மற்றவை வெண் திரையில் 4 - இதுதான் ரஜினி ஸ்டைல்!

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

நான் படித்த திருவல்லிக்கேணி பள்ளிக்கூடம், கதைசொல்லிகளின் கனவுலகம். படிப்பு பற்றிய பெரிய அழுத்தங்கள் கிடையாது. வைணவ நெறி ஆழமாக இருந்தாலும் ஒரு பன்முகத்தன்மையை இயல்பாகத் தழுவிய பள்ளி. தமிழ் வகுப்பில் கோபால் சக்கரவர்த்தி சார் கம்பராமாயணத்தை உருக்கமாகச் சொன்னால், சாமுவேல் அய்யா ஓவியம் சொல்லிக்கொடுப்பதோடு சாம்ஸன் டலேலா கதையும் சொல்லுவார். வகுப்பாசிரியர் வி.எஸ். சேஷாத்ரி சாயங்காலம் நடிக்க வேண்டிய ‘நரகாசுரன்’ நாடகத்தின் வசனத்தை எங்களிடம் நடித்துக்காட்டுவார். என் பிரிய வரலாற்று ஆசிரியர் துரைக்குட்டி, ‘மெய்ஜி ரெஸ்டொரேஷன்’ என்று எங்களை ஜப்பானுக்கு அழைத்துச் செல்வார். ஆனால், என்னைப் பொறுத்தவரை மிகச் சிறந்த கதைசொல்லி என் வகுப்புத் தோழன் ஏ.என்.சேஷாத்திரிதான். (ஏஎன்எஸ் என்று தான் விளிப்போம். வகுப்பில் மொத்தம் 4 சேஷாத்திரிகள்!)

‘முழுசா சொல்லிடாதே!’

டீச்சர் வராத பீரியட்களில் யாராவது ஒரு மாணவன் ஏதாவது செய்து வகுப்பை அமைதியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் சினிமா கதைதான் ரகசியமாகச் சொல்லப்படும். ஏஎன்எஸ் பார்த்த புதுப் படம்தான் எங்களுக்கு 45 நிமிட வைபவம். வகுப்பில் நடுநாயகமாக நின்றுகொண்டு ஸ்டைலாக ஆரம்பிப்பான். கதையை வெறுமனே சொல்ல மாட்டான். நடித்துக்காட்டுவான். இடையில் சரளமான கெட்ட வார்த்தைகளைச் சன்னமாகச் சொல்லி வகுப்பைப் பரவசப்படுத்துவான். ஒருமுறை ‘இதயக்கனி’ படக்கதையைச் சொல்லும் போது திடீரென்று பக்கத்து கிளாஸ் மாஸ்டர் வர, செமையாக மாட்டிக்கொண்டோம். விவரம் கேட்டுவிட்டு பெருத்த சிரிப்புடன் சொன்னார்: “கதைய நல்லா சொல்லு. ஆனா, ராதா சலூஜாவிடம் எம்ஜிஆர் செய்வதையெல்லாம் அப்படியே சொல்லாதே!”

தனித்து நின்ற ரஜினி

ஏஎன்எஸ் சொன்னதில் மனதில் பசையாய் ஒட்டிக்கொண்ட படம், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1977-ல் வெளியான ‘ஆடு புலி ஆட்டம்’. என்னை ரஜினி ரசிகனாய் மாற்றிய படம் என்றுகூட சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் கடுப்பேற்றிக்கொண்டிருந்தார்கள். ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கரை ரொம்பவே பிடிக்கும். ஆனால், மிக 
மலிவான படங்களில் நடிப்பதாகத் தோன்றும். சிவகுமார்தான் ஹிட்டடித்துக் கொண்டிருந்தார். ‘பொம்மை’ பத்திரிகையில் கடைசி ஐந்து பக்கங்களில் சினிமா கதை வசனம் வரும். அதில் ‘மூன்று முடிச்சு’ கதையைப் படித்ததில் ரஜினி வேடம் பிடித்தது. படம் பார்க்க முடியவில்லை.

அப்போது வெளியான மற்ற படங்களைப் போலவே, ‘ஆடு புலி ஆட்ட’த்திலும் ரஜினிக்கு வில்லன் வேஷம். எனினும், ரஜினி ஸ்டைல் பிரபலமாகக் காரணமான படமாக அது அமைந்தது. “இதுதான் ரஜினி ஸ்டைல்” என்று படத்திலேயே அடிக்கடி சொல்வார் ரஜினி. படத்தில் அவர் பெயரே ரஜினிதான். எழுதியவர் பெருமை எல்லாம் அந்தக் காலத்தில் தெரியவில்லை.

சுவாரசியமான கதை

ஏஎன்எஸ், படத்தின் ஆரம்பக் காட்சிகளைச் சொல்ல ஆரம்பித்தவுடனேயே சுவாரசியம் பற்றிக்கொண்டது. கமலும் ரஜினியும் ஆடு புலி ஆட்டம் ஆடுகிறார்கள். முடிந்தவுடன் இருவரும் சேர்ந்து கொள்ளையடிக் கிறார்கள். அட, இருவருமே கெட்டவர்களா என்ற ஆச்சரியம் கதைக்குள் இழுத்துச் சென்றது. அந்தக் காலத்தில் ஹீரோ நல்லவன்; வில்லன் கெட்டவன். இரண்டும் தனித்தனி டிபார்ட்மென்ட். ஆன்ட்டி ஹீரோ, அங்கிள் ஹீரோ எல்லாம் வராத காலம். கமல்தான் ஹீரோ என்று தெரிகிறது. எப்படி கொள்ளைக் கூட்டத் தலைவனாக ஒரு ஹீரோ இருக்க முடியும்? இரட்டை வேஷம் என்றாலும் பரவாயில்லை. அதுவும் இல்லை என்று முதலிலேயே வேறு தெளிவுபடுத்திவிட்டான். பின் எப்படி? எனக்கு இருப்புகொள்ளவில்லை.

இணையற்ற ஏஎன்எஸ்

ஏஎன்எஸ் மெதுவாகக் கதையை நகர்த்துவான். ஒவ்வொரு வசனத்தையும் மாடுலேஷனுடன் சொல்வான். ஒவ்வொரு காட்சியும் கச்சிதமாக ‘மனமே ஒரு சோலையா’ என்ற பாடலில் ரஜினி சிகரெட்டைத் தாளத்திற்கேற்ப மாற்றுவதை நடித்துக் காட்டுகையில் எங்கள் கண்களுக்கு மட்டும் ஏஎன்எஸ் வாயில் சிகரெட் தெரியும். ஒரு பால் பாயின்ட் பேனாவை அசாத்தியமான லாவகத்துடன் சிகரெட் போல பயன்படுத்துவான். “இதுக்குப் பேர்தான் கல்யாணமா?” என்று நக்கலாக வசனம் பேசுகையில் ரஜினி முகமே தெரியும் எங்களுக்கு. நெற்றியில் கற்றையாய் வந்து விழும் தலைமுடியை ஒரு கையால் தள்ளியவாறுதான் கதை சொல்வான்.
யாராவது அவன் வீச்சைக் குறைக்கும் வண்ணம் ஏதாவது கேட்டாலோ, செய்தாலோ நறுக்கென ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி அவர்களின் வாயை மூடுவான். நாங்களும் கதையின் போக்கை இடைமறிக்கும் எந்த சக்தியையும் அனுமதித்ததில்லை. அதில் ஒரு ராணுவ ஒழுங்கை ஒற்றுமையாகக் கடைப்பிடிப்போம். வேறு என்ன செய்ய? புதுப் படம் வந்தால் அதை உடனே பார்ப்பதிலோ அல்லது அதைக் கதையாகச் சொல்வதிலோ ஏஎன்எஸ்ஸிற்குப் போட்டியே கிடையாது.

பலித்த கணிப்பு

கதையை முடித்தவுடன் ஒன்று புரிந்துவிட்டது எனக்கு; இந்த ரஜினி விரைவில் கமலை மிஞ்சப்போகிறார் என்று. ரஜினி பற்றி வரும் காட்சிகளில் எல்லாம் நாங்கள் கைதட்டினோம். அந்த ஸ்டைல், அந்த வசன உச்சரிப்பு, அந்த அலட்சிய உடல் மொழி அனைத்தும் எங்கள் கண்களுக்குத் தெரிந்தன - படம் பார்க்காமலேயே. கமல் பாத்திரம் சுத்தமாக எடுபடவில்லை. இத்தனைக்
கும் கமலின் உணர்ச்சிக் குவியலான நடிப்பு எனக்கு அப்போதே பிடிக்கும். இளம் நாயகர்களில் காதல் இளவரசன் கமல்தான் எங்கள் கவனத்தைப் பெற்றிருந்தார்.

‘ஆடு புலி ஆட்டம்’ மசாலா படம்தான். போலீஸ் வேலை கிடைக்காததால் கிரிமினலாக மாறும் மதன், பின் மனம் மாறி தன்னுடன் உள்ள தீயவர்களை அழிக்கும் கதை. பல வருடங்கள் கழித்து இதே கதை ‘காக்கி சட்டை’ அணிந்து புதுப்பொலிவு பெற்றது. ஆனால், கதை பற்றியெல்லாம் எங்களுக்கு அப்போது கவலை இல்லை. ஸ்டைல்தான் முக்கியம். அதுவும் ரஜினி ஸ்டைல். ‘இதுதான் ரஜினி ஸ்டைல்!’ என்ற வசனம்தான் நெருப்பு போல பற்றிக்கொண்டது. காலப்போக்கில் அது எங்கள் நடை, உடை, பாவனைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தது.

பரட்டைத் தலையை சீப்பால் சீவாமல் கையால் கோத ஆரம்பித்தோம். பேனாவோ பென்சிலோ ஏதாவது ஒன்றை எறிந்து வாயில் கப்பென்று பிடித்தல் ரஜினிரசிகருக்கு இருக்க வேண்டிய முக்கியத் தகுதியாகவும் திறனாகவும் இருந்தது. ஏஎன்எஸ் திருட்டு தம் அடிப்பதாகத் தகவல் வந்தது. நிச்சயம் அவன் சிகரெட்டை வாயில் தூக்கிப் போட்டு பிடிக்க முயன்றிருக்க வேண்டும்.

ரசிகர் கோஷ்டிகள்

வகுப்பும் ரஜினி - கமல் என ரசிகர் கூட்டங்களாய்ப் பிளவுபட ஆரம்பித்தது ‘ஆடு புலி ஆட்டம்’ கதை சொல்லலுக்குப் பிறகுதான். சில வருடங்களில், சேர்ந்து நடிப்பதை நிறுத்த இருவரும் ஒத்திசைந்து பிரிந்து, திரை உலகின் இரு துருவங்களாக மாற… எங்கள் வகுப்புக் குழுக்களும் தெளிவாகப் பிரிந்து செயல்பட ஆரம்பித்தன. ஒன்பதாம் வகுப்பு சென்ற பின்னர், வகுப்பில் நின்றபடி கதை சொல்வது குறைந்தும் போனது. ஆனால், பி.டி. பீரியடில், விளையாடாமல் கதை கேட்கும் கோஷ்டி ஒன்று உருவானது. ஏஎன்எஸ் மைதானத்தின் மூலையில் நின்று சுருக்கமாகக் கதை சொல்வான். அவன் அபிப்பிராயங்கள்தான் எஙகளுக்கு இறுதித் தீர்ப்புகள்.
‘ஆடு புலி ஆட்ட’த்தை ஓரிரு ஆண்டுகள் கழித்து டி.வியில்தான் பார்க்க முடிந்தது. கமல்- ஸ்ரீபிரியா காதலும், 
‘வானுக்குத் தந்தை எவனோ’ பாடலும் மனதில் ஒட்டிக்கொண்டன. கமல் வரும் பாகத்தையெல்லாம் ஏஎன்எஸ் மிகவும் குறைத்துச் சொல்லியிருப்பது தெரிந்தது. இருந்தும் நான் ரஜினி ரசிகனாகத்தான் படம் பார்த்தேன்.

நட்பை வளர்த்த படம்

பெரிய வெற்றி பெறாவிட்டாலும், ‘ஆடு புலி ஆட்டம்’ தமிழ்த் திரையுலகில் முக்கியமான படம். இயக்குநர் மகேந்திரன் எழுதிய கதை, வசனம் என்று பல வருடங்கள் கழித்துதான் தெரிந்துகொண்டேன். பல ஆதார நட்புகளையும் இந்தத் திரையாக்கம் வளர்த்துவிட்டதாக நான் நம்புகிறேன். ‘அவள் அப்படித்தான்’ படம் ஆரம்பித்தபோது கமல், ஸ்ரீபிரியாவைக் கூட்டிவரக் காரணமாக இருந்தார். ‘முள்ளும் மலரும்’ படத்தின் திரைக்கதையை எழுதியபோதே ரஜினியை மகேந்திரன் தேர்வு செய்கிறார். ரஜினியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பிறகு 25-க்கும் மேற்கொண்ட படங்களை இயக்குகிறார் எஸ்.பி.முத்துராமன். எல்லாம் ‘ஆடு புலி’ ஆட்டம்’ திரையாக்கத்தில் ஏற்பட்ட நட்புகளின் பலன்தான்.

ஏஎன்எஸ்ஸை ஏன் தலையில் வைத்துக் கொண்டாடினோம்? அவனுக்கு ரஜினி ஏன் பிடித்தது? வைதீகக் குடும்பத்தில் பிறந்த சேஷாத்திரி, ஒரு கலகக்காரன். கலைந்த தலை முடியும், சட்டையில் மேல் பட்டன்கள் போடாத அலட்சியமும், வாத்தியாரிடம் என்ன அடி வாங்கினாலும் அஞ்சாத தன்மையும், கட் அடித்து படம் பார்ப்பது மற்றும் திருட்டு தம் அடிப்பது போன்ற ஹீரோயிசங்களும் அவன்பால் எங்களை ஈர்த்தன. மென்மை நாயகர்கள் மத்தியில் வந்த முடி கலைந்த, கறுத்த ரஜினியை ஏஎன்எஸ்ஸிற்குப் பிடித்திருந்தது இயல்புதானே!

படங்கள் உதவி: ஞானம்.
(திரை விரியும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE