“தொண தொணன்னு பேசாதே. கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு சும்மா இரு” – பெரியவர்கள், சின்னவர்கள் என்றில்லாமல் எல்லா வயதினரும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவருக்கொருவர் இப்படிச் சொல்லிக்கொள்வார்கள். அதேசமயம், யாராவது கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால், அவர்களே வலிய சென்று, “ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய்...
ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்பார்கள். இதுதான் மனித மனம்.
வார்த்தைகளின் கனம்
முதியவர்கள் ஞாபக மறதி காரணமாக, சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள். இளவயதினர் இதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது முக்கியமான விஷயம். பலர் பொறுத்துக்கொண்டு, ‘இது முதுமை காரணமாக ஏற்படும் பிரச்சினை’ என்று உணர்ந்துகொள்வார்கள். ஒரு சிலர் எரிச்சலடைந்து, “எத்தனை தடவைதான் சொல்வீர்கள்... ஒரு தடவை சொன்னால் போதாதா, செய்ய மாட்டேனா?” என்று எரிந்து விழுவர். இத்தகைய புரிதலின்மை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பேசித் தீர்க்கும் பிரச்சினைகள் பல உண்டு என்றால், பேசாமல் மவுனத்தால் தீர்ந்துபோகும் பிரச்சினைகள் பல. அதனால்தான் ‘சொல்லாத சொல்லுக்கு அர்த்தங்கள் பல’ என்கிறார்கள்.
மவுனத்துக்குப் பல அர்த்தங்கள் உண்டு
‘மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி’ என்று சொல்வார்கள். இது காதல் விஷயத்தில் சரியானதாக இருக்கலாம். ஆனால், திருமண வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் மவுனம் காப்பது மனஸ்தாபத்தை ஏற்படுத்திவிடலாம். அதுபோன்ற நேரங்களில் மனம் திறந்து பேசுவதுதான் நல்லது.
சமீபத்தில், நடிகரும் எம்எல்ஏ-வுமான கருணாஸ், தனது மனைவியுடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் சொன்ன ஒரு அனுபவ நிகழ்வு, மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது. ஒரு படத்தை உருவாக்கும் முனைப்பில், திரைத் துறையில் சம்பாதித்த பணத்தையெல்லாம் அதில் போட்டுவிட்டாராம் கருணாஸ். கடன் கழுத்தை நெறிக்கும் தருணத்தில், தன் மனைவியிடம் பேசிய அவர், நகை, வீடு அனைத்தையும் விற்று கடனை அடைத்துவிடலாம் என்று கேட்டிருக்கிறார். அப்போது, அவரது மனைவி மவுனம் காக்காமல், “இவை அனைத்தும் நீங்கள் சம்பாதித்தவை. உங்கள் கவுரவத்துக்கு முன்னால் இவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை. உடனடியாக அதைச் செய்யுங்கள்” என்று அனைத்தையும் விற்க சம்மதித்ததாகச் சொன்னார் கருணாஸ். உரிய தருணத்தில், உரிய சொற்களைச் சொல்வதுதான் பயனுள்ள பேச்சு. அந்த நேரத்தில் மவுனத்தைக் கைகொள்வது அநாவசியமானது.
முதுமையில் மவுனம்
ஒரு முதியவர் மவுனமாக இருக்கிறார் என்றால், அதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். பணி ஓய்விற்குப் பின் பல எண்ணங்கள், பல எதிர்பார்ப்புகள் முதியவர்களுக்கு இருக்கும். தங்கள் பேச்சை யாரும் மதிக்க மாட்டார்கள் எனும் அவநம்பிக்கையும் இருக்கும். சிலர் அந்தப் பயத்தைக் கோபமான பேச்சாக மாற்றிவிடுகிறார்கள். சிலர் மவுனமாகிவிடுகிறார்கள்.
பேசினால் பிரச்சினை வரும் என்றால் மவுனமே சிறந்த ஆயுதம். பேச்சினால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளை மவுனத்தால் சாதித்துக்கொள்ள முடியும். மவுனத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த முடியும். ஏனெனில், வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகளுக்கு அவர்கள்தான் பொறுப்பு. தடித்த வார்த்தைகளால் மனஸ்தாபம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் முகம் பார்க்க முடியாமல் உறவு முறிந்துபோவதும் உண்டு.
இதனால்தான் பல ஆன்மிக வகுப்புகளிலும், உபவாச ஜெப கூட்டங்களிலும்கூட மவுன வகுப்புகள், பிரார்த்தனைகள் போன்ற
வற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மவுனத்தின் பலன்கள்
மவுனத்தினால் ஆற்றல் சேமிக்கப்படுகிறது. இதனால், உடல்நலமும் மனநலமும் மேம்படும். அதேசமயம், நமது மவுனத்தின் மூலம் அடுத்தவர்கள் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மவுனம் என்பது அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் இருக்கத்தானே தவிர, அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் விஷயமல்ல. ஆனால், தங்களது முக்கியத்துவத்தை உணராத இளம் தலைமுறையினரிடம் முதியவர்கள் பயன்படுத்தும் அதிகபட்ச ஆயுதமே இந்த மவுனம்தான்.
இத்தனை வருட வாழ்க்கையில், முதியவர்கள் பெற்றிருக்கும் அனுபவப் பாடங்களின் மதிப்பைப் புரிந்துகொள்ள இளைஞர்கள் மனது வைக்க வேண்டும். முதியவர்களும் இளம் தலைமுறையினரின் தடுமாற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் அவர்களிடம் மனம்விட்டுப் பேச வேண்டும்.
அனுபவப் பாடம்
சில சமயம் இளம் தலைமுறையினரும் திடீரென்று மவுனமாகிவிடுவார்கள். அதைப் புரிந்துகொள்ள முதியவர்களும் முன்வர வேண்டும். என் நண்பரின் மனைவி வெளிநாட்டில் படித்தவர். நடுத்தர வர்க்க குடும்பங்களைப் பொறுத்தவரை, பிள்ளைகள் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால், வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்துத்தான் பெரும்பாலும் பணத்துக்கு ஏற்பாடு செய்வார்கள். அந்தப் பெண்ணின் பெற்றோரோ, பெண் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும்போது கடனை அடைத்துவிடலாம் என எண்ணித் துணிந்து, வீட்டை அடகுவைத்து பெண்ணைப் படிக்க வைத்தார்கள். ஆனால், வேலைக்குப் போக ஆரம்பித்த சில மாதங்களிலேயே நல்ல வரன் அமையவே, தாமதம் செய்யாமல் மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.
பிரச்சினையே பின்னர்தான் ஆரம்பித்தது. அப்பெண்ணின் தந்தை, மகளின் வருமானம் இல்லாமல், பணி ஓய்வு பெற்றபின் கடனைத் திரும்பச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். அந்தப் பெண்ணும் என்ன செய்வதென்று தெரியாமல் மனவருத்தத்தில் அமைதியாக இருந்தார். இதைக் கவனித்த, மாமியார் மருமகளின் அசாதாரண மவுனத்தின் பின்னே வலுவான காரணம் இருக்கும் என்பதை
உணர்ந்துகொண்டார். என்ன நடந்தது என்று அவர் விசாரிக்க, கடன் பிரச்சினையில் தன் தந்தை தவித்துக்கொண்டிருப்பதை மனம் திறந்து சொன்னார் அந்தப் பெண்.
இதைக் கேட்ட மாமியார், ஒரு கணம்கூட தாமதிக்காமல் உடனே தங்கள் வீட்டுப் பத்திரத்தை எடுத்து அந்தப் பெண்ணின் கையில் கொடுத்துவிட்டார். “இதை அடமானம் வைக்க உனக்கு உரிமை எழுதித் தருகிறோம். இதை வங்கியில் வைத்து கடன் வாங்கி,
உன் வீட்டுக் கடனை முடித்துவிடு. பின்னர், வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் பணத்தில் இந்த வீட்டுப் பத்திரத்தை மீட்டுத் தந்தால் போதும்” என்று தன் மாமியார் தன்னிடம் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்துவிட்டார் அந்தப் பெண். அந்தக் கணம் முதல் அவரை சொந்தத் தாயாகவே அந்தப் பெண் மதிக்கிறார்.
ஆம். எப்படியான தருணத்திலும் பெரியவர்கள் நம்மைப் புரிந்துகொள்வார்கள் அல்லது புரிந்துகொள்ள முயல்வார்கள். அப்படி புரிந்துகொள்ளவில்லை என்றால் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டியது நமது கடமை.
நம் மவுனத்தினால் பல தவறுகளைக் களைய முடியும். நம் மவுனத்தினால் அடுத்தவர்களின் அன்பைப் பெற முடியும். மவுனத்தினால் பல காரியங்களைச் சாதிக்க முடியும். எனவே, மவுனத்தை ஒரு ஆக்கபூர்வ ஆயுதமாகப் பயன்படுத்துவது தவறில்லை. அதேசமயம், வாய் திறந்து பேசியே ஆக வேண்டும் எனும் சூழல் வரும்போது அந்த மவுனத்தைக் கைவிட்டு மனம் திறப்பதே புத்திசாலித்தனம்.
இதை தலைமுறை வித்தியாசம் இல்லாமல் அனைவரும் புரிந்துகொண்டால், இல்லத்தில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது!
(காற்று வீசும்…)