மற்றவை வெண் திரையில் - 3: ஜெமினி சுமைதாங்கிய கலைஞர்

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

அரும்பாக்கத்தில் குடியேறிய காலத்தில் வீடு தேடி வருபவர்கள் ஒரு சொம்புத் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு செல்லமாகச் சாட ஆரம்பிப்பார்கள். “வீட்டைக் கண்டுபிடிச்சு வர எவ்வளவு நேரமாகுது… வேற இடமே கிடைக்கலையா?” என்பார்கள். ஜெகன்னாத நகரில் சில வீடுகள் மட்டும் இருந்தபோதும், வ.உ.சி தெரு என்ற பெயரில் மூன்று இருக்கும், மெயின் ரோட்டிலிருந்து வருகையில். இஸ்ரவேல் மளிகை, மீனா கபே, பிரேம்ராஜ் டைப்பிங் இன்ஸ்டிடியூட் என்று எல்லா அடையாளங்களையும் சொன்னாலும் அரை மணி நேரத் தேடல் உறுதி. இருந்தாலும் சொந்தக்காரர்கள் வந்து போய்க்கொண்டுதான் இருந்தார்கள்.

எனக்கு சேப்பாக்கத்தைவிட அரும்பாக்கம் மிகவும் பிடித்திருந்தது. அதற்கு முக்கியக் காரணம், விஜயா தியேட்டர். கீற்றுக் கொட்டகை. பகல் நேரத்தில் காட்சிகள் கிடையாது. மாலை காட்சிக்கு ஒரு படம். இரவு காட்சிக்கு வேறொரு படம். இன்னும் சொல்லப்போனால், இரவுக் காட்சி மட்டும் இரண்டு படங்கள் எனலாம். அதாவது மாலைக் காட்சி ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்றும், இரவுக் காட்சி ‘திக்கு தெரியாத காட்டில்’ என்றும் இருந்தால், முதலில் ‘திக்கு தெரியாத காட்டில்’ காட்டப்படும். பின்பு அதே டிக்கெட்டில் இரண்டாவது படமாக மாலைக் காட்சிப் படமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரையிடுவார்கள். தரை டிக்கெட்: 65 பைசா. பெஞ்ச்: ஒரு ரூபாய். சேர்: ரூ.1.30.

வீட்டில் தங்கும் உறவினர்கள் இரவுக் காட்சிக்குச் செல்வதுண்டு. “ரூபாய்க்கு ரெண்டு படம் மாப்ளே!” என்று தம்பியிடம் சிலாகித்தார் கரூரிலிருந்து வந்த ஒரு தூரத்துப் பெரியப்பா. படத்துக்குப் போகாவிட்டாலும் இரவில் இரண்டு படங்களின் ஒலிச் சித்திரம் காற்றில் அலைந்து காதை வந்தடையும். சில சமயம் சாலிகிராமம் ராஜேந்திரா கொட்டகையின் பட வசனமும் கலந்து கேட்கும். அரும்பாக்கத்திற்கும் சாலிகிராமத்திற்கும் இடையே புல் தோப்புதான் இருந்தது அப்போது.

சுமார் நான்கு நாட்களுக்கு ஒரு முறை படம் மாறும். ‘இன்றே கடைசி’ என்று போஸ்டரின் மீது துண்டு நோட்டீஸ் ஒட்டினால் அடுத்த படம் என்ன என்ற ஆவல் மேலிடும். அடுத்த நாள் அதிகாலை புதுப் பட போஸ்டர் பார்த்த பின் நிம்மதிப் பெருமூச்சு வரும். எல்லாப் படங்களும் கலந்து வரும். அங்கு நான் பார்த்த இரட்டைப் படங்களின் கலவை சுவாரசியமானது. இரண்டில் ஒரு படம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்போது உடன் பார்த்த படத்தின் பெயர்கூட காலப்போக்கில் மறந்துபோகும். அப்படி என்னைப் பெரிதும் பாதித்த படம் ‘சுமைதாங்கி’.

ஜெமினி கணேசன் ஒரு எட்டாம் வகுப்பு மாணவனின் ஆதர்ச கதாநாயகனாக இருப்பது கடினம். எனக்கு எம்ஜிஆர் பைத்தியம். சிவாஜி ரசிப்பு படத்தைப் பொறுத்தது. ஜெமினி கணேசன் பாடல்கள் ‘ஒலியும் ஒளியும்’ நிகழ்ச்சியில் வந்தால்கூட பார்க்க மாட்டேன். அந்த ஜிப்பாவும், மெல்லிய மீசையும், குழைந்த குரலும் என்னை ஏனோ வசீகரிக்கவில்லை. ஆனால், அம்மாவிற்கு ஜெமினி படங்கள் பிடிக்கும்.

அம்மாதான் என் இலக்கிய ஆசான். காமெடி, டிராஜடி என்று இரு வகைகளை ஷேக்ஸ்பியர் நாடகங்களின் வழியே அம்மா அறிமுகம் செய்துவைத்தபோது எனக்கு பதின்மூன்று வயதிருக்கும். தனக்கு சினிமா பெரிதாகப் பிடிக்காது என்று சொல்லிக்கொண்டே நல்ல படங்களின் பட்டியல் தருவாள் அம்மா. அம்மா நல்ல படங்கள் என்று குறிப்பிட்டால் அதில் ஜெமினி படங்கள் நிச்சயம் இருக்கும். ‘கல்யாணப் பரிசு’, ‘சுமை தாங்கி’, ‘மீண்ட சொர்க்கம்’, ‘புன்னகை’, ‘வெள்ளி விழா’ என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

ஸ்ரீதரும் பாலச்சந்தரும் எனக்கு அறிமுகமானது அம்மாவினால்தான். எனக்குப் படைப்பாளிகளின் உலகம் தெரிய ஆரம்பித்ததும் அப்போதுதான். தாகூரின் ‘காபூலிவாலா’ கதையையும், ஷேக்ஸ்பியரின் ‘ஒத்தெல்லோ’ நாடகத்தையும், ஓ.ஹென்றியின் ‘கிஃப்ட் ஆப் மேகி’ சிறுகதையையும் சொல்லி வளர்த்தாள் அம்மா. இருந்தும் ஜெமினியின் ‘சுமைதாங்கி’யைத் தாங்கும் வயதில்லை எனக்கு அப்போது.

கலகலப்பும் காதலுமாய் தொடங்கியது படம். ‘எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா’ என்று துள்ளிப் பாடும் ஜெமினியின் கண்களில் குறும்பு இருந்தது. தேவிகாவைக் காதல்வயப்பட வைத்தார். எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கையில் அண்ணன் முத்துராமனுக்கு வேலை போகிறது. குடும்பத்தைக் காப்பாற்ற படிப்பைத் தலைமுழுகுவதில் தொடங்குகிறது தியாகம். தங்கையின் காதல் வேறு சுமையைக் கொடுக்கிறது. அவளுடைய திருமணத்தை நடத்தவும் குடும்பத்தின் நலனுக்காகவும் தன் காதலை மறக்க நினைக்கிறார். தனக்குக் கிடைக்கும் நல்ல வேலையை அண்ணன் கேட்க அதையும் விட்டுக்கொடுக்கிறார். காதல் விரக்தியில், இருக்கும் வேலையையும் விட்டுவிடுகிறார். “இந்த வீட்டுல யாராவது ஒருத்தராவது தண்டச்சோறு சாப்பிடணும்னு சாபமா என்ன?” என்று அண்ணன் ஏச மனமுடைந்து வெளியேறுகிறார்.

தேவிகாவை மணக்க நினைக்கும் பாலாஜி, அவரது காதலை அறிந்ததும் ஜெமினியுடன் அவரைச் சேர்த்து வைக்க நினைக்கிறார். எல்லோரும் ஜெமினியின் காதலுக்கு இசைந்து அவரைத் தேடிப் போக, கண்காணாத இடத்திலிருந்து மனமுடைந்த வார்த்தைகளுடன் வருகிறது ஒரு கடிதம். அஞ்சல் முத்திரையைப் பார்த்து ஜெமினியைத் தேடி அனைவரும் ஓடிகின்றனர். அதற்குள் அவர் எடுக்கும் முடிவு நம்மை ஸ்தம்பிக்க வைக்கிறது.

1962-ல் வந்த படத்தை 1978-ல் பார்க்கிறேன். துறவு பூண்டு வெள்ளை உடையணிந்து கூட்டுப் பிரார்த்தனைக்குச் செல்லும் ஜெமினி, இவர்கள் கூக்குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார். ஒரு சின்ன சஞ்சலத்திற்குப் பின் கூட்டத்துடன் நம்மை விட்டு நகர்ந்து செல்கிறார். படம் முடிவடைந்துவிட்டது. தியேட்டரில் பேரமைதி.

கதை ரா.கி.ரங்கராஜனுடையது என்பதைச் சமீபத்தில்தான் அறிந்தேன். இப்படி ஒரு படத்தை எடுக்க ஸ்ரீதரைத் தவிர யாருக்குத் துணிச்சல் வரும்? விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையில் ஆரவாரமான காதல் பாடல்களுடன், ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’, ‘மயக்கமா கலக்கமா?’ போன்ற கனமான பாடல்களையும் தந்தார் கண்ணதாசன். ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி… நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ எனும் வரிகள் சாகாவரம் பெற்றவை. அந்த உணர்விற்கு உருவம் கொடுத்த பெருமை ஜெமினியைச் சேரும்.

‘சுமைதாங்கி’ பெரிய வெற்றிப் படமில்லை. ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்திற்குப் பின்னர் வந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை போலும். ஆனால், எந்தத் தோல்வி தரைப் பாதித்திருக்கிறது? அவர் செய்த பரிசோதனைகள் கொஞ்சநஞ்சமா என்ன? எல்லா வகைமைகளிலும் படம் எடுத்தவர் அவர். ‘உத்தம புத்திரன்’ எழுதியவர்தான் ‘கல்யாணப் பரிசு’ எடுத்தார். ‘காதலிக்க நேரமில்லை’ எடுத்தவர்தான் ‘கலைக்கோவில்’, ‘சிவந்த மண்’ ‘அலைகள்’, ‘உரிமைக்குரல்’ எடுத்தார். ஸ்ரீதருக்குப் பிறகு தமிழில் இப்படி பல வகைமைகளில் படம் எடுத்தவர் என்று மணிவண்ணனைத்தான் சொல்ல முடியும்.
ஜெமினியின் அற்புதமான படங்கள் தொலைக்காட்சியில்தான் எனக்குக் காணக் கிடைத்தன. இயல்பான வசன உச்சரிப்பும், மிகையில்லாத நடிப்பும், மென்மையான உடல்மொழியில் பல பழுப்பு குணங்களை அதிக ஆர்ப்பாட்டமில்லாமல் கொண்டுவரும் திறமையும் இயக்குநர்களை அவர்பால் ஈர்த்தன.

சிவாஜியுடன் நடித்தபோதும் திரையில் தன் இருப்பை திடமாகப் பதிவு செய்தவர் ஜெமினி. அண்ணன் தங்கை காவியமான ‘பாசமல’ரை ஜெமினியைத் தவிர்த்துவிட்டு ரசிக்க முடியுமா என்ன?

என் தந்தை வழிப் பாட்டி நோயுற்று இறந்தது அரும்பாக்கம் வீட்டில்தான். அப்போது நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். சொந்த வீடு என்றாலும் சிறிய வீடுதான். உறவினர்கள் துக்கத்திற்கு வந்து போனார்கள். படுக்க மொட்டை மாடிதான் ஆண்களுக்கு. கொசுத் தொல்லை பலரை மின் விசிறிக்காக ‘விஜயா கொட்டாய்’க்கு அழைத்துச் சென்றது. நிறைய வேலைகளுடன் நிறைய படங்களும் பார்த்தார்கள். சினிமாவைத் தவிர அன்றைக்கு வேறு என்ன பொழுதுபோக்கு? போர்வையுடன் சென்று படத்தில் தூங்கியவர்களும் உண்டு. வழிநெடுக படத்தைப் பற்றி பேசியவாறு வந்தவர்களும் உண்டு. ‘சுமைதாங்கி’ படம் பார்த்து திரும்பியபோது யாரும் பேசிக்கொள்ளவில்லை என்பது மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.

அரும்பாக்கம் இப்போது எம்.எம்.டி.ஏ காலனி, சி.எம்.பி.டி, ஜெய் நகர் என்று பல்வேறு புது அடையாளங்களுடன் மாறியுள்ளது. கார்ப்பரேஷன் ஸ்கூல் இருந்த இடத்தில் இப்போது மிகப் பெரிய பிராண்டட் ஷோ ரூம். இஸ்ரவேல் கடையும் மீனா கபேவும் இருந்த சுவடு தெரியவில்லை. விஜயா தியேட்டர் இருந்ததற்கான அடையாளமே இன்று இல்லை.

அம்மா எப்போதேனும் டி.வியில் ‘சுமைதாங்கி’ போட்டால் முழுமையாகப் பார்த்துவிடுவாள். அப்பாவும் நேரமிருப்பதால் உடன் பார்க்கிறார். இன்றைய சினிமாவில்தியாகம் என்ற கருவே இல்லை என்று அங்கலாய்ப்பாள் அம்மா. தனி மனித வாழ்க்கையிலேயே வழக்கொழிந்து வரும் தியாகத்தைத் திரையில் மட்டும் எப்படி காப்பாற்றுவது... அம்மாவிற்கு இதை எப்படிப் புரியவைப்பது?

(திரை விரியும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE