விரதம் இருந்து... இருமுடிகட்டி... குமரியிலும் ஒரு சபரிமலை!

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

மண்டல காலம் விரதம் இருந்து சபரிமலை யாத்திரை சென்று திரும்புவது ஆன்மிகத்தையும் கடந்த ஆனந்த அனுபவம். மாலை தரித்த நிமிடத்திலேயே நேற்றுவரை சாமானியனாக இருந்தவரும் ‘சாமி’ ஆகிப்போகிறார். தினசரி இரண்டு நேரக் குளியல், உள்ளூர்க் கோயில்களில் ஆலய தரிசனம் என சபரிமலைக் காலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியூட்டக் கூடியது. பம்பையில் நீராடி மலையேறி பதினெட்டு படிகளின் ஊடே இருமுடி சுமந்து சென்று ஐயப்பனைத் தரிசிக்கும் நொடி பரவசத்தின் உச்சம்!

இந்த ஆண்டு கரோனா தாக்கத்தின் தீவிரத்தால் சபரிமலை ஆன்மிகப் பயணத்துக்கும் கடும் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. வழக்கமாக மாலை போட்டு சபரிமலை செல்லும் பக்தர்கள் பலரும் யாத்திரை செல்லும் வழியில் கரோனா தொற்று ஏற்படலாம் எனும் அச்சத்தில் இந்த ஆண்டு மாலை போடவில்லை. தினசரி குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்குத்தான் அனுமதி, கரோனா சோதனைக்குப் பின்னரே தரிசனம் என்பன போன்ற கெடுபிடிகளால் சபரிமலை யாத்திரை இந்த ஆண்டு பலருக்கும் எட்டாக்கனியாகி இருக்கிறது.

இப்படியான சூழலில், குமரி மாவட்டத்தில் உள்ள ஐயன்மலை குபேர ஐயப்பசாமி கோயிலுக்கு இருமுடிகட்டி வந்து தரிசனம் செய்கின்றனர் பக்தர்கள். இந்தக் கோயிலை ‘குமரியின் சபரிமலை’ என்றே ஐயப்ப பக்தர்கள் கொண்டாடுகின்றனர். காரணம், இந்த ஐயப்பனும் மலைமேல் இருக்கிறார். மலையின் மேல் ஏறிச்செல்லும் வழியெங்கும் ஐயப்பனின் வாழ்வைச் சித்தரிக்கும் சிற்பங்கள் அணிவகுக்கின்றன. பதினெட்டுப் படிகள் ஏறித்தான் இங்கும் மூலவர் ஐயப்பனைத் தரிசிக்க முடியும். இதனாலேயே இந்தக் கரோனா காலத்தில் குமரி சுற்றுவட்டார பக்தர்கள் இருமுடிகட்டி, விரதம் இருந்து ஐயன்மலை குபேர ஐயப்பசாமி கோயிலுக்கு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE