வனமே உன்னை வணங்குகிறேன்..! 19 - அமைதி தரும் அம்போலி

By பாரதி ஆனந்த்

கடல் மட்டத்திலிருந்து 690 மீட்டர் உயரத்தில் ஒரு மலை வாசஸ்தலம். எங்கெங்கு காணினும் பசுமை போர்த்திய அடர் பச்சைக் கம்பளம் மனதை ஈர்க்கும். நாசியைத் துளைக்கும் பச்சை வாசனை, மூளைக்குப் புத்துணர்ச்சியைப் பாய்ச்சும். இதுவரை சிலாகித்திராத சுத்தமான சுவாசமும், அருவிகளின் ஆர்ப்பரிப்பும்…‘அட! பூமிதான் சொர்க்கம்’ என்று பாராட்டவைக்கும். இப்படியான அனுபவங்களைத் தரக் காத்திருக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தின் அம்போலி மலைப்பிரதேசம்.

தெற்கு மகாராஷ்டிரத்தில் சிந்துதுர்க் மாவட்டத்தில் சாயத்ரி மலைத்தொடரின் மீது அமைந்துள்ளது அம்போலி. மேற்குத் தொடர்ச்சி மலைகள் தனது பயணத்தை முடித்துக்கொள்ளும் இடம் இது எனக் குறிப்பிடலாம். கர்நாடக மாநிலம் பெல்காமிலிருந்து சாலை மார்க்கமாக 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். அதேபோல் கோவா மாநிலத்தின் டபோலிம் விமான நிலையத்திலிருந்து 57 கிலோமீட்டர் தொலைவில்தான் அம்போலி உள்ளது. ரயில் பயணம் எனில் சாவந்த்வாடி ரயில் நிலையத்திலிருந்து டாக்சியில் அம்போலி நகரத்துக்குச் செல்லலாம். மகாராஷ்டிரம், கர்நாடகம், கோவா ஆகிய பகுதிகளிலிருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவிகின்றனர்.

பல்லுயிர்ப் பெருக்கத்தின் ‘ஹாட் ஸ்பாட்’

அம்போலியில் வனவிலங்கு சரணாலயங்கள் ஏதுமில்லை. ஆனாலும், அம்போலி உலகின்  பல்லுயிர்ப் பெருக்கத்தில் முக்கியப் புள்ளியாகக் கருதப்படுகிறது. இங்கு 84 வகையான நீர்நில வாழ் உயிரினங்கள் உள்ளன. 16 வகையான பறவைகள், 7 வகையான பாலூட்டிகள், உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத 1,600 வகையிலான பூச்செடிகள் உள்ளன. மகாராஷ்டிரத்தின் மற்ற பகுதிகளில் பார்க்க இயலாத சதர்ன் பர்ட்விங், மலபார் ட்ரீ நிம்ஃப், மலபார் ரேவன் போன்ற வண்ணத்துப்பூச்சிகளையும் கண்டு ரசிக்கலாம். ஸ்கின்க்ஸ், கெக்கோஸ், பல வகைப் பல்லிகள், பாம்புகள் இங்கு அதிகம். பைட் ஷீல்ட் டெய்ல், மலபார் பிட் வைபர் போன்ற பாம்புகள் இங்கு காணப்படுகின்றன. மலபார் க்ளைடிங் ஃப்ராக் (Malabar gliding frog) எனும் தவளைதான் இங்கு பிரதானமாக கவனம் ஈர்க்கும் உயிரினம். இப்படி பலதரப்பட்ட உயிரினங்கள் அம்போலியை ‘ஈக்கோ ஹாட் ஸ்பாட்’டாக (Eco Hotspot) வைத்துள்ளன.

அங்கேயும் குறிஞ்சி மலர்!

நீலகிரியிலும், கொடைக்கானலிலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் வகை உள்ளது என்றால், அம்போலியில் 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி வகை உள்ளது. கார்வி குறிஞ்சி (Strobilanthes callosus) எனும் குறிஞ்சிப் பூச்செடிகள், புதர் வகையைச் சேர்ந்தவை. இவை ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் பூக்கும். ஆனால், 8 ஆண்டுகளுக்கு ஒரு முறையே இது நிகழும். அந்தச் சமயத்தில் அம்போலி கூடுதல் பொலிவு பெறும். பச்சைக் கம்பளத்தின் மீதான அடர் ஊதாப் பூக்களைக் காண்பதற்காகவே, குறிஞ்சிப் பூ பூக்கும் காலத்தில் அம்போலிக்கு மீண்டும் செல்லலாம். உள்ளூர்ப் பழங்குடிகள் இந்தப் பருவத்தில் கார்வி மலர் தேனைச் சேகரிக்கின்றனர். கார்வி தேன் என்றே பெயர் கொண்ட இவ்வகை தேன் மிகவும் பிரபலமானது. சுவையானதும்கூட!

அனுபவப் பகிர்வு

ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நாச்சிராஜ் ராமநாதன், பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அமைதியை நாடும்போதெல்லாம் அம்போலிதான் தனது முதல் தெரிவு எனக் கூறுகிறார். சிறுவயதிலிருந்தே வனங்களை ரசிப்பதில் பேரார்வம் கொண்ட நாச்சிராஜ், வனவிலங்குகளைப் படம் பிடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இயற்கையைத் தனது கேமரா வழியில் ஆவணப்படுத்த அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் இவருக்கு அம்போலி அறிமுகமானது தற்செயலாகத்தான். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமலேயே அம்போலிக்குச் சென்றுள்ளார். ஆனால், பருவமழைக் காலத்தில் இவர் மேற்கொண்ட அந்தப் பயணம் அம்போலியை இவரின் மனதுக்கு நெருக்கமாக்கியுள்ளது.

“அம்போலி கோடை வாசஸ்தலம் என்றாலும்கூட மே மாதத்தில் அங்கு செல்வது உகந்ததாக இருக்காது. பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை பயணிக்க மிகச் சிறந்த இடம். அந்தக் காலகட்டத்தில்தான் முதன்முதலில் அம்போலி சென்றிருந்தேன். நாள் முழுவதும் மழை பெய்தது. அரை மணி நேரம் மழை தொடர்ந்து பெய்தால், 5 அல்லது 10 நிமிடங்கள் மழை இல்லாமல் இருக்கும். மழைத் தூறலுக்கு இடையே பனியும் படர்ந்திருக்கும். நீங்கள் வாகனங்களின் ஒளிவிளக்கை எரியவிடாமல் சாலையைக் கடப்பது கடினம்.

அம்போலியில் 7 அருவிகள் உள்ளன. பாபா அருவி, ஷிர்காவ்ங்கர் அருவி, மஹாதேவ் அருவி மற்றும் நாகட்டா அருவி போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. 40 அடி உயரத்தில் இருந்து விழும் நாகட்டா அருவிப் பகுதி சுற்றுலாப் பயணிகளின் கவன ஈர்ப்புப் பகுதியாக இருக்கிறது. ஹிரண்யகேஷ் அருவிக்கு அருகில் ஒரு பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில், சிவனின் அருள் பெற்ற சித்தரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அருவிகளின் அழகை நீங்கள் ரசித்து முடிக்கும்போது, சீ வியூ பாயின்ட், கவேல்சாத் பாயின்ட், பரீக் ஷித் பாயின்ட், மஹாதேவ்காட் பாயின்ட் போன்ற இடங்களுக்கு வழிகாட்டிகளால் அழைத்துச் செல்லப்படுவீர்கள். மலையின் உச்சியிலிருந்து இயற்கையின் எழிலை ரசிக்கும்போது மனம் யோகநிலைக்குச் சென்றிருக்கும். அந்தப் பிரம்மாண்டம் சொர்க்கத்தில் இருப்பதாக நம்மை உணரவைக்கும். குடும்பத்துடன் சென்றுவர பாதுகாப்பான இடம் என்பது இன்னொரு பிளஸ். அங்கே உள்ள உள்ளூர்வாசிகளே ‘ஹோம் ஸ்டே’ என்ற முறையில் வீடுகளிலேயே தங்கும் அறைகள் ஒதுக்கி, வீட்டு உணவு தருகின்றனர். ரிசார்ட்டுகளும் இருந்தாலும் எங்களுக்கு எப்போதுமே இந்த ‘ஹோம் ஸ்டே’ தான் பிடித்திருக்கிறது. அம்போலிவாசிகளின் தூய்மை நம்மையும் தொற்றிக்கொள்ளும். இங்குள்ள மக்கள் இயற்கையை நேசிக்கும் முறையைப் பார்த்தாலே, ஒரு சிறு பிளாஸ்டிக் பாட்டிலைக்கூட சூழல் அக்கறையின்றி தூக்கி எறிய மனம் வராது. பறவைகள் காணலுக்குச் சிறந்த இடம். புகை, நெரிசல், பரபரப்பு, பதற்றம் என எல்லாவற்றையும் ஒதுக்கிவைக்க அம்போலியின் இயற்கை அன்னை உத்தரவிட்டு ஆரத் தழுவிக்கொள்வாள்” என்றார் நாச்சிராஜ்.

வரலாற்றுப் பின்னணி

அம்போலி நகரம் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, படையினர் தங்கும் இடமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், இப்பகுதி பருவமழைக் காலங்களில் அதிக ஈரத்துடன் காணப்பட்டதால் ஆங்கிலேயர்கள் இதை விடுத்து மாத்தேரான் மலைவாசஸ்தலத்தைத் தங்களுக்கு உகந்த இடமாக மாற்றிக்கொண்டனர். அம்போலியில் உள்ள மாதவ்காட் கோட்டை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அங்கிருந்து அரபிக்கடல் மீது படரும் பார்வை அத்தனை மகிழ்ச்சியானது. அம்போலி கோட்டையின் பின்னணிக் கதைகளும் கோட்டையைப் போலவே சிதிலமடைந்து இருக்கின்றன. முழுமையான உறுதியான தகவல் இல்லாததால் அங்கே சொல்லப்படும் கதைகளையே நீங்கள் கேளுங்கள். சில கதைகள் உங்களை வரலாற்றுப் புத்தகங்களுக்கான தேடலைத் தூண்டலாம்.

உலகமே ‘கோவிட் 19’ அச்சுறுத்தலில் சிக்கித் தவிக்கும் நிலையில், சுமுக நிலை திரும்பியபின் உங்களின் பயணங்களைத் திட்டமிடுங்கள். சுற்றுலாவுக்கு இது நிச்சயமாக உகந்த காலம் அல்ல!

படங்கள் உதவி: நாச்சிராஜ் ராமநாதன்

(பயணம் தொடரும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE