பள்ளிக் கல்வியில் தடுமாற்றம் கூடாது!

By காமதேனு

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற அரசாணை ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம், கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்களிடையே இருந்து வந்த இறுக்கம் ஒருவழியாக முற்றுப்பெற்றிருக்கிறது. இந்தப் பொதுத் தேர்வு மாணவர்களிடையே இடைநிற்றலுக்கு வழிவகுத்துவிடும்; பாடப் புத்தகப் படிப்பைத் தாண்டி வேறு சிந்தனையே இல்லாமல் செய்துவிடும் என்று குமுறிக்கொண்டிருந்த பெற்றோர்களும் கல்வியாளர்களும் இப்போது நிம்மதியடைந்திருக்கிறார்கள்.

உண்மையில், மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிடும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், பிற மாநிலங்களையெல்லாம் முந்திக்கொண்டு இப்படி ஒரு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு முனைந்ததே தேவையற்ற நடவடிக்கைதான். இதன் தொடர்ச்சியாக, பொதுத் தேர்வு தொடர்பான அழுத்தத்தில் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டது வேதனை தரும் நிகழ்வு. இந்த அறிவிப்பை முன்பே வெளியிட்டிருந்தால், ஓர் இளம் தளிரை இழந்திருக்க மாட்டோம்.

‘தேர்வு அவசியம்தான் என்றாலும், 5 மற்றும் 8-ம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு என்பதும், அதுதொடர்பாக வெளியிடப்பட்டு திரும்பப் பெறப்பட்ட அறிவிக்கைகளும் மாணவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்திவிட்டன’ என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுவதை அரசு காது கொடுத்து கேட்க வேண்டும். அண்மைக் காலமாகவே, ஏதேனும் ஓர் அறிவிப்பை வெளியிடுவது; அதற்கு வரும் எதிர்வினைகளைப் பொறுத்து அதைத் திரும்பப் பெறுவது என்று பள்ளிக் கல்வித் துறை மிகுந்த குழப்பத்துடன் செயல்படுகிறது.

பள்ளிக் கல்விதான் ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான அஸ்திவாரம். அரசியல் அழுத்தங்களுக்காகவோ இன்ன பிற காரணங்களுக்காகவோ இவ்விஷயத்தில் ஸ்திரமற்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டால், அது வருங்கால சமுதாயத்
தையே பாதித்துவிடும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE