கனா பேச்சு 5- உலகப் பொது மொழி

By காமதேனு

கனா

கோயில் சிலை போன்ற உடலமைப்புடன் பெண்ணொருத்தி முழு நிர்வாணமாக வீதியில் நடந்து வந்ததைப் பார்த்திருக்கிறீர்களா? தலைமைத் தபால் நிலையத்தில் கொஞ்சம் ஸ்டாம்ப், கவர் வாங்கிக்கொண்டு திரும்பும் வழியில் அவளைப் பார்த்தேன். நிலம் நோக்கி தலை குனிந்திருந்தாலும் பார்வை, சாலை மீதுதான் இருந்தது. உடலின் கறுப்பு நிறத்தின் மீது அழுக்கு, போர்வையாய் படிந்திருந்தது. எண்ணெய் காணாத வறட்டுக் கூந்தல். திரண்ட மார்பகமும் லேசாகத் தேங்கிய வயிறும் வெளித்தெரிய மதியம் 3 மணி சூரியனை அலட்சியப்படுத்திக் கடந்து கொண்டிருந்தவளின் நடையில் நிதானமும் இல்லை. அதே சமயம் வேகமான அவசரமும் இல்லை. தன்னை இந்த உலகம் உற்றுப் பார்க்கிறது என்ற எந்த விதமான தன்னுணர்வும் இன்றி ஒரு பொழுதைக் கடந்து கொண்டிருந்தாள். ஆனால் அவளின் நிர்வாணத்தை விட அதிர்ச்சியான ஒன்றைக் கவனித்தேன்.

நடக்கும்போதே ஒரு கையால் தன் தொடை மீது ஒரு தட்டு தட்டி மறுகையால் தன் புட்டத்தில் ஒரு தட்டு தட்டியபடியே இருந்தது அவளின் உடலியக்கம். அப்படித் தட்டும்போதெல்லாம் உடம்பு முழுவதுமான சதைகள் மெல்லிய அதிர்வில் குலுங்கி அடங்கின. சற்றே உற்று கவனித்தால் அவளின் தொடைப்பகுதியில் இருந்து கீழே குருதிக் கோடு காய்ந்து வழிந்திருந்தது தெரிந்தது. எவரும் அறியாத எவருக்கும் புரியாத மொழியில் அவளின் வாய் எதையோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது. யாரோ அவளைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டாள் என்ற எண்ணத்துடன் வீட்டுக்கு சைக்கிள் மிதித்தேன்.

வீட்டுக்கு வந்து சேர்ந்தால் வாசலில் கூட்டம். சற்று முன் சாலையில் நடந்து சென்றவளைப் பற்றிய ஏகப்பட்ட பேச்சுகளுடன் வேடிக்கை மனிதர்கள் புதிதாய் புனைவினை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன். அவள் வந்த திசையிலிருந்து இரண்டு மனிதர்கள் பைக்கில் வந்து இறங்கினார்கள். “இந்தப் பக்கமா ஒரு பைத்தியம் போனுச்சே... யாராவது பாத்தீங்களா..?’’ “ஆமா... தீட்டுக் கறையோட இப்படியே போனுச்சு... கட்டி கிட்டி வைக்கிறதில்லியாப்பா...’’ யாரோ ஒரு பெண்மணி சொன்னதும் புத்தியில் உறைத்தது உறைந்து காய்ந்திருந்தது ரத்தமல்லவென்று. “எங்கங்க... எத்தனையத்தான் பாக்குறது... எப்பிடிங்க போச்சு?’’ என்ற கேள்விக்கு ஒருவர் “இந்நேரம் போஸ்ட் ஆபீஸ் தாண்டி ரயில்வே கேட்டுகிட்ட போயிருக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE