கரு.முத்து
muthu.k@kamadenu.in
எழுத்தின் மீது காதல் கொண்டவர்கள், கடும் பணிச் சுமைக்கு இடையிலும் கதை, கவிதை, கட்டுரை என்று எழுதிக்கொண்டே இருப்பார்கள். தமிழ்நாட்டின் மத்திய நகரமான திருச்சியின் ரயில் நிலையத்தில், 50-க்கும் மேற்பட்ட ரயில்களும் பல்லாயிரக்கணக்கான பயணிகளும் வந்துசெல்லும் இரைச்சல் மிகு சூழலில் பணிபுரியும் பா.சேதுமாதவன் அப்படியான எழுத்துக் காதலர்தான்.
ரயில் நிலைய வளாகத்தில் உள்ள திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தில் முதுநிலைப் பிரிவு கணக்கு அலுவலராகப் பணிபுரியும் சேதுமாதவன், ‘பேனா முனையின் உரசல்’, ‘புலன்விழிப்பு’, ‘விசும்பில் சிறுபுல்’, ‘மன யாத்ரீகன்’, ‘சொல்வலை வேட்டுவன்’ என்ற ஐந்து கவிதைத் தொகுப்புகளை எழுதியவர். ‘தீராச்சொற்கள்’, ‘அலறி’ எனும் சிறுகதைத் தொகுப்புகள், ‘அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை’ எனும் வரலாற்று நூல் ஆகியவற்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
கணக்கு வழக்கு என்று காலை ஒன்பதரை மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை தன்னை அலுவலகப் பணிக்கு ஒப்புக்கொடுத்துக் கொள்ளும் சேதுமாதவன், மாலைக்குப் பின் இலக்கியத்தின் நிழலில் சாய்ந்து இளைப்பாறிக்கொள்கிறார்.