சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய முதல் இந்தியர் ரஞ்சித்சிங்ஜியாக இருக்கலாம். ஆனால், இந்தியாவில் ஆரம்ப காலத்தில் அந்த விளையாட்டை பிரபலப்படுத்தியவர் சி.கே.நாயுடு. இந்திய கிரிக்கெட்டின் தொடக்க காலத்தில் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்த சி.கே.நாயுடு, தனது பேட்டிங் ஸ்டைலால் பல இளைஞர்களைக் கவர்ந்து கிரிக்கெட் ஆடவைத்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனாகவும் அவர் பொறுப்பு வகித்தார். அவரைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சி.கே.நாயுடு என்று அழைக்கப்படும் கோட்டாரி கனகய்யா நாயுடு, 1885-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி நாக்பூரில் பிறந்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இளமைப் பருவத்தில் இவர் நாக்பூரிலேயே தங்கியிருந்தார். சி.கே.நாயுடுவின் குடும்பம் செல்வச் செழிப்புமிக்கதாக இருந்தது. அவரது தாத்தா ராய் பகதூர் கோட்டேரி நாராயண் சாமி நாயுடு, நிலச்சுவான்தாராகவும், வழக்கறிஞராகவும் இருந்தார். அத்துடன் காங்கிரஸ் கட்சியிலும் அவர் முக்கியப் பதவிகளில் இருந்தார்.
சி.கே.நாயுடுவுக்கு சிறு வயதிலேயே கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மைதானங்களில் ஆங்கிலேயர்கள் கிரிக்கெட் விளையாடுவதை அவர் ஆர்வமாக பார்ப்பார். 7 வயதில் இருந்தே பள்ளி கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்த சி.கே.நாயுடு, தனது டீன் ஏஜ் வயதில் நாக்பூரில் உள்ள மோடி கிரிக்கெட் கிளப்பில் இணைந்தார். பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பலர் உறுப்பினர்களாக இருந்த இந்த கிளப்பில் சில வெள்ளையர்களும் இருந்தனர். மோடி கிளப்பில் உள்ள கிரிக்கெட் வல்லுநர்களிடம் இருந்து பல்வேறு நுணுக்கங்களை சி.கே.நாயுடு கற்றுக்கொண்டார்.
பள்ளி மற்றும் கிளப் கிரிக்கெட்களில் ஆடிவந்த சி.கே.நாயுடு, 1916-ல் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.
அக்காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இந்து கிரிக்கெட் கிளப்புக்காக அவர் களம் இறங்கினார். 1916-ல், எம்சிசி கிளப்புக்கு எதிராக இந்து கிரிக்கெட் கிளப் விளையாடிய ஒரு போட்டி, சி.கே.நாயுடுவை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. இப்போட்டியில் ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களைச் சேர்த்து பலவீனமாக இருந்தது இந்து கிரிக்கெட் கிளப். அந்தச் சமயத்தில் களம் இறங்கிய சி.கே.நாயுடு, முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு தனது வரவை அறிவித்தார். இப்போட்டியில் 14 ஃபவுண்டரிகள் 11 சிக்சர்களுடன் அவர் 153 ரன்களைக் குவிக்க, எதிரணி ஆடிப்போனது. இந்தியாவில் கிரிக்கெட் ஆடும் அனைவருக்கும் நாயுடுவின் பெயர் பழகிப் போனது.
இதற்கடுத்த சில ஆண்டுகளிலேயே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நாயகனாக மாறினார் நாயுடு. இந்தச் சூழ்நிலையில்தான் 1932-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்தை இந்தியா பெற்றது. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில்
இந்திய கிரிக்கெட் அணியை இங்கிலாந்துக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி வழங்கிவந்த போர்பந்தர் மகாராஜாவை கேப்டனாகவும், ஞான்ஷியாம்ஜி என்பவரைத் துணை கேப்டனாகவும் தேர்வுக் குழு நியமித்தது. இந்திய கிரிக்கெட்டில் அப்போது சூப்பர் ஸ்டாராகக் கருதப்பட்ட சி.கே.நாயுடுவுக்குத்தான் கேப்டன் பதவி வழங்கப்படும் என்று இந்திய வீரர்களும், ரசிகர்களும் பெரிய அளவில் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக நடந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனிடையே, தான் கேப்டனாக நியமிக்கப்பட்டது பலருக்கும் பிடிக்கவில்லை என்பதை அறிந்த போர்பந்தர் மகாராஜா, முதல் போட்டியில் களம் இறங்குவதற்கு முன்பே கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் ஞான்ஷியாம்ஜியும் ராஜினாமா செய்ய, இந்திய அணியின் முதல் கேப்டனாக சி.கே.நாயுடு நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 37.
இப்போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங் செய்துகொண்டு இருந்தபோது, நாயுடுவின் கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பேட்டிங் செய்யவந்த நாயுடு, முதல் இன்னிங்ஸில் 40 ரன்களைக் குவித்தார்.
வழக்கமாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு நடக்கும் விஷயம்தான் இந்தத் தொடரில் இந்தியாவுக்கு நடந்தது. வலுவான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையைக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோற்றது. அதேநேரத்தில் கவுண்டி அணிகளுக்கு எதிரான முதல் தரப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய இந்தியா, 26 முதல்தர போட்டிகளில் 9-ல் வென்றது. இதில் அனைத்து முதல்தர போட்டியிலும் ஆடிய கேப்டன் சி.கே.நாயுடு 1,618 (சராசரியாக 40.45) ரன்களைக் குவித்தார். அத்துடன் 79 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 1933-ம் ஆண்டு, நாயுடுவுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அதிரடி மன்னனாக பெயரெடுத்த நாயுடு, இந்த ஆண்டில் முதல்தர கிரிக்கெட்டில் 1000 ரன்களுக்கு மேல் குவித்ததுடன் 51 விக்கெட்களையும் வீழ்த்தினார். மேலும், 1933-ம் ஆண்டில் புகழ்பெற்ற கிரிக்கெட் பத்திரிகையான விஸ்டனின், சிறந்த வீரர் விருதையும் பெற்றார். தனது கழுத்தில் ஒரு கர்ச்சீப்பை இறுக்கிக் கட்டிக்கொண்டு பேட்டிங் செய்ய வருவது அப்போது சி.கே.நாயுடுவின் ஸ்டைலாக இருந்தது. அது அந்தக் காலகட்டத்தில் உள்ள இளைஞர்களிடையே வேகமாக பரவியது.
மிகத் தாமதமாக, தனது 37 வயதில் சர்வதேச கிரிக்கெட் ஆடவந்ததால், இந்திய அணிக்காக வெறும் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே நாயுடுவால் ஆட முடிந்தது. 1936-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். ஆனால், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதை அத்தனை சீக்கிரத்தில் அவர் விடவில்லை. தனது 62-வது வயது வரை உத்தர பிரதேச அணிக்காக அவர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆடினார். இதன்மூலம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மிக அதிக வயதில் ஆடிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
1957-ம் ஆண்டு தனது கடைசி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 52 ரன்களைக் குவித்த நாயுடு, அத்துடன் கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார். 1962-ம் ஆண்டில் அவர் காலமானார். சி.கே.நாயுடுவின் நினைவாக அவரது பெயரில் மாநில அளவிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது.
கிரிக்கெட் சாதனைகள்
சி.கே.நாயுடு இந்தியாவுக்காக 7 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். இதில் 14 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்த அவர், 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 350 ரன்களை எடுத்துள்ளார். 9 விக்கெட்களையும் அவர் கைப்பற்றி உள்ளார். மேலும், 207 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற அவர், 11,825 ரன்களை அடித்ததுடன் 411 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.