இனி எல்லாமே ஏ.ஐ - 3: கணினி ஆசான் கமிங்!

By சைபர்சிம்மன்

“மாணவர்கள் கணக்குப் பாடத்தைப் பயிலும்போது, கணக்குகளுக்கு விடை காண ஒரு வழியைக் கற்றுக்கொண்டால் போதும். ஆனால், கற்பிக்கும் அமைப்புகள் அப்படி இல்லை. ஒரு கணக்குக்குத் தீர்வு காண்பதற்கான எல்லா வழிகளையும் அவை கற்றிருக்க வேண்டும்” என்கிறார் டேவிட் வெயிட்கேம்ப். கூடவே, “கணக்குகளுக்குத் தீர்வு காணும் வழியை அறிந்திருந்தால் மட்டும் போதாது, அவற்றைக் கற்பிக்கவும் அவை அறிந்திருக்க வேண்டும்” என்றும் அவர் சொல்கிறார்.

சரி, யார் இந்த வெயிட்கேம்ப்? அவர் சொல்லும் கற்பிக்கும் அமைப்புகள் எவை?

வெயிட்கேம்ப் ஓர் ஆய்வு மாணவர். ‘ஹியூமன் கம்ப்யூட்டர் இன்ட்ராக் ஷன்’ எனப்படும், மனித - கணினி உறவு தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருப்பவர். அவர் குறிப்பிடும், கற்றல் அமைப்பு என்பது, மாணவர்களுக்குப் பாடம் நடத்த உருவாக்கப்படும் கணினிகளைக் குறிக்கிறது. ஏ.ஐ மொழியில் டிஜிட்டல் ஆசான்கள் எனப் புரிந்துகொள்ளலாம். அதனால்தான், கற்றல் அமைப்புகள் கணக்குகளுக்குத் தீர்வு காணும் வழிகளைக் கற்றுத்தரவும் அறிந்திருக்க வேண்டும் என்கிறார் அவர்.

இந்த டிஜிட்டல் ஆசான்கள் பாடம் எடுத்தால் எப்படி இருக்கும், என்ன இருந்தாலும் ஆசிரியர்கள் கற்பிப்பதுபோல வருமா, பாடம் நடத்துவதை எப்படி இயந்திரங்களிடம் ஒப்படைக்க முடியும் என்பன போன்ற கேள்விகள் நமக்கு எழலாம். இந்தக் கேள்விகளுக்குப் பதில் காண, கென் கோடிங்கர் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். வெயிட்கேம்ப் ஆய்வு செய்துவரும், மனித-கணினி உறவுத் துறையில் வழிகாட்டியாக இருக்கும் பேராசிரியர் இவர். பாடம் நடத்துவதற்கான புத்திசாலி பயிற்சியாளர்களை (intelligent tutors) உருவாக்குவதில் கோடிங்கர் ஈடுபட்டிருக்கிறார். இந்த இயந்திர பயிற்சியாளர்களைத்தான் கற்பிக்கும் அமைப்புகள் என்கிறார் வெயிட்கேம்ப். அதாவது, மாணவர்களுக்குப் பாடம் நடத்த உருவாக்கப்பட்ட ஏ.ஐ திறன் கொண்ட மென்பொருட்கள்!

நனவாகப் போகும் கற்பனை

அல்ஜீப்ரா, ஆங்கில இலக்கணம் போன்ற பாடங்களை மாணவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் சொல்லித்தருவதில் இந்த மென்பொருட்கள் திறன் பெற்றிருப்பதாகச் சொல்கின்றனர். பாடம் நடத்தும் மென்பொருட்களை ஆசிரியர்களே உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் சொல்கின்றனர். அதாவது, ஆசிரியர்கள் பாடத் திட்டங்களைத் தயார் செய்வது போல, தங்கள் வகுப்புகளுக்கான கற்பிக்கும் மென்பொருட்களையும் எளிதாக உருவாக்குவது சாத்தியமாகலாம்.

இது அதீத கற்பனையாகத் தெரியலாம். ஆனால், எதிர்காலச் சாத்தியம் கொண்டது. கற்றலும் கற்பித்தலும், இனி கரும்பலகை சார்ந்தவை மட்டும் அல்ல; கணினிகளும், அறிவார்ந்த மென்பொருள் அமைப்புகளும் சார்ந்தது என்பதை உணர்த்தும் கற்பனை இது.
ஆம், வருங்காலத்தில் மெல்ல, இயந்திர ஆசான்கள் வகுப்பறைகளில் இடம்பெறத் தொடங்கும். அதேசமயம், கல்வித் துறையில் ஏ.ஐ மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவரும் எனச் சொல்லப்படுவதன் அடிப்படை, ஆசிரியர் பின்னுக்குத்தள்ளப்படுவார் என்பதல்ல; வகுப்பறையில் ஆசிரியர் எப்போதும் போலவே முக்கியமானவராக இருப்பார். ஆனால், அவருக்குத் துணையாக ஏ.ஐ மென்பொருட்களும் இருக்கும். கரும்பலகை போல, பாடப் புத்தகங்கள் போல, ஏ.ஐ சாதனங்களும் ஆசிரியர்கள் கற்பிக்கப் பயன்படுத்தும் ஒரு கருவியாக இருக்கும்.

பிரத்யேகக் கவனம்

அதாவது ஆசிரியர்களின் சுமையை குறைத்து, கற்பித்தலில் அதிக கவனம் செலுத்த ஏ.ஐ உதவும். அதைவிட முக்கியமாக ஒவ்வொரு மாணவரின் தன்மை அறிந்து, அவர்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தவும் வழி செய்யும். ஏ.ஐ ஆசான்களின் தனித்தன்மை இதுதான்.

பொதுவாகவே, ஒரு வகுப்பறையில் இருக்கும் எல்லா மாணவர்களுக்கும் மொத்தமாகத்தான் பாடம் நடத்த வேண்டியிருக்கிறது. ஆனால், இது சிறந்த வழியில்லை என்கின்றனர். ஏனெனில், ஒவ்வொரு மாணவரின் கற்றல் திறன் வேறுபடும். ஆசிரியர்களும், மாணவர்களின் இந்தத் தன்மைகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப சொல்லித்தர வேண்டும். ஆனால், இன்றைக்கு அதெல்லாம் சாத்தியமா?

இந்த இடத்தில்தான் ஏ.ஐ உருவாக்கும் டிஜிட்டல் ஆசான்கள் வருகின்றனர். கற்பித்தலுக்கான ஏ.ஐ அமைப்புகளை உருவாக்கலாம் என்பதால், இவற்றைக் கொண்டு ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்ற வகையில் பாடம் நடத்த வைக்கலாம். இந்த டிஜிட்டல் ஆசான்கள் களைப்படையாமல் சொல்லித்தரும் என்பது மட்டும் அல்ல, மாணவர்களின் கற்கும் திறனை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப பாடங்களையும் முன்வைக்கும்.

‘ஐடாக்டுலேர்ன்’ (iTalk2Learn) எனும் மென்பொருள் அமைப்பை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஐரோப்பாவில் தொடக்கக் கல்விக்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு இது. இயந்திரக் கற்றல் (மெஷின் லேர்னிங்) அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, கணிதப் பாடத்தில் முக்கிய அடிப்படை அம்சமான பின்னங்களை (fractions ) மாணவர்களுக்குக் கற்றுத்தரும் வகையில் அமைந்துள்ளது. இதேபோல அமெரிக்காவின் ‘தேர்டுஸ்பேஸ் லேர்னிங்’ (Thirdspace Learning), இணையத்தில் கணிதப் பாடம் சொல்லித்தருகிறது. மாணவர்களின் முன்னேற்றத்தை அறிந்து அதற்கேற்பச் செயல்படும் ஏ.ஐ. திறனும் பெற்றிருக்கிறது. புதிய மொழிகளை இணையம் மூலம் கற்றுக்கொள்ள உதவும் டுவாலிங்கோ (Duolingo) அரட்டை மென்பொருளையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். ‘திங்ஸ்டர் மேத்’ (Thinkster Math) மென்பொருள், ஏ.ஐ மற்றும் இயந்திர கற்றல் திறன்களுடன் ஆசிரியர்கள், மாணவர்களின் கணித பாட முன்னேற்றத்தை அறிந்து செயல்பட உதவுகிறது.

“இவற்றைப் பெரிய நிறுவனங்கள்தான் உருவாக்க வேண்டும் என்றில்லை, ஆசிரியர்களே, தங்களுக்கான டிஜிட்டல் ஆசான் உதவியாளர்களை உருவாக்கிக்கொள்ளலாம் என்பதுதான் இதன் தனிச்சிறப்பு” என்கிறார் கோடிங்கர்.

தொடங்கிவைத்த சிட்னி!

வகுப்பறையில் ஏ.ஐ நுட்பத்தின் இடத்தையும், தேவையையும் புரிந்துகொள்ள, ‘டீச்சிங் மெஷின்’ எனப்படும் பழைய இயந்திரம் ஒன்றைப் பற்றி அறிந்துகொள்வது பலன் தரும்.

அமெரிக்காவின் சிட்னி எல்.பிரஸி (Sidney L. Pressey) எனும் கல்வியாளர், 1920-களில் இந்த இயந்திரத்தை உருவாக்கினார். அடிப்படையில் இந்த இயந்திரம் மிகவும் எளிமையானது. டைப்ரைட்டர் போன்ற இந்தச் சாதனத்தைக் கொண்டு, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் வழிகளை உருவாக்கிக்கொள்ளலாம். பல பதில்கள் கொண்ட கேள்வி பதில் பாணியிலான இந்தக் குறிப்புகளைக் கொண்டு, மாணவர்கள் தாங்களாகவே பயிற்சி பெறவும் வழி செய்யலாம். பாடம் நடத்துவதைத் தானியங்கிச் செயலாக்கும் இந்த இயந்திரம், ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கும் என கருதப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மற்ற கல்வியாளர்களும் பல்வேறு வகையான கற்பிக்கும் இயந்திரங்களை உருவாக்கியுள்ளனர். கணினியின் வளர்ச்சி இதை மேலும் சீராக்கியது. இதன் தொடர்ச்சியாகவே ஏ.ஐ ஆசான்கள் அமைகின்றனர்!

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE