மற்றவை வெண்திரையில் - 1

By டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

சினிமா. நம்மிடையே இருக்கும் கலை வடிவங்களில் அதிக வீச்சைக் கொண்ட அற்புத ஊடகம். கதை, இசை, நடனம் என்று பல கலைகள் சங்கமித்துப் பிறக்கும் கதம்பமான கலை வடிவம். அதனால்தான், பாமரர் தொடங்கி அனைத்துத் தரப்பினரும் சினிமா ரசனையைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு கூறாக வைத்திருக்கிறார்கள். தங்கள் ஆதர்ச நடிகர்களின் படங்களைப் பார்த்து மகிழ்வது, அவர் அணியும் ஆடைகளைப் போல் தானும் ஆடை அணிவது, அவரது பழக்கவழக்கங்கள், கொள்கைகளைப் பின்பற்றுவது என்று திரைக் கலைஞர்களை ரசிகர்கள் கொண்டாடும் விதமே அலாதி. உலகமெங்கும் உள்ள போக்குதான் இது.

அந்த வகையில், திரை ரசனையில் ஊறித் திளைத்த கோடிக்கணக்கானவர்களில் ஒருவனாக இந்தத் தொடரைத் தொடங்குகிறேன். சக ரசிகர்களின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் முயற்சிதான் இது.

கண்ணை நம்பாதே!

அது 1975. எம்ஜிஆர் நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படம் வெளியாகியிருந்த தருணம். எனக்கு அப்போது 10 வயது. பள்ளியில் பாடம் சொல்லித்தந்த வாத்தியார்களின் மத்தியில் இன்னொரு வாத்தியாராக என் மனதில் நீக்கமற வியாபித்திருந்தார் எம்ஜிஆர்.
ஒரு விடுமுறை நாளில் நான், தம்பி, சேது சித்தப்பா மூவரும் மும்முரமாகக் கேரம் ஆடிக்கொண்டிருதோம். கேரம் போர்டில் மூன்று காய்கள் இருந்தன. ஸ்கோர் 28-28. கண்டிப்பாக இது கடைசி போர்ட். தம்பி, சித்தப்பா இருவரும் விடுவதாக இல்லை. அது ஒரு பந்தய ஆட்டம். வெல்பவர், ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்துக்கு அழைத்துச்செல்லப்படுவார். இப்போது நடக்க ஆரம்பித்தால்தான் தேவி பாரடைஸ் செல்ல 15 நிமிடங்களாவது ஆகும். ஆறரைக்குப் படம் போட்டுவிடுவார்கள். யாராவது ஜெயித்துத் தொலைத்தால் போதும் எனும் அளவுக்குப் பொறுமை இழந்திருந்தேன். கடைசியில் தம்பி ஜெயிக்க, அடுத்த ஐந்தாவது நிமிடம் ஓட்டமும் நடையுமாக வாலாஜா சாலை முனையிலிருந்து தியேட்டரை நோக்கி நடைபோடத் தொடங்கினோம்.

“படம் போட்டிருப்பானா?” என்றேன் பதற்றத்துடன். “டைம் இருக்கு கார்த்தி” என்று சமாதானப்படுத்தினார் சித்தப்பா. எனக்கோ இருப்பு கொள்ளவில்லை. டிக்கெட் கவுன்ட்டரிலும் கேட்டுவிட்டேன். “இப்பத் தான் போட்டிருக்கு…” என்றார் கவுன்ட்டரில் இருந்தவர். நாங்கள் சுற்றிச் சுற்றி ஓடினோம். தேவி பாரடைஸின் பிரம்மாண்டம் எல்லாம் என் கண்ணுக்குத் தெரியவில்லை. உள்ளே சென்றால் வாத்தியார் அதிரடியாய்ப் பாடிக்கொண்டிருந்தார்.

‘கண்ணை நம்பாதே…உன்னை ஏமாற்றும்…
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்…’

எனக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தன. படம் ஆரம்பித்து எவ்வளவு நேரமாயிற்று என்று தெரியவில்லை. இருட்டில் பலர் காலை மிதித்து, திட்டு வாங்கிக்கொண்டு சீட்டில் அமரும்வரை எம்ஜிஆர் மீது வைத்த கண்ணை என்னால் எடுக்க முடியவேயில்லை.
அப்படி ஒரு எம்ஜிஆர் பித்து வரக் காரணம், ‘உலகம் சுற்றும் வாலிபன்’.

வசீகரித்த ‘வாலிபன்’

பரங்கிமலை ரங்காவில் ஒரு மதிய காட்சிக்கு ‘உலகம் சுற்றும் வாலிப’னைக் காண தம்பி அழைத்துச் சென்றான். தம்பி உண்மையில் என் தம்பியில்லை. அத்தை மகன். என்னைவிட ஒன்பது வயது பெரியவன். வீட்டில் எல்லோரும் தம்பி தம்பி என்றழைக்க எனக்கும் தம்பியானான். தம்பி கல்லூரி சென்ற நாட்களைவிட சினிமா சென்ற நாட்கள் அதிகம். எம்ஜிஆர் படம் என்றால் ரிலீஸ் ஆன வாரத்திலாவது பார்த்தாக வேண்டும் அவனுக்கு. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ பற்றிய பரபரப்பான செய்திகள் அப்போது வெளியாகிக்கொண்டிருந்தன. ‘படத்துக்குப் போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னு திமுக அரசு கெடுபிடி செய்யுதாம்; சிவாஜி நடிச்ச ‘சிவந்த மண்’ படத்துக்கு அப்புறம் அதிகமா வெளிநாடுகள்ல ஷூட்டிங் பண்றாங்களாம்…’ என்று எல்லாமே செவிவழிச் செய்திகள்தாம். தேவி பாரடைஸ் சென்றால் டிக்கெட் கிடைக்காது. பாட்டி வீட்டின் பக்கத்திலுள்ள ரங்கா தியேட்டரில் க்யூவில் நின்றால் டிக்கெட் வாங்கலாம் என்று நம்பிக்கையாகச் சொன்னான் தம்பி.

வரிசையில் நின்றபோது, நிமிடத்திற்கு நான்கு பேர் எங்கள் தலைக்கு மேலே முந்திச் சென்றுகொண்டிருந்தனர். கம்பியில் ஒரு கையையோ காலையோ மட்டும் வைத்துத் தாவி அவர்கள் டிக்கெட் கவுன்ட்டருக்குச் செல்லும் லாவகத்தைக் கவனித்த ஏதோ ஒரு வெள்ளைக்காரன்தான் பின்னாட்களில் ‘ஸ்பைடர்மே’னை எடுத்திருக்கக்கூடும்!

ஒரு வழியாக டிக்கெட் கிடைத்தது. உள்ளே சென்றால் தியேட்டருக்குள் திருவிழா கொண்டாட்டம். படம் ஆரம்பித்தது. நான் அயல்நாட்டு பயணத்திற்கு ஆயத்தமானேன். முதல் எம்ஜிஆர் சுடப்பட்டபோது தியேட்டரே திடுக்கிட்டது. சின்னவர் ராஜு வந்தவுடன் மீண்டும் உற்சாகம் கரை புரண்டது.

ஸ்டைலான நடனமும், சாகசம் கலந்த சண்டைக் காட்சிகளுமாக ஓர் ஆதர்ச நாயகனாக என் மனதில் பதிந்துபோனார் எம்ஜிஆர்.
ஒரு காட்சியில் வெறி நாய்களுடன் முற்றுகையிடும் ஆர்.எஸ்.மனோகரைப் பார்த்து அலட்சியமாகச் சிரிப்பார். “நாயோட திறமையை நீ காண்பிச்சிட்டே. இப்போ என்னோட திறமையைப் பாரு” என்று மாடியிலிருந்து ஜன்னல் வழியாகக் கீழே குதிப்பார். இடைவேளை!
இரண்டாம் பாதி இன்னும் ஜோர். தாய்லாந்து அழகியுடன் அவர் பாடும் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல்தான் முத்தாய்ப்பு. டூயட் முடிந்தவுடன், “நான் உன்னைக் கூடப் பிறக்காத தங்கச்சியாதான் நினைச்சேன்” என்று சொல்லி அந்தக் காதலை முடித்து வைப்பார். பிற்காலத்தில் நண்பர்கள் இதைக் கிண்டலடித்தாலும், நான் விட்டுக்கொடுத்ததில்லை. கனவு கண்டது எம்ஜிஆர் இல்லையே!

கதைசொல்லி

‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் தியேட்டர் திரையில் நிறைவடைந்தாலும், என் மனத் திரையில் முடியவேயில்லை. என் கதை சொல்லும் பருவம் தொடங்கியது இங்குதான். பரங்கிமலைக்கு அருகில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் நான் சொல்லும் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ கதையைக் கேட்க பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பாக்கள், தம்பி என ஒரு பெரும் கூட்டம் தயாராக இருக்கும். எம்ஜிஆர் மட்டுமல்ல, அசோகன், கோபாலகிருஷ்ணன், மனோகர் என்று படத்தின் எல்லா நடிகர்களைப் போலவும் மாறி மாறி மிமிக்ரி செய்வேன். ஆனால், ‘ரசிகர்கள்’ அதிகம் கை தட்டி ரசித்தது என்னவோ “பொட்டியக் கொடு” என்று தொடை தட்டி சண்டை போடும் நம்பியார் பாணி நடிப்புக்குத்தான்!

பின் வாழ்க்கையில் தொடர்ந்து வந்தது இந்தப் படம். கல்லூரி காலத்தில் கோவையில் மீண்டும் இந்தப் படத்தைப் பார்த்தேன். ‘நிம்ஹான்ஸ்’ (NIMHANS) மருத்துவமனையில் சீட் கிடைத்தபோது ‘ட்ரீட்’ கேட்ட நண்பர்களை இந்தப் படத்துக்குத்தான் அழைத்துச்சென்றேன். இதோ 10 வருடங்களுக்கு முன்புகூட டிஜிட்டலில் மாற்றி மீண்டும் படத்தை ரிலீஸ் செய்தார்கள் அப்போது என்னால் தியேட்டரில் பார்க்க முடியவில்லை. காரணம் நானே உலகம் சுற்றும் வாலிபனாக மாறியிருந்தேன்.

நினைவடுக்கில் தங்கிய படம்

‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஒரு கச்சிதமான கமர்ஷியல் படம். கமர்ஷியல் திரைக்கதை எப்படி அமைப்பது என்பதற்கு இந்த படம் ஒரு நல்ல முன்னுதாரணம். எம்.எஸ்.விஸ்வநாதனின் இனிய பாடல்கள், சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான் போன்ற நாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் என்று அள்ள அள்ளக் குறையாத ரசனை ஊற்றாகப் படத்தை உருவாக்கியிருந்தார் எம்ஜிஆர்.
இந்தப் படம் என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் இனிய நினைவலையாக உறைந்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து சென்றபோது, ‘பன்ஸாயீ… காதல் பறவைகள்’ பாடல் என் மனதில் ஒலித்தது. தென் கொரியாவின் புத்தர் கோயிலுக்குச் சென்றபோது நம்பியார் முகம்தான் முதலில் நினைவுக்கு வந்தது. வெளிநாட்டில் எந்த உயரமான கோபுரத்தில் ஏறினாலும், ‘லில்லி மலருக்குக் கொண்டாட்டம்’ உள்ளே ஓடும்.

காலம் நிறைய மாறிவிட்டது. சிறு வயதில் எம்ஜிஆர் படங்களுக்கு என்னை அழைத்துச் சென்ற சேது சித்தப்பாவும் கோவிலடி மாமாவும் இன்று இல்லை. தம்பி வயதாகிப்போய் பல் கட்டியிருக்கிறான். படங்கள் பார்ப்பது குறைந்திருந்தாலும் எம்ஜிஆர் படம் பற்றிப் பேசினால் இப்போதும் என் முகத்தில் ஒரு பல்பு எரியும்.

நிகரில்லா வெற்றி நாயகன்

ஒரு நடிகன் மறைந்து 32 வருடங்கள் கழித்தும் அவனுக்கு பல்லாயிரக்கணக்கான வீடுகளில் விளக்கு ஏற்றி பூஜை செய்யும் அதிசயம் தமிழ்நாட்டில் மட்டும்தான் நிகழும். ஜனவரி 17 எம்ஜிஆரின் பிறந்த நாள். ரசிகர்களும் தொண்டர்களும் தங்கள் சொந்த செலவில் அவரது பாடல்களைப் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கச் செய்வார்கள். இன்றும் அது தொடர்கிறது.

உளவியலில் இரு வகை நாயக வகைகள் ரசிகர்களை ஈர்ப்பதாகச் சொல்வார்கள். ஒன்று வெற்றி நாயகன். மற்றொன்று துயர நாயகன். Conquering Hero and a Suffering Hero. அதிக சாகசங்கள் செய்யும் எம்ஜிஆரும், அதிக சோகத்தைப் பிழியும் சிவாஜியும்தான் அன்றைய இரு துருவ நாயக வார்ப்புகள். வாழ்க்கையின் வலிகள் புரியாத காலத்தில் நாயகனாக என் மனதில் பதிந்தவர் எம்ஜிஆர். அந்த இடத்தைப் பிறகு எவராலும் முழுவதுமாக நிரப்ப முடிவில்லை என்பதுதான் நிஜம்.

படங்கள் உதவி: ஞானம்

(திரை விரியும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE