இனி எல்லாமே ஏ.ஐ - 2: டிஜிட்டல் ஆசான்கள்

By சைபர்சிம்மன்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) நிகழ்த்திவரும் பாய்ச்சல்களைப் புரிந்துகொள்ள, ஒவ்வொரு துறையிலும் இந்தத் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வது உதவியாக இருக்கும். இந்தப் பயணத்தைக் கல்வித் துறையிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும். ஏனெனில் ஏ.ஐ வகுப்பறையில் நுழையத் தொடங்கியிருப்பதோடு, பாடப் புத்தகங்கள் மூலமும் மாணவர்களைச் சென்றடையத் தொடங்கியிருக்கிறது.

ஆம், செயற்கை நுண்ணறிவு, பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு இது தொடர்பான பாடமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, பொறியியல் பட்டதாரிகளும், மென்பொருள் வல்லுநர்களும், வேலைவாய்ப்புக்காக ஏ.ஐ சிறப்புப் பயிற்சியை நாடுவது வழக்கமாக இருந்தது. இன்றைக்கோ பள்ளி மாணவர்களே ஏ.ஐ அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளும் நிலை வந்திருக்கிறது.

ஆசிரியர்களின் இடத்தில் ஏ.ஐ

வகுப்பறை என்பது இன்றுவரை ஆசிரியர்களின் கோட்டையாக இருக்கிறது. ஏ.ஐ அதை மெல்லத் தகர்க்கத் தொடங்கியிருக்கிறது. ஏ.ஐ ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் ஆசிரியர்களே இல்லாமல் போவார்கள் என்றுகூட சொல்லப்படுகிறது.

சரி, கல்வித் துறையில், ஏ.ஐ அப்படி என்ன செய்துகொண்டிருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில், கல்வித் துறையையே ஏ.ஐ மாற்றி அமைத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான். பாடம் நடத்துவதில் தொடங்கி, தேர்வு நடத்துவது, மதிப்பெண் போடுவது, மாணவர்களைப் புரிந்துகொள்வது, வழிநடத்துவது என எந்த விஷயத்தையும் ஏ.ஐ விட்டுவைக்கவில்லை. பாடங்கள் தயாரிக்கப்படுவதையும் மாற்றியமைத்துள்ளது. நிர்வாகப் பணிகளையும் எளிதாக்கி இருக்கிறது.

இயந்திர கற்றல், ஆழ் கற்றல்

பாடங்கள் தொடர்பான தரவுகளைக் கொடுத்து, அவற்றைப் புரிந்துகொள்வதற்கான புரோகிராம்களை எழுதி, உரிய அல்கோரிதம்கள் மூலம் வழிகாட்டினால், ஏ.ஐ அமைப்புகள் அவற்றிடம் ஒப்படைக்கப்படும் பணிகளைச் கச்சிதமாகச் செய்து முடித்துவிடும். அதோடு, நவீன ஏ.ஐ புரோகிராம்கள், கொடுக்கப்படும் தகவல்கள் அடிப்படையில் சுயமாகக் கற்றுக்கொள்ளக்கூடியவையாகவும் இருக்கின்றன. குறிப்பிட்ட நோக்கில் புரோகிராம் செய்யப்படாமல், தானாகவே கற்றுக்கொள்ளும் மென்பொருள் அமைப்புகளின் இந்தத் திறனை இயந்திர கற்றல் (Machine Learning) என்கின்றனர். இதில் ஆழமாகக் கற்கும் டீப் லேர்னிங்கும் (deep Learning) இருக்கிறது.

இயந்திர கற்றலையும், ஆழ் கற்றலையும் கொண்டு உருவாக்கப்படும் அரட்டை மென்பொருட்களும், டிஜிட்டல் உதவியாளர்களும்தான் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் டிஜிட்டல் ஆசான்களாக உருவெடுத்துள்ளன. அது மட்டும் அல்ல, இத்தகைய டிஜிட்டல் ஆசான்கள், மாணவர்களின் கற்றுக்கொள்ளும் விதத்தைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப பாடம் நடத்தக்கூடியவையாகவும் இருக்கின்றன.

மாணவர்களுடன் உரையாடும்!

கல்வித் துறையில் ஏ.ஐ-யின் மிகப் பெரிய பங்களிப்பு, இத்தகைய தனிப்பட்ட பயிற்றுவித்தலைச் சாத்தியமாக்குவதுதான் என்கின்றனர். ஒரு வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரேவிதமான அறிவுத்திறன் இருக்க வாய்ப்பில்லை. மாணவர்களின் புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்பப் பாடம் நடத்துவதுதான் ஆசிரியர்களுக்கு உள்ள மிகப் பெரிய சவால். ஒவ்வொரு மாணவரின் கற்றல் திறனை அவர்களின் கவனத் திறனைக் கொண்டு கணிக்க வேண்டும்.

இந்தச் சவாலை எதிர்கொள்ள, ஏ.ஐ திறன் கொண்ட அரட்டை மென்பொருட்கள் உதவுகின்றன. இந்த மென்பொருட்கள் மாணவர்களுடன் உரையாடும் திறன் கொண்டவையாக உருவாக்கப்பட்டுள்ளதால், எளிதாகக் கற்றுக்கொள்ள முடிகிறது. மேலும், இயந்திர கற்றல் திறனால், மாணவர்கள் பதில் அளிக்கும் அல்லது கேள்வி கேட்கும் தன்மையை வைத்து, அவர்களின் புரிந்துகொள்ளும் வேகத்தைக் கணித்து அதற்கேற்ப தனிப்பட்ட பாடங்களை மென்பொருட்கள் முன்வைக்கின்றன.

இதேபோல, பாடத்திட்டங்களில் உள்ள குறைகள், மேம்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் போன்றவற்றையும் மாணவர்களிடமிருந்து மென்பொருட்கள் அறிந்துகொண்டு, மாற்றங்களைப் பரிந்துரைக்கின்றன. இவ்விதமாக மென்பொருட்களுடன் உரையாடி கற்பது, மாணவர்களுக்கும் சுவாரசியம் அளிப்பதாக அமைகிறது.

தேர்வு நடத்தும், திருத்தும்!

இன்னொரு பக்கம் பார்த்தால், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் செய்ய வேண்டிய அலுப்பூட்டும் பணிகளையும் ஏ.ஐ அமைப்புகள் எளிதாக்குகின்றன. உதாரணத்துக்கு, தேர்வு நடத்தி, மதிப்பெண் அளிக்கும் பணியை மென்பொருட்களே பார்த்துக்கொள்கின்றன. கேள்வி, பதில்கள் தொடர்பான தரவுகளைக் கொடுத்துவிட்டால், அதனடிப்படையில் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் அளிக்கின்றன.

இதுபோலவே, நிர்வாகத் தரப்பில் விளக்கம் தரவேண்டிய விஷயங்களையும் ஏ.ஐ வசம் ஒப்படைத்துவிடலாம் என்கின்றனர். பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பலவிதமான பாடத்திட்டங்களும், பயிற்சிகளும் அளிக்கப்படும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இவை தொடர்பாகக் குழப்பங்களும், சந்தேகங்களும் இருக்கலாம். மாணவர்களுக்கோ இவற்றை யாரிடம் கேட்பது என்று தெரியாது. அதேநேரத்தில், ஒவ்வொரு மாணவருக்கும் நேரம் ஒதுக்கி கேள்விகளுக்குப் பதில் அளிப்பது நிர்வாகிகளுக்கும் சவாலானது.

ஆனால், இதற்கென ஒரு அரட்டை மென்பொருளை உருவாக்கிவிட்டால் போதும், மாணவர்களின் கேள்விகளுக்கு அது சளைக்காமல் பதில் அளித்து வழிகாட்டும். நிர்வாகிகள், முக்கியப் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம். கல்லூரி இணையதளத்தில், இந்த மென்பொருளை வீற்றிருக்கச் செய்யலாம்.

இவை எல்லாம் சாத்தியமா என வியப்பாக இருக்கலாம்! ஆனால், கரோனா தொற்றுக்கு மத்தியில் இணைய கல்வி பெரிய அளவில் கைகொடுப்பதை மறந்துவிடக்கூடாது. கற்றல் நிர்வாக முறை (எல்எம்எஸ்) எனப்படும் இணைய வகுப்பறைகள் பாடம் நடத்த உதவுவுகின்றன. நவீன தொழில்நுட்பம் மேலும் பல வழிகளில் உறுதுணையாக இருக்கிறது. தேர்வையும் இணையம் மூலமே நடத்த வேண்டும் எனும் சூழலில், மாணவர்கள் தேர்வெழுதுவதை மேற்பார்வை செய்வதில் உதவ ஏ.ஐ நுட்பங்கள் சார்ந்த மென்பொருட்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

வகுப்பறையில் ஏ.ஐ செயல்பாடுகளையும், ஏ.ஐ ஆசான்களையும் தொடர்ந்து பார்க்கலாம்.

பேசும் மென்பொருட்கள்

மனிதர்களோடு உரையாடி, தகவல் அளிக்கக்கூடிய மென்பொருட்கள் ‘சாட்பாட்’ (Chatbot) எனப்படுகின்றன. இத்தகைய அரட்டை மென்பொருட்கள், அடிக்கடி கேட்கப்படும் தகவல் சார்ந்த விஷயங்களில் வழிகாட்ட மிகவும் ஏற்றவையாகக் கருதப்படுகின்றன. இ-காமர்ஸ் இணையதளங்கள், வங்கிச்சேவை தளங்கள், அரசு அமைப்புகள் சார்பில் இத்தகைய அரட்டை மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கல்வி நிறுவனங்களுக்கும் இவை கைகொடுக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்குப் பதில் அளிக்க இத்தகைய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. கேன்பரா பல்கலைக்கழகம், மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்க ‘லூசி’ மற்றும் ‘புரூஸ்’ ஆகிய மென்பொருட்களை உருவாக்கியுள்ளது. டீகின் பல்கலைக்கழகம் ‘ஜீனி’ எனும் மென்பொருளை உருவாக்கியுள்ளது.

(தொடரும்)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE