பிளாஸ்டிக்கை ஒழிக்க ஊற்றுக்கண்ணை அழிப்போம்!

By காமதேனு

பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி மீண்டும் கூறியிருக்கிறார். இது பிளாஸ்டிக் ஒழிப்பில் நாம் இன்னமும் இலக்கை எட்ட முடியவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. உரிய கண்காணிப்பின்மை, தொடர்ச்சியான நடவடிக்கையின்மை போன்ற போதாமைகள்தான் இந்த நிலைக்குக் காரணம்.

2019 ஜனவரி 1 முதல், 14 வகை பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக 2018 ஜூனிலேயே முதல்வர் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதில்தான் தோல்விகளைச் சந்தித்து வருகிறது அரசு.

கடைகளில் சோதனை செய்து, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆனால், அது போதாது! இந்தப் பிரச்சினையின் ஊற்றுக்கண் எதுவென்று பார்த்து அதைத்தான் முற்றிலுமாக ஒழிக்க அரசு முன்வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படும் இடங்களைவிட, அவை உற்பத்தி செய்யப்படுகின்ற, விநியோகம் செய்யப்படுகின்ற இடங்களில்தான் கண்காணிப்பும் கட்டுப்பாடும் தேவை.

ஆரம்பத்தில் கண்காணிப்பு, அபராதம் என்றெல்லாம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் மக்களிடமும் இது தொடர்பான விழிப்புணர்வு இருந்தது. ஆனால், நாளடைவில் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகப் பெரும்பாலானோர் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கே திரும்பிவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE