கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
ஊட்டி மலை ரயில் தனியார்மயமாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் குவிந்த பதிவுகளும், மீம்ஸும் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டிருக்கின்றன. ‘ரயில் கட்டணம் ரூ. 3,000 ஆக உயர்வு’, ‘2021 மார்ச் 15 முதல் ஜுன் 15 வரை ஒரு டிக்கெட் கட்டணம் ரூ. 12,000’ என்றெல்லாம் தகவல்கள் பரவின. எல்லாவற்றுக்கும் மேலாக, காவி நிறச் சீருடை அணிந்த பணிப்பெண்கள் ரயிலுக்கு முன்னர் டீ, காபி, பிஸ்கட்டுடன் வரவேற்கும் காட்சிகள் இதன் பின்னணியில் மத்திய பாஜக அரசின் பங்கு இருப்பதாகப் பலரைப் பேசவைத்தன. இதையடுத்து, ‘மலை ரயிலைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே’ என பல்வேறு இயக்கங்கள், அரசியல் கட்சிகள் குரல் எழுப்பின.
உண்மையில் நடந்தது என்ன?
ஊட்டி மலை ரயில் உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது. நீலகிரியின் அழகிய மலைத்தொடர்கள், குகைவெளிகள், பறவைகள், விலங்குகள், மூலிகைக் காற்று என பலவற்றை இந்த ரயிலில் பயணம் செய்பவர்கள் ஆனந்தமாக அனுபவிக்க முடியும். இந்த ரயிலின் இணைப்பு ரயில்தான் மேட்டுப்பாளையம் - சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ். சென்னை - ஊட்டிக்கு ரயில் முன்பதிவு செய்பவர்கள் மேட்டுப்பாளையம் வந்து இந்த மலை ரயிலுக்கு மாறி ஏற வேண்டும். இதில் மேட்டுப்பாளையம் - ஊட்டிக்கு டிக்கெட் ரூ. 110. சாதாரண வகுப்புக் கட்டணம் ரூ. 15. இந்த ரயிலை இயக்குவதற்காகவே ரயில்வே நிர்வாகம் வருடந்தோறும் ரூ. 5.50 கோடி நஷ்டம் காட்டிக்கொண்டிருக்கிறது.