கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
படிப்பில் ஒரு தங்கப் பதக்கம் வென்றாலே மாணவர்கள் சந்தோஷத்தில் தத்தளிப்பார்கள். ஆனால், கால்நடை மருத்துவ அறிவியல் பிரிவில் 17 தங்கப் பதக்கங்களைத் தமிழக ஆளுநர் கையால் பெற்று பலரை ஆச்சரியக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார் ஆனந்தி. திருமணமாகி, இரண்டு குழந்தைக்குத் தாயான பிறகு இந்தச் சாதனைகளைச் செய்திருக்கிறார் என்பதுதான் இன்னும் ஆச்சரியம்.
ஆனந்தியைச் சந்திக்க நாமக்கல்லில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்றிருந்தேன். நாமக்கல் ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகராகப் பணிபுரியும் ஆனந்தி, “அலுவலக மீட்டிங் நடக்குது. வர்றதுக்குக் கொஞ்சம் தாமதமாகும்” என்றார். வீட்டில் அவரது, கணவர், குழந்தைகள், பெற்றோர் மட்டும் இருந்தனர். “அம்மா வாங்கின மெடல்களைப் பற்றிக் கேட்கிறீங்களா... இருங்க எடுத்துட்டு வர்றேன்…” என்று பெரிய அட்டைப் பெட்டியைச் சிரமப்பட்டு தள்ளிக்கொண்டு வருகிறாள் ஆனந்தியின் மூத்த மகளான 4 வயது சுட்டிக்குழந்தை பவி. பெட்டி முழுவதும் சான்றிதழ்கள் நிரம்பிவழிகின்றன.
2018-ம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ அறிவியல் பிரிவில் 10,000-க்கு 8,876 மருத்துவப் புள்ளிகளுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் ஆனந்திக்குத் தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழக மற்றும் மேலாண்மைக் குழுக்களின் பரிந்துரையின்படி கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு இளையர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன், ஸ்பார்க் விருது, சர் தோரப்ஜி டாடா பரிசு, எஸ்.கே.எம் அனிமல் ஃபீட்ஸ் அண்ட் ஃபுட்ஸ் (இந்தியா) லிமிட்டர் தங்கப் பதக்கம் என மொத்தம் 17 தங்கப் பதக்கங்கள் ஆனந்தியின் அபாரத் திறமையைப் பறைசாற்றுகின்றன.