முகமது ஹுசைன்
mohamed.hushain@hindutamil.co.in
கரோனாவுடன் நாம் வாழத் தொடங்கி ஓராண்டு நெருங்கப் போகிறது. கரோனா வைரஸின் வீரியத்தையும் ஆபத்தையும் நாம் உணர்வதற்குள் உலகையே அது தன் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. தற்காப்பு நடவடிக்கைகள்தான் தொற்றிலிருந்து காப்பாற்றும் என்பதை உலகம் அனுபவபூர்வமாக உணர்ந்துகொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் கடந்து, கரோனாவின் கோரப் பிடியிலிருந்து முழுவதுமாக நாம் வெளிவர முக்கியமான ஒரே வழி - தடுப்பூசிதான். அதை உருவாக்குவதில் என்னென்ன கட்டங்களைக் கடந்திருக்கிறோம் என்று பார்ப்போம்!
தடுப்பூசி முயற்சிகள்
தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, அது பயன்பாட்டு நிலையை அடைவதற்குப் பல ஆண்டுகள் ஆராய்ச்சியும் சோதனையும் தேவை. எனினும், கரோனாவால் ஏற்பட்டிருக்கும் அசாத்திய நிலையைக் கருத்தில்கொண்டு, உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் அதற்கான பணியில் துரித கதியில் இறங்கியிருக்கிறார்கள்.