மற்றவை வெண் திரையில் - 6: தமிழ்த் திரைக்கு வண்ணம் பூசிய பாரதிராஜா

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

திருவல்லிக்கேணியும் அரும்பாக்கமும் மட்டுமே தெரிந்த எனக்கு பால்ய பிராயத்தில் கிடைத்த ஒரே கிராம அனுபவம் கோவிலடிதான். தஞ்சை மாவட்டத்திலுள்ள கல்லணைக்கு ஐந்து மைல் தொலைவு அந்தக் கிராமம். அத்தையைக் கட்டிய மாமாவின் ஊர். விடுமுறை நாட்களில் ஒரு சில வாரங்கள் அங்கு செல்வதுண்டு.

கிராமத்துக் கதைகள்

கோவிலடி மாமா எனக்குப் பெரிய ஹீரோ. என்னைத் திருக்காட்டுப்பள்ளிக்கு சைக்கிளில் எம்ஜிஆர் படத்திற்கு அழைத்துச் செல்வார். ‘தென்னகம்’ நாளிதழ் படித்து அரசியல் கதைகள் சொல்வார். பெருமாள் கோயிலின் மடப்பள்ளிக்குச் சென்று எனக்காக அப்பம் கொணர்ந்து தருவார். மாலை நேரத்தில் லைஃப்பாய் சோப்பும் துண்டுமாய் என்னை ஆற்றில் குளிக்க அழைத்துச் செல்வார். பேசிக்கொண்டே சரேலென ஆற்றில் குதித்துக் காணாமல் போவார். பின் அக்கரையில் எழுந்து சிரிப்பார். குடும்பத்தில் யாரும் சொல்லாத ரகசியக் கதைகள் சொல்வார். எல்லாக் கதைகளிலும் அவரின் எக்ஸ்ட்ரா சாகசம் தெரியும்.

அத்தையும் சளைத்தவர் அல்ல. மாமா ஊரில் இல்லாத இருண்ட இரவில், விளக்கு வெளிச்சத்தில் பேய்க் கதைகள் சொல்வார். ஆற்றங்கரையில் நள்ளிரவில் குடத்தில் தண்ணீர் மொள்ள மாமா சென்றபோது, ‘அது’ தாக்கி அவர் கரையில் கிடந்த கதையை அடிக்கடிச் சொல்வார். மாமா ஏன் நள்ளிரவில் குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுக்கப் போனார் என்று எப்போதுமே நான் கேட்டதில்லை.

சினிமா சுனாமி

எத்தனை கிராமத்துக் கதைகள் கேட்டிருந்தாலும், பார்த்திருந்தாலும், மயிலு கதைதான் என்னைப் புரட்டிப்போட்டது. பாரதிராஜாவின் ‘பதினாறு வயதினிலே’ தமிழ்த் திரையுலகையே புரட்டிப்போட்ட சுனாமி என்றுகூட தோன்றுகிறது. அதற்கு முன்னர்தான் ‘அன்னக்கிளி’ மூலம் இசையுலகம் ஓர் ஆட்டம் கண்டிருந்தது.

‘மச்சானை பாத்தீங்களா’ ரெக்கார்ட் ஒலிக்காத விசேஷ வீடே இல்லை. இசைத்தட்டு விற்பனையில் சாதனையாம். ஆனால், கெயிட்டி தியேட்டரில் ஓடிய அந்த சிவகுமார் படம் பற்றிய மற்ற செய்திகள் எனக்குப் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தாததால் படம் பார்க்கவில்லை. ஆனால், தூரத்தில் ஒலிக்கும் ‘அன்னக்கிளி’ பாடல்கள் என்னைக் கிளர்ந்தெழ வைத்தன. வித்தியாசமான ஒலிகள் வித்தியாசமான காட்சிகளைக் கற்பனை செய்யவைத்தன. இளையராஜாவின் இசை, காட்சிகளுடன் காணக்கிடைத்தது ‘பதினாறு வயதினிலே’ படத்தில்தான்.

என் கற்பனைக்கே எட்டாதிருந்த ஒரு கிராமத்து வாழ்க்கையை அச்சு அசலாய் காட்டியிருந்தார் பாரதிராஜா. ஒரு படம் பார்க்கின்ற உணர்வை முழுவதுமாய் மறந்த அனுபவம் வாழ்வில் முதல் முறை ஏற்பட்டது.  திரையில் நடிகர்களைக் காணவில்லை. 
மேக் -அப்  இல்லாத முகங்கள். ஸ்டுடியோ  இல்லை. உரக்க ஒலிக்கும் வசனங்கள் இல்லை.  பாடல்கள் மட்டுமின்றி பின்னணி     இசைகூட கதை  சொல்லியது. மரங்களும் ஓடைகளும் வயல்வெளிகளும் பாத்திரங்களாயின. அது மட்டுமா? கதை தொடங்கி முடியும் அந்த ரயில் நிலையம் எத்தனை பலமான பாத்திரம்!

