கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா, கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானங்கள் என்று அத்தனை நடைமுறைகளையும் பயன்படுத்திப் பார்க்கிற சுறுசுறுப்பான எம்பி, தேர்தலுக்குப் பின்னரும் 5 புத்தகங்களை எழுதியுள்ள பரபரப்பான எழுத்தாளர் என்று பன்முகம் உண்டு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு. விசிக ஒரு ஜாதிக்கட்சி என்று பாமக, பாஜக போன்றவர்கள் ஒரு பக்கம், விசிகவிடம் வீரியம் போதாது என்று பட்டியலின முற்போக்காளர்கள் இன்னொரு பக்கம் போட்டுத்தாக்கும் சூழலில், அவருடன் ஒரு பேட்டி.
சிஏஏவுக்கு எதிராக திருச்சியில் விசிக நடத்திய பேரணிக்கு எப்படி இவ்வளவு பேர் திரண்டார்கள்?
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் மிகத் தீவிரமாக போராடுகிறது விசிக. பாஜக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வார்கள் என்று தெரிந்ததால்தான், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே சனாதன எதிர்ப்பு மாநாட்டை நடத்தி, மதச்சார்பற்ற சக்திகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்தச் சட்டத்தால் இந்தியர்கள் எல்லோருக்குமே பாதிப்பு என்றும் குறிப்பாக பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் எடுத்துரைத்தோம். அஸ்ஸாம் மாநிலத்தில் இந்தச் சட்டத்தால் குடியுரிமை இழந்த இந்துக்களில் அதிகமானோர் நாமசூத்ரா என்கிற வங்கத்து பட்டியலினம் தான். பிரிட்டிஷ் ஆட்சியில் அஸ்ஸாம் தோட்டங்களில் வேலை செய்வதற்காக கிழக்கு மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் அவர்கள். இது இந்து முஸ்லிம் பிரச்சினையல்ல... ஜனநாயக சக்திகளுக்கும், சனாதன சக்திகளுக்கும் இடையேயான போராட்டம் என்று எடுத்துரைத்தோம். அந்தத் தொடர்ச்சியான செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றிதான் திருச்சியில் 5 லட்சம் பேர் கூடிய பிரம்மாண்ட பேரணி.