உமா
uma2015scert@gmail.com
மாணவர்களுக்குத் தரமான கல்வி, திறன் வளர்ப்பு, சமூக அக்கறை, நற்பண்புகள் ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு ‘அன்பாசிரியர்’ விருதை ‘இந்து தமிழ் திசை’ வழங்கிவருவதை அறிந்திருப்பீர்கள். சமீபத்தில் நடந்த ‘அன்பாசிரியர்’ விருது தேர்வுக்குழு உறுப்பினராகச் சென்றிருந்தேன். அப்போது, தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பள்ளி நூலகங்கள் இயங்கும் விதம் தொடர்பாக அவர் சொன்ன வார்த்தைகளை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.
கவலையளிக்கும் சூழல்
“விருதுக்காக ஆசிரியர்களிடம் நேர்காணல் செய்ய, ‘இந்து தமிழ் திசை’ வடிவமைத்த வினாக் குறிப்புகளில் ஒரு முக்கிய அம்சம், பள்ளி நூலகம் சார்ந்தது. மாணவர்களிடம் வாசிப்பு தொடர்பான ஈடுபாட்டை வளர்ப்பது குறித்த வினா அது. மொத்தம் 17 ஆசிரியர்களை நேர்காணல் செய்தேன். ‘பள்ளியில் நூலகப் பயன்பாடு உள்ளதா? மாணவர்கள் புத்தகங்களை வாசிக்க என்ன முயற்சிகள் மேற்கொள்கின்றனர்? நீங்கள் வாசிக்கிறீர்களா? நீங்கள் சமீபத்தில் வாசித்த, தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எது?’ எனும் கேள்விகள், ஒவ்வொரு ஆசிரியரிடமும் முன்வைக்கப்பட்டன.