வெற்றிகண்ட யதார்த்த சினிமா

பெட்டிக்கடை குருவம்மா, மகள் மயிலு, ஒண்டிக்கிடக்கும் சப்பாணி, ஊர் ரவுடி பரட்டை, அவனுக்கு ஒத்து ஊதும் கூத்து, மாட்டு டாக்டர் சூழ… ஒரு நிஜ கிராமத்திற்குச் செல்கிறோம். 

கோட்டு சூட்டு மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டவள் கடைசியில் சப்பாணியை மணக்கச் சம்மதிக்கிறாள். டாக்டரால் வஞ்சிக்கப்பட்டு, அம்மாவைப் பறிகொடுத்த மயிலுக்கு நாயாய் காவல் நிற்கிறான் சப்பாணி. மயிலின் மானம் காக்க பரட்டையைக் கொன்று ஜெயிலுக்கும் செல்கிறான். மயிலு சப்பாணி வருகைக்காக தினம் தினம் ரயில் நிலையம் வந்துசெல்கிறாள். ‘சப்பாணி திரும்பி வருவான். மயிலு வாழ்க்கை மலரும்’ என்ற வாசகத்துடன் படம் முடியும்.

யதார்த்த சினிமாவைத் தமிழுக்கு வெற்றிகரமாகக் கொண்டுவந்தார் பாரதிராஜா. அதற்கு முன்னர் ஜெயகாந்தன், வீணை எஸ். பாலச்சந்தர், பாபு நந்தன்கோடு, ஜான் ஆபிரஹாம் போன்றவர்கள் செய்த பரிசோதனை முயற்சிகள் வணிக வெற்றி பெறவில்லை. பாரதிராஜா எடுக்க நினைத்திருந்த ‘மயிலு’ படமும் திட்டமிட்டபடி என்.எஃப்.டி.சி தயாரித்து கறுப்பு வெள்ளையாக வந்திருந்தால் தோற்றுப் போயிருக்குமோ என்னவோ?

படத்தை வண்ணத்தில் தைரியமாகத் தயாரிக்க முன்வந்த ராஜ்கண்ணு, கதையைக் கேட்டுவிட்டு அவலட்சண முகத்தோடும், கோவணத்தோடும் நடிக்கத் துணிந்த கமல், ஜி.கே, வெங்கடேஷுக்குப் பதில் உள்ளே வந்த இளையராஜா, கதை வசனத்தை மெருகேற்றிய உதவி இயக்குநர் பாக்யராஜ், ஸ்டைல் பண்ணிக்கொண்டிருந்த ரஜினி ‘பரட்டை’யாகக் குறைந்த சம்பளத்
தில் நடித்துக்கொடுத்தது என அனைத்தும் வணிக சினிமாவுக்குள் ஒரு யதார்த்த சினிமாவைக் கொண்டுவரக் காரணமாயின.
படம் 175 நாட்கள் ஓடி வெள்ளி விழா கண்டது. ஏகப்பட்ட விருதுகளைப் படக்குழுவினர் அள்ளினர். கமல், ரஜினி, ஸ்ரீதேவி பெரும் நட்சத்திரங்களானார்கள். ‘பாரதிராஜா சினிமா’ என்று ஒரு வகைமை உருவானது.

ராஜாக்களின் ராஜ்ஜியம்

படம் பார்த்த எனக்கு இந்த ரசனை பிடித்துப் போனது. பாரதிராஜாவின் தீவிர ரசிகனானேன். அவரின் அடுத்த நான்கு படங்களும் வெள்ளி விழாப் படங்கள். ஒவ்வொன்றையும் விடாமல் பல முறை பார்த்தேன். மரங்கள் சூழ்ந்த வனத்தை அண்ணாந்து பார்த்து வட்டமிடும் அவரது கேமரா கோணம் என்னைக் கிறுகிறுக்கச் செய்யும். பின்னாட்களில் வெள்ளை உடை தேவதைகள், அலையோரப் பாடல்கள், மலர் குவியல் போன்றவை க்ளிஷேக்கள் என்று விமர்சிக்கப்பட்டாலும் அவர் பாதிப்பு இல்லாத இயக்குநர்கள் அந்தக் காலகட்டத்தில் குறைவு. அதேசமயம், அவருக்கு நிகராக அழகுணர்ச்சி கொண்ட தமிழ் இயக்குநர் இன்னொருவரில்லை என்பது என் கருத்து.

1986-ல், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது வெங்கடேஷ் சக்கரவர்த்தி எழுதிய, ‘பாரதிராஜாவின் சினிமா’ என்ற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அது சினிமா பற்றிய என் புரிதலை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது. 

பாரதிராஜாவின் படங்களில் ஒளிந்துகொண்டிருந்த வன்முறை என் கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. அவர் படங்களின் கதை வடிவ ஒற்றுமைகளும் அடிநாதமான வன்முறை மற்றும் பழி உணர்வுகளும் புரிந்தன. ஆனால், அவர் படங்கள் மீது எனக்கிருந்த காதலை அவை இம்மியளவும் குறைக்கவில்லை.

பாரதிராஜாவும் இளையராஜாவும் என் கல்லூரிக் காலங்களைக் காட்சிகளாலும் இசையாலும் நிரப்பியிருந்தார்கள். அவர்கள் இருவருக்குமான புரிந்துணர்வு எந்த ஒரு இயக்குநர்- இசையமைப்பாளர் ஜோடிக்கும் வாய்க்கவில்லை என்றே சொல்வேன். 1977-க்கு பிறகு வந்த எல்லா கிராமிய படங்களுக்கும் ‘16 வயதினிலே’தான் முன்னுதாரணம். தமிழ் சினிமா மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் பெரும் தாக்கம் செய்த இந்தப் படத்திற்குத் தமிழில் ஒரு ‘கல்ட்’ அந்தஸ்து உண்டு.

ரசனை முரண்கள்

படம் பார்த்துவிட்டு வந்த கோவிலடி அத்தை, “என்ன இருக்கு இந்தப் படத்துல? மயிலு மயிலுன்னு பைத்தியம் புடிச்சு அலையறாங்க!” என்றார். “சும்மா காட்டையும் மேட்டையும் காட்டறான்” என்று சலித்துக்கொண்டார். கிராமத்தில் வசிக்கும் அவருக்குப் படம் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பெரியவர்கள் யாரும் பெரிதாகப் பேசவில்லை. 16 வயது பெண்ணின் காதல் மயக்கத்தை ஏதோ ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படம் போல பாவித்தார்கள். அதற்கு ஏற்றாற்போல, பள்ளி நண்பர்களுக்கு ஸ்ரீதேவியின் கவர்ச்சிதான் பெரிதாகத் தெரிந்தது. ஏன் படம் இப்படிப் பிய்த்துக்கொண்டு ஓடுகிறது என என் சுற்றத்தில் ஒருவருக்கும் புரியவில்லை!

இளம்பிராயத்து கற்பனைக் காதலைத் தொலைத்து, கிடைத்த வாழ்வையும் தக்கவைக்கப் போராடும் ஏராளமான பெண்களுக்கு மயிலின் கதை மனதுக்கு நெருக்கமாக இருந்திருக்க வேண்டும். சப்பாணியின் ஒருதலைக் காதலில் பல ஆண்கள் தங்கள் வாழ்க்கையைக் கண்டார்கள். ஒருகட்டத்தில் ஒருவருக்கொருவர் மனதார நெருங்கிவரும் சப்பாணியும் மயிலும், அந்தக் குறுகிய கால வசந்தத்தையும் தவறவிடும் சோகம், இருபாலரையும் கவர்ந்திருக்கும். தங்கள் வாழ்க்கையைத் திரையில் கண்ட திருப்தியில்தான் ரசிகர்கள் படத்தை ஓடவைத்துக் கொண்டாடினார்கள்.

பொற்காலத்தின் தொடக்கம்

படம் எல்லா வகையிலும் ட்ரெண்ட் செட்டர் எனச் சொல்லலாம். தங்களைப் போன்ற நாயகர்களைக் கண்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் அவர்களைத் தக்கவைத்துக்கொண்டார்கள். ஆணழகனான கமல், இந்தப் படத்தில் அவலட்சணமாக நடித்து வெற்றி கண்ட உற்சாகத்தில், ‘கல்யாணராமன்’ போன்ற குறைபட்ட பாத்திரங்களைத் தேர்வுசெய்து நடித்து மேலும் வெற்றிகளைக் குவித்தார். பரட்டையின் சண்டித்தனத்தின் நீட்சியாக, ‘குப்பத்து ராஜா’, ‘மாங்குடி மைனர்’ போன்ற படங்களில் நடித்து திராவிட நாயகனாகக் கண்டெடுக்கப்பட்டார் ரஜினி. சுதாகர், விஜயன், பாக்யராஜ் என்று ஆரம்பித்து விஜயகாந்த், பாண்டியன், தியாகராஜன், சத்யராஜ் என யதார்த்த நாயகர்களை உருவாக்கத் தொடங்கியது தமிழ்த் திரையுலகம். இளையராஜா கிராமிய இசையில் தொடங்கி எல்லா வகை இசையிலும் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார். மகேந்திரன், பாலு மகேந்திரா, ருத்ரய்யா, துரை, பாக்யராஜ், ராபர்ட்-ராஜசேகர் என புதிய அலை இயக்குநர்கள் வந்தார்கள்.

ஆம், எழுபதுகளின் பிற்பகுதி, தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சிக் காலம். அந்தப் பொற்காலத்தைத் தோற்றுவித்த அரசன் பாரதிராஜா!
படங்கள் உதவி: ஞானம்

(திரை விரியும்…)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE