செய்யாறு எங்களுக்கே - குரல் எழுப்பும் திமுக!
செய்யாறு தொகுதியை, கடந்த மூன்று தேர்தல்களாக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி வருகிறது திமுக. மூன்று முறையும் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணு பிரசாத் போட்டியிட்டார். இதில் 2006-ல் மட்டுமே அவர் வெற்றிபெற்றார். இப்போது இந்தத் தொகுதி ஆளும்கட்சி வசம். கடந்த முறை இந்தத் தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கியபோதே, பிரச்சினை வெடித்தது. உள்நோக்கத்துடன் இந்தத் தொகுதியை காங்கிரஸ் பக்கம் தள்ளிவிட்டதாக மாவட்டச் செயலர் எ.வ.வேலுவுக்கு எதிராக, திமுகவுக்குள்ளேயே ஒரு கோஷ்டி போர்க்கொடி தூக்கியது. இந்த நிலையில், இப்போதும் செய்யாறு தொகுதியை தங்களுக்கு எதிர்பார்க்கிறது காங்கிரஸ். ஆனால், “இம்முறை இங்கே திமுகதான் போட்டியிட வேண்டும்” என இப்போதே உரிமைக்குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. தங்களின் இந்த விருப்பத்தை, கடந்த 29-ம் தேதி நடந்த காணொலி கூட்டத்தில் ஸ்டாலினிடமே நேரடியாக தெரிவித்த மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பார்வதி, “இம்முறை செய்யாறில் உதயசூரியன் தான் உதிக்க வேண்டும் என திமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள்” எனச் சொன்னார். இதற்கு எ.வ.வேலு என்ன சொல்கிறாரோ?
வேலுமணி அலம்பல் - வைத்திலிங்கம் புலம்பல்!
டெல்டா மண்டல அதிமுகவுக்கு, தான் தான் முக்கிய பிரதிநிதி என, இதுவரை நினைத்துக் கொண்டிருந்தார் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம். டெல்டா மாவட்டங்களில் இவரின் ஆலோசனைகளைக் கேட்டே கட்சி தலைமையும் முக்கிய முடிவுகளை எடுத்தது. ஆனால், அதெல்லாம் இப்போது பழங்கதையாகிவிட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் ஆளுமை டெல்டா வரைக்கும் பரவிவிட்டதாம். இதனால், வேலுமணியின் ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொண்டு வைத்திக்கே சிலர் குடைச்சல் வைத்தியம் கொடுக்கிறார்களாம். இதனால் கடுப்பாகிப் போயிருக்கும் வைத்திலிங்கம், அண்மையில் எடப்பாடியாரைச் சந்தித்தபோது, “இப்படியே போனால் நாளைக்கு கட்சிக்குள் யாருமே என்னை மதிக்க மாட்டார்கள். அவரைக் கொஞ்சம் அடக்கிவாசிக்கச் சொல்லுங்கள்” என்று சொல்லி, வேலுமணிக்கு எதிராக சில குற்றசாட்டுகளையும் அடுக்கினாராம். அனைத்தையும் கேட்டுக்கொண்ட எடப்பாடியார், பெரிய அளவில் ரியாக்ஷன் ஏதும் காட்டாமலேயே அடுத்த விஷயத்துக்குக் கடந்துவிட்டாராம். இதனால் ஏகத்துக்கும் அப்செட்டில் இருக்கும் வைத்தி, வாய்ப்பு அமைந்தால் முகாம் மாறினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் தஞ்சை பகுதி அதிமுகவினர்.