பறவைக் காய்ச்சலால் எழும் பதற்றத்தைத் தணிப்போம்!

By காமதேனு

உருமாறிய கரோனா வைரஸ் அபாயத்துக்கு நடுவே, இன்னொரு பதற்றத்தைக் கிளப்பியிருக்கிறது பறவைக் காய்ச்சல். இமாசல பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, கேரளத்திலும் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. இது தமிழகத்துக்கும் பரவக்கூடும் என்பதுதான் இந்தப் பதற்றத்தின் பின்னணி.

‘இன்ஃப்ளூயென்ஸா ஏ’ வகை வைரஸால், பறவைக் காய்ச்சல் ஏற்படுகிறது. இமாசல பிரதேசத்தின் போங் டேம் ஏரிப் பகுதியில் வலசை வந்த 1,800 பறவைகள் பறவைக் காய்ச்சலில் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பிற மாநிலங்களுக்கும் வைரஸ் தொற்று பரவிவிட்டது. பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு இந்தக் காய்ச்சல் அதிவேகத்தில் பரவும்; பறவைகளிலிருந்து கால்நடைகளுக்கும் இது பரவும்.

பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு மிக மிக அரிதுதான். அதேபோல், ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் சாத்தியக்கூறுகளும் மிகக் குறைவு என்று மருத்துவர்கள் விளக்கியிருக்கிறார்கள். அதேசமயம், வைரஸ்கள் உருமாற்றம் அடையும் தன்மையைப் பெற்றுவிட்டால், மனிதர்களுக்கு இடையிலும் பரவும் வாய்ப்பு இருக்கிறது என்றே எச்சரிக்கப்படுகிறது.

பறவைக் காய்ச்சல் பரவலைக் கேரள அரசு ஒரு பேரிடராகவே அறிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசும் எல்லையில் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தொடங்கியிருக்கிறது. என்றாலும், இதுதொடர்பான நடைமுறைகளில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். கோழிப் பண்ணைகள், முட்டைப் பண்ணைகள், பால் பண்ணைகள் ஆகியவற்றைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கும் நடவடிக்கைகள் அவசியம். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தமிழக அரசு இதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE