என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
இயலாதோருக்கு உதவிக்கரம் நீட்டும் உன்னத மனிதர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகாது எனும் கூற்றுக்கு உதாரணமாகியிருக்கிறார், ‘அமர் சேவா’ நிறுவனர் ராமகிருஷ்ணன். கழுத்துக்குக் கீழே செயலற்ற நிலையில் இருந்தபடியே, ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் தலையெழுத்தை மாற்றியமைத்த ராமகிருஷ்ணனுக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.
ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துச் சொல்ல அழைத்தபோது, இந்த மாதம் முழுவதும் சென்னையில் இருப்பதாகத் தகவல் சொன்னார். “இந்த அங்கீகாரத்துக்குக் காரணம், ராமகிருஷ்ணன் என்கிற தனிமனிதன் அல்ல. அமர் சேவா சங்கம்தான். நீங்கள் அங்கு சென்று பார்த்துவிட்டு எழுதுங்கள் போதும்…” என்றும் அன்புடன் அழைப்பு விடுத்தார்.
தென்காசியிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆய்க்குடியில் இயங்கிவரும் அமர் சேவா சங்கத்துக்குப் பயணமானேன். மகிழ்ச்சியுடன் வரவேற்ற சேவா சங்கத்தின் நிர்வாகிகள், உத்வேகம் தரும் ராமகிருஷ்ணனின் கதையை என்னிடம் பகிர்ந்துகொண்டனர்.