கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
நான்கு ஆண்டுகளாகத் தள்ளிப்போட்ட கண் புரை அறுவைசிகிச்சையைச் செய்துகொண்ட கையோடு, ஓய்வில்லாமல் கூட்டங்களிலும், போராட்டங்களிலும் கலந்துகொள்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மதுரையில் தொடர் அறவழிப்போராட்டம் நடத்திவரும் இஸ்லாமியர்களை ஆதரித்துப் பேசுவதற்காக கறுப்புக் கண்ணாடியோடு வந்திருந்தவரை ‘காமதேனு’ பேட்டிக்காகச் சந்தித்தேன்.
“தமிழகத்தில் இந்தச் சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் சொல்லுங்கள்” என்று முதல்வரும், “சட்டத்தின் சில கூறுகள் குறித்து சந்தேகம் கேட்டிருக்கிறோம்” என்று வருவாய்த் துறை அமைச்சரும் சொல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஹிட்லரின் பாசிச ஜெர்மனியில் எடுக்கப்பட்ட முயற்சிகளே இந்தச் சட்டங்களின் முன்னோடி. நாஜிக்களின் பிடியிலிருந்து ஜெர்மனி விடுபட 50 ஆண்டுகள் ஆனது. அதே பாதிப்பு இந்தியாவுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தொடர்ந்து போராடுகிறோம். இந்த மசோதா வந்தபோதே, “நீங்கள் பாசிச எண்ணம் கொண்ட பாஜக பக்கமா, மதச்சார்பின்மையைப் பாதுகாப்பவர்கள் பக்கமா?” என்று கேட்டோம். சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, இப்போது விளக்கம் கேட்கிறோம் என்று எடப்பாடி அரசு கபட நாடகமாடுகிறது. புரிந்தும் புரியாதது போல நடிக்கிறது.