உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் கட்டத்தில் இருக்கிறது இந்தியா. வைரஸ் தொற்றுடன் இந்தியாவுக்கு வந்தவர்களால் மற்றவர்களுக்குப் பரவி, அவர்கள் மூலம் உள்நாட்டில் மேலும் பலருக்குப் பரவும் அபாயம் உள்ள இந்தக் கட்டத்தில், தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் சற்றே ஆறுதல் தருகின்றன.
கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை மார்ச் 31 வரை மூட முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களில் நோய்த் தடுப்பு மருந்துகளைத் தெளிக்கும் பணிகளும் நடந்துவருகின்றன. இப்படிப் பல நடவடிக்கைகளை எடுத்துவரும் அரசு, பயப்பட வேண்டாம் என்றும் நம்பிக்கையூட்டிவருகிறது. அந்த வார்த்தைகளில் அரசு உறுதியாகவும், உண்மைத்தன்மையுடனும் இருக்க வேண்டும்.
இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பால், அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில், அடிமட்டத் தொழிலாளர்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் போதுமான பொருளாதாரப் பாதுகாப்பை அரசு அளிக்க வேண்டும். ஒருவேளை, நெருக்கடி ஏற்பட்டால், தேவைப்படும் உணவுகளை நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்க வேண்டும். வீட்டிலிருந்தே பணிகளைச் செய்யுமாறு ஊழியர்களைப் பல தனியார் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வழங்கியிருக்கிறது. அவை முறையாகப் பின்பற்றப்படு கின்றனவா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.
தமிழகத்தில் கரோனா பரிசோதனை மையங்களும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. வைரஸ் பரவல் அடுத்த கட்டத்தை எட்டுவதற்கு முன்னர், பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். கரோனா தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணிகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டுவருகின்றன. இந்தியாவிலும் அதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.