கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
தெற்கத்திச் சீமையில் ஒரு டெஸ்ட் மேட்ச் ஆடியிருக்கிறார் கமல்ஹாசன். ஆட்டத்தில் விறுவிறுப்பு கம்மிதான் என்றாலும், நிதானமான அரசியல்வாதியாக களத்தில் நின்று விளையாடிவிட்டுப் போயிருக்கிறார் மனிதர்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது வெறுமனே 18 நாட்கள் மட்டுமே சுற்றுப்பயணம் செய்த அவர், இம்முறை தேர்தலுக்கு 4 மாதத்துக்கு முன்பே பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கிவிட்டார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னாலும்கூட, எந்த மதுரையில் கட்சி தொடங்கினாரோ அதே மதுரையில் இருந்து டிசம்பர் 13-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் கமல்.
பிரச்சாரத்தின்போது அவர் என்ன பேசப் போகிறார்? எந்தக் கட்சியை அதிகம் அட்டாக் செய்யப் போகிறார்? ரஜினி குறித்து என்ன பேசப் போகிறார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பிரச்சார வாகனத்தில் மைக் பிடிக்க அவருக்குத் தடை விதித்தது காவல் துறை. தடையை மீறி பரபரப்பு அரசியல் செய்வார் என்று எதிர்பார்த்த பத்திரிகையாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றம்.
"எங்களுக்குத் தடைகள் புதிதல்ல. அரசியலுக்கு வரும் முன்பிருந்தே பல தடைகளைச் சந்தித்திருக்கிறோம். எங்களுக்குப் பதற்றமில்லை. சட்டத்தை மீறும் எண்ணமும் எங்களுக்கு இல்லை" என்று சொன்னபோதே, கமலின் பிரச்சாரத் திட்டம், புரெவி புயல்
போல புஸ்ஸாகிவிட்டது.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவான் இந்தக் கோட்டைச்சாமி என்று போகிற ஊரெல்லாம் வெறுமனே கை... இல்லையில்லை கொடியில் இருப்பதைப் போல இணைந்த கையை காட்டிவிட்டுப் போனார் கமல். மதுரையில் மட்டுமல்ல தேனி, திண்டுக்கல்,
விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களிலும் கைகாட்டும் படலம் தொடர்ந்தது.