முதுமை எனும் பூங்காற்று 24: நோயற்ற செல்வம்

By விவேக பாரதி

உடல் ஆரோக்கியம்தான் ஒரு மனிதரின் மிகப் பெரிய செல்வம் என்பார்கள். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில், உடல் எனும் இயந்திரம் நாள்பட நாள்பட பழுதடைய ஆரம்பிக்கும். உரிய முறையில் அதைப் பராமரித்து, பழுது பார்த்துவந்தால், பெரிய தொல்லைகள் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு நிம்மதியாக வாழ முடியும்.

ஒவ்வொரு முறையும் நம் உடல்நலன் பாதிக்கப்படும் போது ‘நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ என்று எண்ணி வருத்தப்படுவதுதான் இங்கு பல பிரச்சினைகளுக்கு அஸ்திவாரமிடுகிறது. ‘இந்த வயதில் இப்படித்தான் இருக்கும். அதற்கேற்ற முறையில் உடலைப் பராமரித்துக்கொள்ள வேண்டும்’ எனும் தெளிவு இருந்தால், இந்தப் பிரச்சினைகளைக் கடந்துவர முடியும்.

கடந்து வரலாம்

இதய சம்பந்தப்பட்ட நோய், சர்க்கரை, தைராய்டு, புற்றுநோய், பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி போன்றவை… நீண்ட காலம் இருக்கக்கூடிய, சற்று செலவு வைக்கக்கூடிய நோய்கள்.

இன்றைக்கு மருத்துவ உலகம் அளப்பரிய முன்னேற்றங்களைக் கண்டுவருகிறது. எந்த நோய்க்கும் தகுந்த மருத்துவ நிபுணரிடம் காண்பித்து சிகிச்சை பெற முடியும். இந்த நம்பிக்கை முதியவர்களுக்கு வேண்டும். ‘பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் நீடித்த கண்காணிப்பு இருந்தால் பெரிய சிக்கல்கள் வராமல் பார்த்துக்கொள்ளலாம்; அப்படி வந்தாலும் அவர்களைக் காக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்’ எனும் எண்ணம் இளைஞர்களிடம் இருக்க வேண்டும்.

நினைவாற்றல்

முதியவர்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை ஞாபகமறதி. குறிப்பிட்ட வயதுக்கு மேல் எல்லா விஷயத்தையும் வரிசையாகவும், நேர்த்தியாகவும் ஞாபகம் வைத்துக்கொள்வது சாத்தியமல்ல. சில சமயம் மனப்பிறழ்வுகூட ஏற்படலாம். சிந்திப்பது, கற்றுக்கொள்வது, ஞாபகம் வைத்துக்கொள்வது என்று எல்லாமே கடினமாகத் தோன்றும். முதுமை ஏற்படுத்தும் இந்தச் சிரமத்தை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.

உலகில் 12 சதவீதத்துக்கு மேல் 60 வயதைத் தாண்டியவர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 4.75 கோடி பேர் அல்சைமர்ஸ் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மறதி நோயாளிகளின் எண்ணிக்கையில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. சுமார் 40 லட்சம் பேர் மறதிநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 2030-ம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை 75 லட்சமாக உயரும் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

போதுமான தூக்கம், உடற்பயிற்சி, மிதமான உணவு, நினைவாற்றலைத் தக்கவைத்துக்கொள்ளும் பயிற்சிகள் போன்றவற்றின் மூலம் மறதி நோயின் பாதிப்புகளைக் கணிசமான அளவு குறைத்துக்கொள்ளலாம்.

உளவியல் பிரச்சினைகள்

உலகில், 60 வயதைக் கடந்த 15 சதவீதம் பேருக்கு மனநல பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் 18 சதவீதம் பேர் மன அழுத்தத்துடன் வாழ்கிறார்கள். சம்பாத்தியம், குடும்ப வாழ்க்கை, குழந்தைகளின் எதிர்காலம் என்று பல்வேறு பிரச்சினைகள், நெருக்கடிகள் மனிதர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவரது வாழ்க்கைப் பின்னணி சார்ந்து மன அழுத்தத்தின் அளவு வேறுபடலாம். ஆனால், இந்தியாவில் வாழும் முதியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளவே செய்கிறார்கள்.

மற்றவர்களிடம் மனம்விட்டுப் பேசுதல், பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் செலுத்துதல் என்று மன ஆரோக்கியத்தைப் பேணி காக்க எத்தனையோ வழிமுறைகள் உண்டு. அவற்றைப் பின்பற்றலாம்.

ஊட்டச்சத்துக் குறைபாடு

இந்தியாவில் 15 சதவீதம் முதியவர்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பதாகவும், 55 சதவீதம் பேர் அந்தப் பாதிப்பை எதிர்கொள்ளும் சூழலில் இருப்பதாகவும் ‘ஜர்னல் ஆஃப் ஃபேமிலி அண்ட் கம்யூனிட்டி மெடிசின்’ நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும் அபாயம் உள்ளது.

சத்தான உணவுகளை உட்கொள்ளுதல்தான் இதற்கு முக்கியத் தீர்வு. ஆனால், பொருளாதார ஏற்றத்தாழ்வு நிறைந்த நாடான இந்தியாவில் அது எத்தனை பேருக்குச் சாத்தியம் என்பது முக்கியக் கேள்வி. ஓரளவுக்கேனும் வருமானம் இருப்பவர்கள், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த முதியவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

கண், காது பிரச்சினைகள்

கண் பார்வைக் கோளாறு, காது தொடர்பான பிரச்சினைகள் இன்றைக்கு முதியவர்களுக்கு மட்டுமல்ல, இளம் தலைமுறையினருக்கும் ஏற்படுகின்றன. நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, எந்நேரமும் செல்போனில் கண் பதித்திருப்பது, காதில் இயர் போனை செருகிக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டிருப்பது என இருக்கும் இளைஞர்கள் இப்படியான பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். முதியவர்கள் மூப்பு காரணமாக இந்தப் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் நவீன மருத்துவத்தில், அரை மணி நேரத்தில் கண்ணில் அறுவைசிகிச்சை, வெளியில் தெரியாத அளவு காதில் பொருத்திக்கொள்ளும் உபகரணம் என்று ஏகப்பட்ட வசதிகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

பல் பிரச்சினைகள்

60 வயதைத் தாண்டியவர்களில் 20 முதல் 25 சதவீதம் பேர் செயற்கைப் பற்களைப் பொருத்தியிருக்கிறார்கள். 6 வயது குழந்தை முதல் சொத்தைப் பல் ஆரம்பமாகிவிடுகிறது. முன்பெல்லாம் பல்பொடி வைத்துக் கையினால் பற்களைத் தேய்ப்பார்கள். ஈறுகளை அழுத்தித் தேய்ப்பது பல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாத்தது. இன்றைக்குப் பல் பிரச்சினைகள் அதிகரித்திருக்கும் நிலையில், முதியவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களும் நல்ல தரமான பல்பொடியைக் கையால் பற்களில் தேய்க்கும் பழக்கத்துக்குத் திரும்பலாம்.

பல்லில் ஏதேனும் பிரச்சினைகள் வந்தாலும், அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் இலவச சிகிச்சையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட இடைவெளியில் பல் மருத்துவரிடம் பற்களை செக் - அப் செய்துகொள்வது நல்லது.

சிறுநீரக நோய், மலச்சிக்கல்

பெரும்பான்மையான பெரியவர்களுக்கு உள்ள பொதுவான பிரச்சினை - சிறுநீரக ஒழுக்கு. நாள்பட்ட வியாதியினால் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். அல்லது கழிக்க வேண்டும் என்ற உந்துதல் அடிக்கடி ஏற்படும். இதனால், பொது இடங்களில் பெரியவர்கள் சொல்லொணா துயரங்களை எதிர்கொள்வார்கள். உரிய மருத்துவ சிகிச்சைகள் மூலம் இந்தப் பிரச்சினையையும் சமாளிக்க முடியும். தவிர, பெரியவர்கள் அணியும் டயப்பர்களும் வந்துவிட்டன. வெளியிடங்களுக்குச் செல்லும்போது அவற்றை அணிந்துகொண்டால் பெரியவர்களின் மனச் சிக்கல் குறையும்.

மலச்சிக்கலும் முதியவர்களின் முக்கியப் பிரச்சினை. சில வகை உணவுகள், உட்கொள்ளும் மருந்துகள் போன்றவை மலச்சிக்கலை ஏற்படுத்திவிடுகின்றன. நார்ச்சத்து மிக்க உணவு, பழங்களை எடுத்துக் கொண்டால், இந்தச் சிக்கலையும் சமாளித்துவிடலாம்.
மனம் தளர வேண்டாம்!

உடல் உபாதைகள் இன்றைக்கு அனைவருக்கும் பொதுவான விஷயமாகிவிட்டன. எனவே, எந்த நோய் இருந்தாலும் மனத் துணிவுடனும், உரிய மருத்துவ சிகிச்சையின் துணையுடனும் முதியவர்கள் எதிர்கொள்ளலாம். ‘உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் தாங்கிக்கொள்ள…’ என்ற எண்ணத்தை பெரியவர்களுக்கு இளைஞர்கள் ஏற்படுத்த வேண்டும். அப்படி இருந்தால் வயோதிகத்திலும் வசந்தம் வீசும்!

(காற்று வீசும்…)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE