பார்கள் திறப்பு: வருத்தம் தரும் நடவடிக்கை

By காமதேனு

புத்தாண்டின் தொடக்கமாக, மூடிக்கிடந்த டாஸ்மாக் பார்கள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன. கரோனா அச்சுறுத்தலிலிருந்து இன்னமும் நாம் விடுபடாத நிலையில், அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை சோர்வையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

பெருந்தொற்று பரவலும், பொதுமுடக்கமும் மக்களின் அன்றாட வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டுவிட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே, கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவருகின்றனர். இப்படியான சூழலில், 9 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் பார்களை  மீண்டும் திறந்திருக்கிறது அரசு. மே மாதம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோதே கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஏற்கெனவே வேலையிழப்பு, சம்பளம் குறைக்கப்பட்ட நிலை, தொழிலில் நஷ்டம் என பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்கள் மேலும் பிரச்சினைகளைச் சந்திக்கும் எனும் கவலைதான் இந்த விமர்சனங்களுக்குக் காரணம்.

இவற்றைக் கருத்தில் கொள்ளாமல், மது அருந்துவோருக்கு ஊக்கமளிக்கும் விதமாக பார்களையும் அரசு திறந்திருப்பதன் நியாயம் என்ன எனப் புரியவில்லை. பார்களுக்கு வருபவர்களுக்குப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அவையெல்லாம் முறையாகப் பின்பற்றப்படும் என்பதற்கு பார்களின் சூழ்நிலை நிச்சயம் உத்தரவாதம் தராது. உணவகங்களுக்குச் செல்வோருக்கும் பார்களுக்குச் சென்று திரும்புவோருக்கும் இடையில் இருக்கும் முக்கிய வித்தியாசம் நாம் அறியாததல்ல. அதுமட்டுமல்ல, பார்கள் மூலம் கரோனா பரவல் பல மடங்கு அதிகரித்ததற்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் நடந்த சம்பவங்களும் உதாரணம்.

வருவாய் அளிக்கும் பிரதான மூலமாக இருக்கும் டாஸ்மாக்கின் செயல்பாடுகள் அரசுக்கு வேண்டுமானால் முக்கியமானதாக இருக்கலாம். ஆனால், மதுப் பழக்கத்தின் பாதிப்பால் நிலைகுலைந்திருக்கும் குடும்பங்களுக்கு இது பெரும் கவலையூட்டும் விஷயம் என்பதை மறந்துவிடக் கூடாது. இதுபோன்ற முடிவுகளை எடுக்கும்போது பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்கும் அரசு கொஞ்சம் மதிப்பளிக்க வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE