மண்ணீரல்தானே இல்லை...  மனசு இருக்கே!- பிரதீஷின் போராட்ட வாழ்க்கை

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

உடலில் சின்னப் பிரச்சினை வந்தாலும், உலகத்தையே சபித்துக்கொண்டு தங்களைச் சுருக்கிக்கொள்பவர்கள் உண்டு. அதேசமயம், உடல் ரீதியான குறைகளைச் சிறிதும் சட்டை செய்யாமல் சமூகத்துக்காக உத்வேகத்துடன் உழைப்பவர்களும் உண்டு. இதில் இரண்டாவது ரகம் தக்கலை பிரதீஷ்.

நீராதாரங்களைப் புனரமைத்தல், மரம் நடுதல் என சூழல் நேசத்துடன் சுறுசுறுப்பாக இயங்கிவரும் பிரதீஷ், விபத்து ஒன்றில் கோமா நிலைக்குச் சென்று மீண்டுவந்தவர். விபத்தின் விளைவாக மண்ணீரலைப் பறிகொடுத்ததுடன், தெளிவாகப் பேசும் திறனையும் இழந்தவர். ஒரு விடுமுறை தின காலையில் தக்கலை பகுதியில் குளத்தில் இறங்கி ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டிருந்த பிரதீஷைச் சந்தித்தேன்.

“பக்கத்துல ஆற்றுவிளாகம் என்னோட ஊர். அப்பா கனகராஜ் சத்துணவு அமைப்பாளரா இருந்தார். வீட்ல நாங்க ஏழு பிள்ளைங்க. வறுமையான சூழலால பிளஸ் டூ வோட படிப்பை நிப்பாட்டிட்டு கட்டிட வேலைக்குப் போயிட்டேன். சின்ன வயசுல இருந்தே நாட்டுக்குச் சேவை செய்யணும்னு ஆசை. ரெண்டு தடவை ஆர்மி செல க்‌ஷனுக்கும் போனேன். ஆனா, தேர்வாக முடியல. ஒரு நாள் சென்ட்ரிங் வேலைக்குப் போனப்போ ரெண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்துட்டேன். அதுல என்னோட மண்ணீரல் உருத்தெரியாம போயிடுச்சு. வயித்துக்குள்ள ரத்தம் பயங்கரமா கசிந்திருந்தாலும் ஒரு சொட்டுகூட வெளியில் வரல. உள்ளேயே கட்டியா நின்னுருச்சு. ஒரு மாசத்துக்கு மேல கோமா நிலையில இருந்தேன். ரெண்டு மாசம் கழிச்சுத்தான் டிஸ்சார்ஜ் ஆனேன். தலையிலும் ரத்தக்கசிவு இருந்ததால அதையெல்லாம் சரிசெய்ய கழுத்துல துவாரம் போட்டாங்க. அப்புறம், இயல்பா இருந்த பேச்சுத்திறனும் போயிடுச்சு” என்று வலிமிகுந்த தன் கடந்த காலத்தைச் சொன்ன பிரதீஷின் வார்த்தைகளைப் புரிந்துகொள்வதே அத்தனை சவாலாக இருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE