத்து எடுக்கிறாராம் பாலா. இதற்கெல்லாம் காரணம், முந்தைய ஆட்சியர் ஜெயகாந்தன் கொடுத்த இடம்தான் என்கிறார்கள். அமைச்சர் மகன் எது சொன்னாலும் தலையாட்டுவாராம் ஜெயகாந்தன். அண்மையில் அவர் மாறுதலாகிச் சென்ற பிறகும் பாலாவின் பந்தா ஓயவில்லையாம். புதிய மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டியிடமும் தனது வேலையைக் காட்டி இருக்கிறார். ஆனால், அதற்கு இடம் கொடுக்காத ரெட்டி, “உங்கள மட்டுமே பார்த்துட்டு இருந்தா போதுமா... எங்களுக்கு வேற வேலையே இல்லையா? தயவுசெய்து கிளம்புங்கள்” என்று முகத்தைச் சுண்டி அனுப்பிவிட்டாராம்.
சி.விஜயபாஸ்கர் நடத்திய சீர் மேளா!
தமிழக அரசு வழங்கிய 2,500 ரூபாய் பொங்கல் பரிசுத் திட்டத்தை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டது அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது விராலிமலை தொகுதி மக்களுக்கு வழங்கிய பொங்கல் பானை சீர் திட்டம். பொங்கல் வைப்பதற்கான பித்தளை உருளி (பானை), அதற்கான எவர் சில்வர் மூடி, கரண்டி, அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை என அனைத்தையும் கொடுத்து அசரடித்திருக்கிறார் அமைச்சர். இத்தனை பொருட்களும் ‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு பொங்கல் சீர்’ என்று பிரத்யேகமாக அச்சிடப்பட்ட பையில் போடப்பட்டு வீடு வீடாய் கொண்டு சேர்க்கப் பட்டிருக்கிறது. மொத்தம் 1.25 லட்சம் குடும்பங்களுக்கு அமைச்சர் வீட்டு சீர்வரிசை சிக்கலின்றி போய்ச் சேர்ந்திருக்கிறது. கடந்த தேர்தலிலேயே திமுக வேட்பாளர் பழனியப்பனிடம் நூலிழையில் தப்பிய விஜயபாஸ்கருக்கு இம்முறை மீண்டும் அந்த வாய்ப்பும் கிடைப்பது சிரமம் தான் என அவருக்காக பிரத்யேக சர்வே எடுத்த டீம் கணிப்புக் கொடுத்ததாம். இதையடுத்தே இப்போது கோடிகளைக் கரைத்து ‘கவனிப்பு’ மேளாவைத் நடத்தி இருக்கிறார் அமைச்சர். தேர்தல் நெருங்க நெருங்க ‘கவனிப்பு’ வைபவம் இன்னும் களைகட்டும் என்கிறார்கள் விஜயபாஸ்கரின் வியூக வித்தைகளை அறிந்தவர்கள்.