மஹா பெரியவா 55: அருளே ஆனந்தம்

By காமதேனு

பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

நடமாடும் தெய்வம் மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெறுவதற்காக ஒரு தம்பதியர் காஞ்சிபுரம் வந்திருந்தனர். இவர்கள் வசித்து வருவது அமெரிக்காவில். மகான் மீது கொண்டிருந்த அதீத பக்தியின் காரணமாக இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் தரிசித்து ஆசி பெறுவது வழக்கம்.

இவர்களது இந்தியப் பயணத்தின்போது குடும்ப நண்பர் ஒருவரும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். தம்பதிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பவர் இந்த அன்பர். ஆனால், பல வருடங்களாக அங்கேயே வசித்து வருகிறார். அமெரிக்காவிலேயே பல காலம் இருந்து வந்த காரணத்தால், மேல்நாட்டு பாதிப்பு அதிகம் இவரிடம்.
இந்தக் குடும்ப நண்பர், நவநாகரிகத் தாக்கத்தின் காரணமாக கோயில், குளம் செல்வதில் உள்ள பக்தியும் மரியாதையும் குறைந்து விட்டது. முற்றும் துறந்த சந்நியாசிகள் மீது ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கை இப்போது காணாமலே போய்விட்டது. போற்றுதலுக்குரிய அப்படிப்பட்ட மகான்களை எங்கே பார்த்தாலும், ஏதோ பார்க்கக் கூடாதவரைப் பார்த்து விட்டதைப் போல் முகத்தை சுளித்து வேறு பக்கம் திரும்பி விடுவார்.

இப்பேர்பட்ட மனமும் குணமும் கொண்ட இந்த நவநாகரிக அன்பர், மகா பெரியவா திருச்சந்நிதிக்கு வந்ததில் இருந்தே ஒரு அலட்சிய மனோபாவத்துடனே காணப்பட்டார் என்பதில் ஆச்சரியம் இல்லை.

‘அமெரிக்காவில் தாங்கள் பேசுவது தமிழிலா... அல்லது ஆங்கிலத்திலா?’ என்ற கேள்வியை பெரியவா அவரிடம் ஆரம்பித்தார்.
ஏதோ தனக்கு ஆங்கிலப் புலமை அதிகம் இருப்பதுபோல் காட்டிக் கொள்ளும் விதத்தில், ‘‘அமெரிக்காவில் எல்லாமே ஆங்கிலம்தான்’’ என்று அலட்சியமாகப் பதிலளித்தார் குடும்ப நண்பர்.

சரியாக அந்த நேரத்தில் மடிசார் புடவை உடுத்தி இருந்த நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் பெரியவா திருச்சந்நிதிக்குள் நுழைந்தார். ஓர் ஓரமாக கைகளைக் கூப்பியபடி பயபக்தியுடன் நின்றார்.

அந்தப் பெண்மணியைப் பார்த்ததும் பெரியவா ஜாடை காண்பித்து அருகே வரச் சொன்னார். அவரும் சந்தோஷப்பட்டு பெரியவாளை நெருங்கி, நமஸ்கரித்தார்.

‘‘குடும்பம் எப்படிப் போயிண்டிருக்கு? எல்லாரும் சவுக்கியமா?’’ என்று கேட்டார் பெரியவா.
‘‘உங்க அனுக்ரஹத்துல எல்லாம் நன்னா போயிண்டிருக்கு பெரியவா’’ என்ற பெண்மணி, மீண்டும் கைகளைக் குவித்து வணங்கி விட்டு, நமஸ்காரம் செய்தார்.

பெண்மணிக்குத் தீர்த்தப் பிரசாதம் தருவதற்காக உத்தரணியைக் கையில் எடுத்தார் மாமுனிவர். பிரசாதத்தை வாங்கிக் கொள்வதற்காகத் தனது வலது உள்ளங்கையைக் குழித்து வைத்த நிலையில், இடக்கையை அடியில் வைத்தபடி நீட்டினார்.
கண்களில் அலட்சியத்துடன் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் நவநாகரிக குடும்ப நண்பர்.
பெரியவாளிடம் இருந்து தீர்த்தப் பிரசாதம் பெற்றுக் கொண்ட அந்தப் பெண்மணி, உத்தரவு பெற்றுக் கொண்டு அடுத்த விநாடியே அங்கிருந்து அகன்றார்.

