கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in
பக்தர்களால் ‘மகா பெரியவா’ என்று அழைக்கப்படும் காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது மடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், உலக நன்மைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அதைப் பற்றி மட்டுமே நினைத்தவர். இவரது இயற்பெயர் சுவாமிநாதன்.
நூறு ஆண்டுகள் வாழ்ந்த இந்த மகான் ஆடம்பரத்தை தவிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் உணவு, யாத்திரைகள், தங்கும் முகாம்கள், உடை என்று அனைத்திலும் எளிமையைக் கடைபிடித்தவர்.
தமிழகத்தில் விழுப்புரம் நகரில் மாவட்ட கல்வி அதிகாரியாக பணியாற்றியவர் சுப்பிரமணிய சாஸ்திரி. இவரது மனைவி மகாலட்சுமி. இத்தம்பதிக்கு 1894-ம் ஆண்டு, மே 20-ம் தேதி, இரண்டாவது மகனாக சுவாமிநாதன் பிறந்தார். எட்டு வயது வரை தனது தந்தையிடமே கல்வி பயின்று பின்பு, திண்டிவனத்தில் உள்ள ஆற்காடு அமெரிக்க மிஷன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.