முதுமை எனும் பூங்காற்று 21: உறவுப் பாலத்தை உடைத்துவிடாதீர்கள்

By விவேக பாரதி

திருமண உறவு என்பது இரு மனங்களுக்கு இடையிலானது மட்டுமல்ல, இரு குடும்பங்களுக்கு இடையிலான பிணைப்பாகவும் உருவெடுப்பது. குடும்பத்திற்குள் வாழ வந்த பெண்ணுக்கு, கணவர் குடும்பத்தினரை எப்படி அனுசரிப்பது என்ற சூத்திரம் தெரிந்துவிட்டால் குடும்பத்திற்குள் கோலாகலம்தான். மாப்பிள்ளையும் பெண் வீட்டாரை மதித்து நடந்துகொண்டால் இரு தரப்பிலுமான உறவு வலுப்பெறும். இரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டுக்குப் புதிதாக வரும் உறவுகளை உள்ளன்புடன் எதிர்
கொண்டால் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

ஆனால், இந்தப் புதிய உறவில் ஏதேனும் ஒரு மூலையில் ஏற்படும் சிடுக்கு, தம்பதியினருக்கு இடையிலும் இரு குடும்பங்களுக்கு இடையிலும் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுகிறது.

அனுசரிப்பது அவசியம்

ஆணோ, பெண்ணோ திருமணம் வரை ஒரு வாழ்வு, திருமணத்திற்குப் பிறகு இன்னொரு வாழ்வு என வாழ்கிறார்கள். அது
வரை ஒருவர் தன்னுடைய குடும்பத்தையும், உறவுகளையும் சார்ந்து வாழ்ந்திருப்பார். திருமணத்திற்குப் பிறகு இன்னொரு குடும்
பத்தைச் சேர்ந்தவர்களை அனுசரிக்கும் பொறுப்பும் கடமையும் உண்டாகிறது. ஆண்களைப் பொறுத்தவரை ஓரளவு அனுசரித்துப் போய் விடுகிறார்கள். பெரும்பாலும் பெண்களுக்கு இடையில்தான் பிரச்சினைகள் முளைவிடுகின்றன.

பெண்களால் குடும்பத்திற்குள் ஒரு  புதிய பெண்ணின் வரவை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அடுப்படி
யில் ஆரம்பிக்கும் சிறு சிறு உரசல்கள் பெரிய அளவில் வெடித்து, பல குடும்பங்கள் பிரிய காரணமாகிவிடுகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் பிரத்யேகமான பழக்கவழக்கங்கள் இருக்கும். நம் குடும்பத்திற்கு வரும் மருமகள் அதைப் பின்பற்ற வேண்டும் என்று மாமியார் எதிர்பார்க்க முடியாது. அப்படியே இருந்தாலும் அதை மருமகளுக்கு உணர்த்துவதில் மாப்பிள்ளை வீட்டார் கடைப்பிடிக்கும் அணுகுமுறை ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும். ஒரு சின்ன கேலிப் புன்னகைகூட மனித மனதைக் காயப்படுத்திவிடும் என்பதால், இவ்விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை.

பிரச்சினைகளைத் தவிர்க்க…

மருமகளின் வருகை, வீட்டில் உள்ள பெரியவர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதுதான் பெரும்பாலும் நடைமுறை. எனினும், சில குடும்பங்களில் ஒரு புதிய பெண்ணின் வருகை என்பது, பெரியவர்களின், குறிப்பாக மாமியாரின் மனதில் சிறிதளவேனும் பாதுகாப்பின்மையை ஏற்படுத்திவிடும். மருமகள் தன் பிள்ளையைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுவாளோ என்ற எண்ணத்தால், ஏதாவது குறை கூற ஆரம்பிப்பார்கள். இதற்கு மருமகளின் எதிர்வினை சற்று காட்டமாக வந்தாலும் பிரச்சினை தொடங்கிவிடும்.

ஒரு சின்ன உதாரணம். கல்யாணமான புதிதில் தலை தீபாவளி போன்ற பண்டிகைக்குப் பையனும் மருமகளும் கடைவீதிக்குச் சென்று புத்தாடை எடுப்பார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும், பையனின் உடன்பிறப்புகளுக்கும் புதிய ஆடைகள் எடுத்துவரு
கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஆடைகள் ஒருவேளை மனதுக்குப் பிடிக்காவிட்டாலும், அதை மருமகளின் முகத்துக்கு நேராகச் சொல்ல வேண்டும் என்பதில்லை. “இந்த மாதிரி கலர்ல நான் ட்ரெஸ் எடுக்கிறதே இல்லை” என்பதுபோல் ஏதேனும் சொல்லி
விட்டால், மருமகள் மனஸ்தாபம் கொண்டுவிடலாம். பின்னாட்களில் அது பிரச்சினையாக வெடிக்கலாம். இதுபோன்ற விஷயங்களை நிதானமாகவும் முதிர்ச்சியுடனும் கையாண்டால், பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

மருமகளுக்கு மாமியாரே அவள் விரும்பும் நிறத்தில் ஒரு சேலை எடுத்துத் தந்துவிட்டால் போதும். உறவுப் பின்னல் உறுதியாகிவிடும். வேலைக்குச் செல்லும் மருமகளாக இருந்தால், பணி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், ஒரு கப் காபியோ டீயோ மாமியார் போட்டுத் தந்தால், அவர்கள் அடுத்த வேலையை இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

‘இனி இதுவும் நம் குடும்பம், நம் பெற்றோர் ஏதேனும் குறை சொன்னால் பெரிதுபடுத்துவோமா? அதேபோல் கணவர் வீட்டில் இருக்கும் சின்னப் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று மருமகள் தன் மனதுக்குள் முடிவெடுத்துவிட்டால் மனஸ்தாபங்கள் வராது.

தேவையற்ற சிக்கல்கள்

எனக்குத் தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்த பையனை விரும்பினாள். பையன் வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால், ‘பையன் அதிகம் சம்பாதிக்கவில்லை. பின்னால் இருவரும் கஷ்டப்படுவார்கள்’ என்று பெண் வீட்டார் தயங்கினர். பையன் வீட்டாரோ, ‘அதனாலென்ன? திருமணத்திற்குப் பிறகு வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில் நாங்கள் வீடு வாங்கித் தந்துவிடுகிறோம்’ என்று கூறி திருமணத்திற்குச் சம்மதம் வாங்கிவிட்டார்கள்.

திருமணமாகி குழந்தை உண்டான பிறகு, வீடு வாங்கித் தருவதாகப் பையன் வீட்டார் அளித்த உத்தரவாதம் குறித்த பேச்சுகள், பிரச்சினைகளுக்குத் தொடக்கப்புள்ளி வைத்தன. அந்தப் பெண்ணின் பெற்றோர், பெண்ணைப் பார்த்துக்கொள்ள அவளுடனேயே இருந்தார்கள். கணவன்-மனைவி பிரச்சினையில் தலையிடவும் ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அந்தப் பையன் பொறுமையிழந்து அந்தப் பெண்ணைவிட்டு விலகிச் சென்றுவிட்டான். இந்த விஷயம் என்னிடம் வந்தபோது, கணவன் – மனைவிக்கு இடையிலான பிரச்சினை, சரிசெய்ய முடியாத இடத்திற்கு நகர்ந்திருந்தது.

அந்தப் பையனை அழைத்து, “கட்டிய மனைவியையும் கைக்குழந்தையும் கைவிட்டுவிட்டுச் செல்வது சரியா?” என்று கேட்டேன். “என் மனைவி, பல மாதங்களாக எங்கள் மொத்த குடும்பத்தையும் அவமானப்படுத்தினாள். நான் பொறுமையாக இருந்தேன். என் கண் முன்னாலேயே என் பெற்றோரை அசிங்கப்படுத்திய பிறகு, இனி பேசுவதற்கு எதுவும் இல்லை” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான். விஷயம் குடும்ப நல நீதிமன்றம் வரை சென்றுவிட்டது. அந்தப் பெண் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம். ஏனெனில், பையனின் அக்கா, அண்ணன் இருவருமே வெளிநாட்டில் குடியுரிமை வாங்கி செட்டில் ஆகிவிட்டார்கள். கணவன் வீட்டாரைக் கொஞ்சம் அனுசரித்திருந்தால் எல்லாப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், நிலவரத்தை உணர 
அந்தப் பெண் தயாராக இல்லை. பெண்ணின் பெற்றோரும் அதை அவளிடம் அறிவுறுத்தவில்லை. பையன் வீட்டாரும் பெண் வீட்டாரிடம் சமாதானம் பேசி நிலைமையைச் சரிசெய்திருக்கலாம்.

இவர்கள் விஷயத்தில், இரு தரப்பிலும் ஆக்கபூர்வமாக எதுவுமே நடக்கவில்லை. விளைவாக, ஒரு பாவமும் அறியாத அந்தக் குழந்தை எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டது.

என்ன செய்யலாம்?

உறவுகள்தான் நம் பலம். அந்த உறவைத் தக்கவைத்துக்கொள்வதில் நாம் பக்குவப்பட வேண்டும். பொது இடங்களில் லேசாகத் தும்மிவிட்டாலே, முன்பின் தெரியாதவர்களிடம் தயக்கமின்றி ‘ஸாரி’ கேட்கிறோம். ஒரு சின்னப் பிள்ளை உதவி செய்தால்கூட மனதார நன்றி கூறுகிறோம். இத்தனையும் செய்யும் நாம், நம் குடும்ப உறவுகளிடமும் விட்டுக் கொடுத்துச் செல்லலாம் அல்லவா!
கொஞ்சமாய் ஐஸ் வைத்துப் பேசினால் போதும். அனுசரணையான ஒத்துழைப்பு கிடைக்கும். இது ஏமாற்றுவது அல்ல. ஒரு விஷயத்தைச் சமாதானமாக அணுகுவதற்கான எளிய வழிமுறை. இதனால் பெரியவர்களின் கவுரவம் குறையாது. இளைஞர்களின் தன்மானமும் அழியாது. ‘என்ன இருந்தாலும் இளம் வயதினர்தானே, போகப்போகப் புரிந்துகொள்வார்கள்’ என்று பெரியவர்களும், ‘மாமனார் வீட்டார் நம் குடும்பத்தினர் போலத்தானே’ என்று இளைஞர்களும் எண்ணினால் வாழ்நாள் எல்லாம் வசந்தம்தான். சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இருக்கு!

(காற்று வீசும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE