இனியும் ஊராட்சிப் பணிகள் முடங்கக் கூடாது!

By காமதேனு

பல்வேறு இழுபறிகளுக்குப் பிறகு, ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்து ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்றுக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சிப் பணிகள் பழையபடியே முடங்கிக்கிடப்பதாகத் தகவல்கள் வருகின்றன. போதிய நிதி இல்லாததும், நிதியைப் பயன்படுத்தும் விஷயத்தில் புதிய விதி புகுத்தப்பட்டிருப்பதும்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள்.

ஏற்கெனவே, உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கவில்லை. மாநில அரசும் குறைவான நிதியையே ஒதுக்கிவருவதால், அடிப்படைப் பணிகளையே மேற்கொள்ள முடியாமல் புதிய நிர்வாகிகள் திகைத்து நிற்கிறார்கள். பல ஊராட்சிகளில் போதிய நிதி இல்லாததால், தங்கள் சொந்தச் செலவில் பணிகளை மேற்கொள்வதாகப் பலர் குறிப்பிடுகிறார்கள்.

இது தவிர, ஊராட்சித் தலைவர்களுக்குக் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரம் பறிக்கப்பட்டு, ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நிதியைக் கையாளும் வகையில் புதிய விதி கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதுவும் நடைமுறைப் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருப்பதாகப் புகார்கள் எழுகின்றன. முறைகேடுகளைத் தடுப்பதற்காக  கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த விதிமுறையின் நோக்கம் நல்லதுதான் என்றாலும், இதனால் பணிகள் தாமதமாவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்விஷயத்தில் நடைமுறைச் சிக்கல்களைக் களைய அரசு உடனடியாக முன்வர வேண்டும். இது தொடர்பாக ஊராட்சித் தலைவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிப்பதும் பலன்தரும்.

மக்களின் அடிப்படை வசதிகளை வழங்குவது முதல், மத்திய - மாநில அரசுகளின் திட்டங்களைச் செயல்படுத்துவது வரை பல்வேறு பணிகளைச் செயல்படுத்தும் ஊராட்சி நிர்வாகம், இப்படி முடங்கிக் கிடப்பதைத் தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு உரிய தீர்வு காண வேண்டும். அப்போதுதான், அடுத்ததாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்று மக்கள் பணியாற்ற வருபவர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE