எம்ஜிஆர் ரசிகனான நான், சிவாஜி படம் பார்த்து கண்ணீர் சிந்திய கதையும் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. ‘சின்னான்’ என்று அழைக்கப்படும் சவுந்தர் சித்தப்பா செய்த ‘சதி’யால் நடந்த சம்பவம் அது.
ஒருநாள் பரங்கிமலை செல்வது எனும் திட்டத்துடன் பஸ்ஸில் குடும்ப சகிதமாகச் சென்று கொண்டிருந்தோம். திடீரென்று “இறங்கு… இறங்கு” என்று என்னை எழுப்பிவிட்டு மொத்த குடும்பமும் லஸ் கார்னரில் இறங்கியது. எல்லாம் சவுந்தர் சித்தப்பாவின் திட்டம் என்று அப்போதுதான் புரியவந்தது.
சரி, ஏதோ சிவாஜி படம் என்று அசட்டையாக இருந்தேன். சவுந்தர் சித்தப்பா அப்போது சிவாஜி பக்கம் திரும்பியிருந்தார். திமுகவுடனான அரசியல் பிணக்கு காரணமாக அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியிருந்த சமயம் அது. கருணாநிதியைவிட கடும் அதிருப்தியில் இருந்தார் சித்தப்பா. கோவிலடி மாமாவோ, வேறு யாரோ எம்ஜிஆர் படம் பற்றி பேசினாலே அடுத்த பத்து நிமிடத்தில் உரத்த வாக்குவாதம் உறுதி. எம்ஜிஆர் எதிர்ப்பு சித்தப்பாவை சிவாஜியிடம் நிரந்தரமாகத் தஞ்சமடைய வைத்திருந்தது.
கபாலி தியேட்டரில் பெரிய கூட்டமில்லை. போய் உட்கார்ந்ததும் படம் போட்டார்கள். பக்கத்தில் தம்பி. கலர் படம் என்றாலும் கறுப்பு வெள்ளையில்தான் ஆரம்பப் பாடல் காட்சி தொடங்கும்.
‘அம்மம்மா… தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்…’ என்று பாடல் தொடங்கியது. ஒரு சிறுவன் ரயிலில் கையில் குழந்தையுடன் பிச்சையெடுத்தவாறு பாட ஆரம்பிக்கிறான். என் மனம் குழைய ஆரம்பித்தது. ஓடும் ரயிலின் இசையும் இரைச்சலும் சூழலின் கனத்தைக் கூட்டிக்கொண்டிருந்தன. திரையில் எதிரில் உட்கார்ந்து பாடலைக் கேட்ட வி.கே.ராமசாமிக்கு மட்டுமல்ல, எனக்கும் கண்களில் நீர் பெருகியது.
எதேச்சையாகத் திரும்பி பார்த்த தம்பி சிரிக்க ஆரம்பித்தான். “யேய் கார்த்தி… அதுக்குள்ளேயே அழ ஆரம்பிச்சிட்டே!” என்றதும், எனக்கு அவமானமாக இருந்தது. அரைக் கால்சட்டை போட்டிருந்தாலும் ஆண்மகன் நான் அழலாமா... அதுவும் ஒரு சினிமாவைப் பார்த்து? சோகத்தில் தொடங்கி சோகத்தில் முடியும் கதையை அதற்கு முன் நான் அறிந்திருக்கவில்லை.
‘செய் நன்றி மறக்காத குணம் வேண்டும் உனக்கு!’ என்று பாடி வளர்த்தாலும் பின்னாளில் நாயகனின் தம்பி நன்றி மறந்துதான் போகிறான். அண்ணன் நாடகக்காரன். தம்பி பெரிய இடத்து சம்பந்தத்திற்காகத் தன் அண்ணன் ஒரு பெரிய பணக்காரன் என்று பொய் சொல்கிறான். தம்பிக்காகப் பணக்கார வேடத்தில் வருகிறான் அண்ணன். ‘அம்மம்மா… தம்பி என்று நம்பி’ என்று அதே பாடலைப் பாடுகிறான். படம் பார்க்கும் கூட்டம் துக்கத்தில் கரைந்திருந்தது. ‘இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழை அல்லவா…’ என்று துயரம் ததும்பும் குரலுடன் பாடி முடித்து துணிப்பையை எடுத்துக்கொண்டு சிவாஜி அந்த வீட்டிலிருந்து வெளியேற… தியேட்டரில் விசும்பல் சத்தம்.
படத்தில், “இன்குலாப்… ஜிந்தாபாத்!” எனும் முழக்கத்துடன் பகத் சிங்காய் கொதித்தெழும் சிவாஜி, “To be or not to be” என்று ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்டாய் சிந்தனைக் குழப்பத்தில் சிவாஜி, ‘ஜிஞ்சினக்கா சின்னக்கிளி’ என்று ஜோக்கராய் வந்து சிரிப்பையும் அழுகையையும் ஒரே நேரத்தில் பிழியும் சிவாஜி…. ஒரே படத்தில் எத்தனை சிவாஜிகள்? ‘மதன மாளிகையில்…’ பாடலின் தொடக்கத்தில் கூத்தின் பாரம்பரியத்தில் வரும் அரசனாய் அவரின் உடல்மொழி அவ்வளவு வசீகரமாக இருந்தது. கதாநாயகி உஷா நந்தினியின் கனவில் வரும் அந்தப் பாடல் என் மனதில் பசையாய் ஒட்டிக்கொண்டது.
வீட்டுக்கு வந்தும் படம் பற்றிய பேச்சு தொடர்ந்தது. சித்தப்பா சிவாஜி புராணம் பாடிக்கொண்டிருந்தார். அரசியலும் சினிமாவும் பேசாத நாளில்லை எங்கள் வீட்டில். விவிதபாரதியில் பாடல்கள், ‘ஒலிச்சித்திரம்’ என்று சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளைத் தவறாமல் கேட்போம். விவாதிப்போம். சிவாஜியா, எம்ஜிஆரா என்ற ஆரம்பிக்கும் கச்சேரி, கருணாநிதியா, எம்ஜிஆரா என்று முடியும். என் கற்பனையில் சிவாஜியோ கருணாநிதியோ எம்ஜிஆரின் பிரம்மாண்டமான பிம்பத்தை நெருங்கக்கூட முடியவில்லை. ஆனால், ‘ராஜபார்ட் ரங்கதுரை’ என் மனதை சிவாஜியின்பால் சற்று ஈர்த்தது உண்மைதான்.
எனக்கு மட்டுமல்ல; எங்கள் குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமான படமாகப் பிற்காலத்தில் உருவெடுத்தான் ‘ராஜபார்ட் ரங்கதுரை’. டி.ராஜேந்தர் திரைக்கு வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே அடுக்கு மொழியிலும் வார்த்தை விளையாட்டுகளிலும் தேர்ச்சிபெற்றிருந்த சவுந்தர் சித்தப்பா, என் அப்பாவை ‘ராஜபார்ட் ரங்கதுரை’ என்று அழைப்பதுண்டு. தன் இரு தம்பிகளையும் உடன் வைத்துப் பார்த்துக் கொண்டவர் என்பதால் அந்த பட்டப்பெயர்.
அப்பாவின் பெயர் ரங்கநாதன். தம்பிகளுக்கு ரங்கண்ணா. வீட்டின் கடைசித் தம்பி, குடும்பத்தை மீறி காதல் மணம் புரிந்த சமயத்தில், ‘அம்மம்மா…தம்பி என்று நம்பி’ பாடல் வானொலியில் வந்தால் சவுந்தர் சித்தப்பா ஓடிவந்து ஒலியைப் பெருக்குவார்.
எவர் பக்கத்து நியாயங்களும் புரியாத வயது அப்போது எனக்கு. பொருளாதாரச் சுமையுடன் போராடிய ஒரு கூட்டுக் குடும்பத்தின் உறவுப் பிரச்சினைகளை உணரும் பக்குவம் இல்லாத வயது அது. ஆனால், சினிமாவை வெறும் கற்பனை என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு, வாழ்க்கையின் யதார்த்தத்திற்கு அருகில் சினிமா இருப்பதை முதன்முறையாக உணரவைத்தது ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படம்தான்!
தகப்பன் இடத்தில் அண்ணன் இருந்து தம்பி, தங்கைகளைப் பார்த்துக்கொள்வது; அந்த உறவுகளில் ஏமாற்றங்கள் வருகையில் மனம் உடைந்துபோவது என்று நீளும் கதைகளை அன்றைய படங்களில் நிறைய பார்க்க முடியும். ஆனால், இந்தப் படம் அதை மிக நேர்த்தியாக காட்டியுள்ளதாக நினைக்கிறேன். சிவாஜியின் இந்தப் படம் சிவாஜி ராவுக்கும்(!) பிடித்த படமாக இருந்திருக்கக்கூடும். ‘படிக்காதவன்’, ‘தர்மதுரை’ போன்ற படங்களில் இதுபோன்ற கதைதான். ‘அம்மம்மா…’ பாடல்தான் ‘ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்’, ‘ஆண் என்ன பெண் என்ன’ போன்ற பாடல்களின் ஆதார ஸ்வரம் எனலாம்!
அதன் பிறகு நிறைய சிவாஜி படங்களுக்கு என்னை அழைத்துப் போனார்கள். சிவாஜி படம் என்றால் சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி தியேட்டர்கள்தான். எழுபதுகளில் தர், பி. மாதவன், சி.வி.ராஜேந்திரன், ஏ.சி.திருலோகச்சந்தர் போன்றோரின் படங்களில் சிவாஜி பின்னியெடுத்துக்கொண்டிருந்தார். குறிப்பாக, பி.மாதவன் இயக்கிய ‘வியட்நாம் வீடு’, ‘தேனும் பாலும்’, ‘ஞான ஒளி’, ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘தங்கப்பதக்கம்’, ‘பாட்டும் பரதமும்’ என்று எல்லாமே வித்தியாசமான கதை அமைப்புகளைக் கொண்டவை. என்னை அழவைத்த ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படமும் பி.மாதவன் இயக்கியதுதான்.
ஸ்ரீதரின் உதவியாளராக இருந்த பி.மாதவன், குருவைப் போலவே கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். சற்று நாடகத்தனம் இருந்தாலும் அவரது படங்களில் சிவாஜியின் நடிப்பு, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது. பீம்சிங் படங்கள் அளவிற்குப் பல துணைக் கதைகளும் நடிகர்கள் பட்டாளமும் இல்லாமல் கச்சிதமான படங்களாக வந்தன மாதவன் படங்கள். துன்பியல் படைப்பாக வெளியான ‘ராஜபார்ட் ரங்கதுரை’யைத் தாங்கிப் பிடித்த சிவாஜி சாதாரணப்பட்டவரா, நடிகர் திலகம் அல்லவா!
அழிந்துவரும் நாடகக் கலையைக் காப்பாற்ற போராடி தோற்ற ஒரு நடிகனின் கதை இது. பின்னாட்களில் கமல் நடித்த ‘சலங்கை ஒலி’யை என்னைப் பல முறை பார்க்க வைத்தது ‘ராஜபார்ட் ரங்கதுரை’ தந்த தாக்கம்தானோ?
எழுபதுகளின் இறுதியிலேயே கமலும் ரஜினியும் என் கவனத்தை ஈர்த்திருந்தார்கள். அப்போது சிவாஜியின் பல மோசமான படங்களைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கும். ப்ரியா, மஞ்சுளாவுடன் டூயட், கனத்த உடலுடன் கல்லூரி மாணவன் வேடம், பொருந்தாத உடை, சிகை அலங்காரம், கதை அமைப்பு என்று எல்லாம் இறங்குமுகமாக இருந்தன. 1985-ல், பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ படம்தான் சிவாஜியின் பழைய கம்பீரத்தை மீட்டெடுத்தது.
தமிழ்ச் சமூகத்தின் காலத்தை வென்ற துயர நாயகன் சிவாஜி கணேசன். அவரின் துயரங்களை திரையில் பார்த்த ரசிகர்கள் அழுதார்கள். அவமானம், அச்சம், நிராகரிப்பு, தோல்வி, ஏமாற்றம் என எல்லா உணர்வுகளையும் பார்வையாளர்கள் நிஜமாக உணரும் வண்ணம் நடித்துக்காட்டினார் சிவாஜி.
ஒரு நடிகன், தான் நடிக்கும் கதைக்காக மட்டுமல்ல, தனக்காகவும் அழுகிறான். பார்வையாளர்களும் நடிகனுக்காக மட்டும் அழுவதில்லை. தங்களுக்காகவும்தான் அழுகிறார்கள். மனதைக் கவிழ்த்துக் கொட்டி, கண்ணீரால் வழித்து சுத்தம் செய்து ஆன்ம பலத்தைக் கூட்டும் அற்புதப் பணியைச் செய்பவன் நடிகன். அந்தப் பணியில் அவன் தன்னைச் சிறிது சிறிதாகக் கரைத்துக்கொள்கிறான். அவன் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவன்.
‘ராஜபார்ட் ரங்கதுரை’ வெளியானபோது பெரிய வெற்றிப் படமா என்று தெரியாது. ஆனால், 2017-ல் இந்தப் படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டபோது, மதுரையில் 100 நாட்கள் ஓடியது. 1973-ல், வெளிவந்த படம் இன்றும் நம் மனதைத் தொடுகிறது. ரயிலில் பாடும் சிறுவனின் வரிகள் மூலம் வாழ்வின் தத்துவத்தைச் சொல்லியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.
‘நீ பிறர்க்காக வாழ்வது இன்பம் அல்லவோ?’
படங்கள் உதவி: ஞானம்.
(திரை விரியும்...)