இப்போது மகா பெரியவா பார்வை, அந்த நவநாகரிக இளைஞர் மீது திரும்பியது. அவருக்கு ஜாடை காட்டித் தன் அருகே அழைத்தார் பெரியவா. தன்னைத்தான் அழைக்கிறாரா என்று அவருக்கு சந்தேகம். நாலாப் பக்கமும் திரும்பிப் பார்த்தார். வேறு யாரையும் பெரியவா அழைத்ததாகத் தெரியவில்லை. அப்போது மகா பெரியவா இவரைப் பார்த்து, ‘‘உங்களைத்தான் கூப்பிடறேன்...’’ என்றார்.

‘என்னையா கூப்பிடுகிறார்? என்கிட்ட இவர் பேசறதுக்கு என்ன இருக்கு? என்கிட்ட என்ன கேட்கப் போறார்? இவருக்கெல்லாம் இங்கிலீஷ் பேசத் தெரியுமா? பள்ளிக்கூடம் போய் படிச்சிருப்பாரா?’ என்கிற கேள்விகள் எல்லாம் மனதில் மேலோங்க ஏனோதானோ என்று சில அடிகள் நடந்து சென்று மகானுக்கு அருகே நின்றார்.

அவரது உள்மனதில் ஓடுகிற எண்ண ஓட்டம், கலியுக தெய்வத்துக்குத் தெரியாதா? உள்ளுக்குள் இருக்கும் அகந்தையையும், மனதில் இருக்கக் கூடிய நசுங்கல்களையும் சரி செய்வதற்கு அல்லவா இவரைக் காஞ்சிக்கு அழைத்திருக்கிறார்?!
பெரியவா அருகே வந்து நின்றவர், ‘என்ன... எதுக்காக என்னைக் கூப்பிட்டேள்?’ என்பது போல் பார்த்தார்.

ஒரு புன்னகையுடன் அவரைப் பார்த்து, ‘‘இப்ப இங்கே வந்துட்டுப் போனாளே ஒரு பெண்மணி... தீர்த்தப் பிரசாதம் வாங்கிண்டு கிளம்பினாளே... ரொம்ப நல்ல குடும்பம். ஆனா, இப்ப இவா ஏழை. ‘ஃபேமிலி’ ரொம்ப நொடிச்சுப் போயிடுச்சு. ஆனா, முன்னாடி அப்படி இல்லை. பெரிய பணக்காரக் குடும்பம்.

காசு, பணம்லாம் தாராளமா புழங்கிண்டிருந்தது. இப்ப சொத்து பத்தெல்லாம் இவா கையை விட்டுப் போயாச்சு. இன்னி தேதிக்
குப் பணம், காசு, சொத்து பத்துனு ஒண்ணும் இல்லை. ஆனா, எதை இழந்தாலும் ஸ்ரீமடம், ஆச்சார்யாள் மேல இருக்கிற பக்தி கொஞ்சமும் மாறலை. பணக்காராளா இருந்தப்ப என்ன பக்தி இருந்ததோ, அதே பக்திதான் இப்பவும். தங்களோட இந்த பக்தி நிலைலேர்ந்து அந்தக் குடும்பத்துல இருக்கிறவா யாருமே மாறலை. அதாவது, பொருளாதாரத்துல எப்படிப்பட்ட கீழ்நிலை
வந்தாலும், ஸ்ரீமடத்து மேலயும், ஆச்சார்யாள் மேலயும் அப்ப இருந்த அதே பக்திதான் என்னிக்கும். இப்படித்தான் இருந்
துண்டு இருக்கா. இதுதான் அவா நிலை. இதை அப்படியே சொல்லும்படியான ஒரு வார்த்தை... ஒரே ஒரு வார்த்தை... ஆங்கிலத்துலேர்ந்து சொல்லுவேளா?’’ என்று மிகத் தன்மையாகக் கேட்டார் மகா பெரியவா.

குடும்ப நண்பர் மட்டுமல்ல... அவருடன் வந்திருந்த தம்பதியர் மற்றுமுள்ள பக்தர்கள் அனைவருமே தவ முனிவரின் கேள்வியால் பிரமித்தார்கள்!

இத்தனை பெரிய விஷயத்தைக் குறிக்கக்கூடிய ஆங்கிலச் சொல்... அதுவும் ஒரே ஒரு வார்த்தை..! அப்படி ஒரு சொல் ஆங்கில அகராதியில் இருக்கிறதா என்று யோசித்தார்கள்.

குடும்ப நண்பரிடம் இருந்து பதில் இல்லை. அவர் யோசிக்க ஆரம்பித்தார். அவர் மட்டுமல்ல... ஆங்கிலம் கற்றுத் தேர்ந்தவர்களும் அன்றைக்கு அங்கே இருந்தனர். அவர்களும் யோசித்தார்கள்.

குடும்ப நண்பரைப் பார்த்து ஒரு கேள்வியை வீசிவிட்டு, மகா பெரியவா தன் சிப்பந்திகள் பக்கம் திரும்பினார். அன்றைக்கு ஆக வேண்டிய பணிகளுக்கு ஏதோ உத்தரவுகளை இடத் தொடங்கினார்.

நேரம் மெள்ள ஓடிக் கொண்டிருந்தது!

குடும்ப நண்பர் எந்த நிலையில் மகானுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தாரோ, அதே நிலையில் காணப்பட்டார். பெரியவா சொன்ன நிலையை விளக்கும் ஆங்கிலச் சொல் எதுவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறார். பிடிபடவில்லை. அமெரிக்காவில் குப்பை கொட்டி வந்தாலும்  ஆங்கிலம் படித்தவர்களுடன் பழகி வந்தாலும் இதற்கு உண்டான விடை மட்டும் கிடைக்கவில்லை!

தவிப்புடன் இருக்கிற அவரைப் பார்த்துப் பெரியவா சொன்னார்: ‘‘ஒண்ணும் அவசரப்பட வேண்டாம். நிதானமா யோசிங்கோ... கொஞ்சம் அங்கேயும் இங்கேயுமா நடந்து வேணா பாருங்கோ. ஞாபகத்துக்கு வந்தாலும் வரும். அப்புறமா என்கிட்ட வந்து சொல்லுங்கோ.’’

அதன்படி குடும்ப நண்பரும் வலது ஆட்காட்டி விரலால் மோவாயைத் தேய்த்து விட்டார். சிந்தனையைத் தட்டி விட்டார். அங்குமிங்கும் நடந்து பார்த்தார். ஆனால், அந்த ஆங்கில வார்த்தை மட்டும் மனசுக்குள் சிக்கவே இல்லை!

அவரை அழைத்து வந்த தம்பதியருக்கோ சங்கடமான சங்கடம். ‘சென்னைக்குத் திரும்ப நேரமாகி விட்டது’ என்று இளைஞருக்கு சைகை மூலம் தெரிவித்தனர். தங்களுடன் வந்த குடும்ப நண்பர், மகானிடம் இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டாரே என்று அவர்களுக்கும் ஒரு நெருடல்தான். என்ன செய்வது? அவரவர் கர்மாவை அவரவர் அனுபவிக்க வேண்டுமல்லவா? எனவே, அவரையும் பெரியவாளையும் மாறி மாறிப் பார்த்தபடி இருந்தனர்.

இளைஞர் எங்கெங்கோ நடந்து பார்த்தார். யோசித்துப் பார்த்தார். ‘தமிழ் மட்டுமே தெரியும்னு நினைச்ச ‘இவர்’ நமக்கு இப்படி ஒரு ‘டெஸ்ட்’ வெச்சிட்டாரே...’ என்று தவித்துப் போனார்.

ஒரு பதினைந்து நிமிடம் கடந்திருக்கும். ஆங்கில வார்த்தை பிடிபடாத நிலையில், தலை கவிழ்ந்தபடி பெரியவா முன் வந்து நின்றார்.
பெரியவா அவரைப் பார்த்தார்: ‘‘என்ன, அவ்வளவு நீளமான விஷயத்தை ஒரே வார்த்தையில் சொல்ற மாதிரி ஆங்கிலச் சொல் கிடைக்கலியோ?’’

சற்றே வெட்கத்துடன் உதட்டைப் பிதுக்கினார் இளைஞர்.

அங்கே கூடி இருந்த அனைவரும் பெரியவா அடுத்துச் சொல்லப் போகும் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

குடும்ப நண்பரைப் பார்த்துப் பெரியவா, ‘‘நான் ஒரு வார்த்தை சொல்றேன்... அது சரியா இருக்குமானு பாருங்கோ...’’ என்றார்.

(ஆனந்தம் தொடரும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE