கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
`தென்னை மரத்துல தேள் கொட்டுனா, பனை மரத்துக்கு நெறி கட்டுச்சாம்’ என்றொரு பழமொழி சொல்வார்களே... அது அழகிரி ஆதரவாளர்களுக்கு ரொம்பவே பொருந்தும் போல. அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று ரஜினி சொன்னது, அவரது ரசிகர்களைக் காட்டிலும் அழகிரி ஆதவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
திமுகவில் இருந்து விலக்கப்பட்டு, நீண்டகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் மு.க.அழகிரி இந்த சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி சில அரசியல் நகர்வுகளை முன்னெடுத்தார். அதன் ஒருபகுதியாக, “ஜனவரி 3-ம் தேதி வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப் போகிறேன்” என்று அறிவித்தார். மதுரை பாண்டிகோயில் அருகே உள்ள துவாரகா பேலஸ் எனும் பிரம்மாண்டமான கல்யாண மண்டபமும் இதற்கென பதிவு செய்யப்பட்டிருந்தது. திண்ணையில் படுத்திருந்தவனுக்குத் திடீரென கல்யாணம் என்பதுபோல, இந்த அறிவிப்பு மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.
கடந்த 3 ஆண்டுகளாக மதுரையில் மு.க.அழகிரி பிறந்த நாள் விழா (ஜனவரி 30), வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்படவில்லை. தானே பங்கேற்று கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் வழக்கத்தையும் அழகிரி கைவிட்டிருந்தார். எனவே, அவரது பிறந்த நாளுக்கென ஒட்டப்படும் போஸ்டர்கள், ஃபிளக்ஸ் பேனர்கள், சுவர் விளம்பரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டிருந்தன. இந்த ஆலோசனைக் கூட்ட அறிவிப்பு காரணமாக, அண்ணன் ஏதோ பெரிய முடிவெடுக்கப் போகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தார்கள். ஒரு மாதத்துக்கு முன்பே மதுரையில் பிறந்த நாள் வாழ்த்து விளம்பரங்களை எழுதத் தொடங்கினார்கள். கூடவே, அழகிரியின் ஆலோசனை கூட்டத்தை வாழ்த்தி விதவிதமாக போஸ்டர் அடித்து ஒட்டினார்கள்.