கரு.முத்து
muthu.k@kamadenu.in
பனி கொட்டும் காலை நேரம். கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் சுமார் மூன்றாயிரம் பேர் குழுமியிருக்கிறார்கள். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சி என வியர்க்க விறுவிறுக்க நடக்கின்றன பயிற்சிகள். சரியாக காலை 6.30 மணிக்கு மிதிவண்டியில் மித வேகத்தில் வந்து இறங்குகிறார் ஓர் இளைஞர். ஸ்போர்ட்ஸ் ஷூ, முழுக்கைச் சட்டை, பேன்ட் சகிதம் அரங்கத்துக்குள் நுழையும் அந்த இளைஞர், அங்கிருக்கும் கரும்பலகையில் முதல் நாள் எழுதப்பட்டிருந்த திருக்குறளை அழித்துவிட்டு வேறொரு குறளை எழுதுகிறார். இவரைப் பார்த்ததும் மைதானம் முழுவதும் தொற்றிக்கொள்கிறது உற்சாகம்.
சுறுசுறுப்பாக மைதானத்துக்குள் இறங்கும் இவர், ஓட்டப் பயிற்சியில் இருப்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகக் குரல் கொடுக்
கிறார். சிலருக்கு அருகில் சென்று உடற்பயிற்சி டிப்ஸ் கொடுக்கிறார். பிறகு ஓட்டமும் நடையுமாகத் தனது உடற்பயிற்சிகளைத் தொடங்குகிறார். இரண்டு சுற்றுகள் முடித்த பிறகு, யோகா பயிற்சி செய்துகொண்டிருப்பவர்களை அணுகி, யோகாவின் நுணுக்கங்களைச் சொல்லித் தருகிறார். இப்படி துடிப்பும் துள்ளலுமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இளைஞருக்கு வயது அதிகமில்லை, வெறும் 95 தான்!
இவரது பெயர் கே. பரமசிவம். மூத்தோர் தடகளத்தில் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். 1988 தொடங்கி இதுவரை தேசிய, சர்வ
தேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று 96 பதக்கங்களை வென்றவர். பெங்களூருவில் நடைபெற்ற 14-வது ஆசிய தடகளப் போட்டி
யில் இரண்டு வெண்கலப் பதக்கம், புனேயில் நடைபெற்ற உலக அளவிலான போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி என நீள்கிறது இவரது பதக்கப் பட்டியல். இந்த வயதிலும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கலந்துகொள்ளும் உடல்வலிமை படைத்திருக்கிறார்.
உடல் ஆரோக்கியத்தின் உன்னதத்தை ஊர் முழுவதும் பரப்பும் வகையில் இவர் முன்னெடுக்கும் முயற்சிகள் அசாத்தியமானவை. முதுகில் ஸ்பீக்கரைக் கட்டிக்கொண்டு கையில் ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு உடற்பயிற்சியின் நன்மைகள் குறித்துப் பிரச்சாரம் செய்கிறார். மைதானத்துக்கு வெளியே கிடக்கும் குப்பைகளை அகற்றுகிறார். உடற்பயிற்சி செய்யும் சிறார்களுக்கு முதியோர் தடகளச் சங்கத்தின் சார்பில் சீருடைகளை எடுத்துக்கொடுத்து உதவுகிறார். இப்படிப் பன்முகத்தன்மை கொண்ட இந்தப் பரமசிவம் ஜனவரி 8-ல் 95-வது வயதைத் தொட்டிருக்கிறார்.