நெட்டிசன்களிடம் சிக்கிய கமல்

By காமதேனு

வழக்கமாக சங்கத் தமிழில் வார்த்தைகளைக் கோர்த்துப் பேசுவதில் வல்லவரான கமல், இப்போது தெளிவாகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா மீது விசாரணைக் கமிஷன் வைத்தது தொடர்பான கமலின் ஆவேசப் பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கு பதில் அளிக்கும் விதமாக ட்விட்டரில்,  ‘அறத்தின் பக்கம் நிற்பவனை சங்கி, பாஜகவின் பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுகிறது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் திண்பவர்கள் ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சரியமில்லை’ என்று பதிவிட்டார் கமல். இதற்கும் நெட்டிசன்கள் எதிர்வினை ஆற்றிவருகின்றனர்.  ‘நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஆ.ராசாவையும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்கும் கமலின் அரசியல் நன்றாகவே புரிகிறது’ என்று பலரும் பதிவிட்டுள்ளனர். சிலர்,  ‘ஹோட்டலில் பரோட்டாவுக்கு வெங்காயம் கிடையாது என்று சர்வர் சொன்னால் நான் கேட்பேன்’ என்பது போன்ற கிண்டல் பதிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர். ரஜினி, கமல் இருவரால் தமிழக அரசியல் களம் நன்றாகவே சூடுபிடித்திருக்கிறது. அறுவடை யாருக்கோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE