இந்தியன் நெ.1: இமயத்தை வென்ற முதல்மகள்

By பி.எம்.சுதிர்

ஒருசில விஷயங்களை ஆண்களால்தான் செய்ய முடியும் என்பதுபோன்ற மாயையை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். ஆனால், அதையும் பொய்யாக்கி, ஆண்கள் செய்யக்கூடிய எல்லா விஷயங்களையும் பெண்களாலும் செய்ய முடியும் என்று  சில பெண்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.  அவர்களில் ஒருவர் பச்சேந்திரி பால். ஆண்களால் மட்டுமே மலைகளின் உச்சியை அடைய முடியும் என்ற மாயையை உடைத்து இமய மலையின் மீது முதலில் ஏறிய இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தவர் பச்சேந்திரி பால்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நாக்ரி எனும் கிராமத்தில் 1954-ம் ஆண்டு பச்சேந்திரி பால்  (Bachendri Pal)  பிறந்தார். இவரது  தந்தை  ஸ்ரீகிஷன் சிங் பால்,  கோவேறு கழுதையில் மளிகைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு திபெத்தில் உள்ள மலைக் கிராமங்களுக்குச் சென்று  விற்கும் வியாபாரி. பச்சேந்திரி பாலையும் சேர்த்து அவருக்கு மொத்தம் 5 குழந்தைகள். வறுமைச் சூழலில் வாழ்ந்தாலும், தன் குழந்தைகளை அவர்  சிறப்பாக படிக்கவைத்தார்.

சிறு வயதில் துறுதுறுவென இருந்த பச்சேந்திரி பாலுக்கு, அப்போதிருந்தே சிறு குன்றுகளிலும், மரங்களிலும் ஏறுவதில் ஆர்வம் இருந்தது.  இந்நிலையில் அவரது 12-வது வயதில், பள்ளிச் சுற்றுலாவுக்காக  கிராமத்துக்கு அருகில் உள்ள பனிமலைக்கு பச்சேந்திரி அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு இந்த மலையேறும் பயணம் மிகவும் பிடித்துப் போனது.  அதிலிருந்து   ஞாயிற்றுக்கிழமை
களில்  பள்ளித் தோழிகளுடன் சேர்ந்து வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள சிறு பனி மலைகளில் ஏறுவதை வழக்கமாக்கிக் கொண்டார். அப்படி ஏறும்போது உணவை மட்டுமே அவர்கள் எடுத்துச் செல்வார்கள். தண்ணீரை எடுத்துச் செல்ல மாட்டார்கள். மாறாக பனிமலையில் இருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து உறிஞ்சிக் கொள்வார்கள்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை,  பச்சேந்திரி பாலும் அவரது தோழிகளும்,  தங்களின் கிராமத்துக்கு அருகில் உள்ள ஒரு பனிமலையின் உச்சிக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் சென்றனர்.  மிகப்பெரிய உயரத்துக்கு அவர்கள் சென்றதால், பிராணவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் அவர்களால் உடனடியாக கீழே இறங்க முடியவில்லை. ஓர் இரவு முழுக்க உணவும் தண்ணீரும் இல்லாமல் மலையிலேயே கழித்து, மிகவும் கஷ்டப்பட்டு அவர்கள் கீழே இறங்கினார்கள்.

இரவு முழுவதும் மகள் வீட்டுக்கு வராத கோபத்தில், பச்சேந்திரியின் பெற்றோர், அவரை  கண்டித்தனர். “இத்தனை பெரிய உயரத்துக் கெல்லாம் உன்னால் செல்ல முடியாது. இனியாவது வீட்டில் அடங்கி இரு” என்றனர். இது அவரை மேலும் உசுப்பிவிட்டது.  சிறு பிராயத்தில் இருந்தே, தன்னிடம் யாராவது ஒரு செயலை செய்ய முடியாது என்று சொன்னால், அதைச் செய்து கட்டுவது பச்சேந்திரி பாலின் குணம். அந்த வகையில் பெற்றோ ரின் இந்த கண்டிப்பு அவரை உசுப்பி விட்டது. “இந்த மலை என்ன... இதைவிட பெரிய மலையில்கூட ஏறிக் காட்டுவேன்” என்ற வைராக்கியத்தை தனக்குள்ளே வளர்த்துக் கொண்டார்.

பச்சேந்திரி பாலின் மலையேறும் ஆர்வத்தைக் கண்ட அவரது  பள்ளித் தலைமை ஆசிரியர், ‘நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுன்டனீரிங்’ என்ற மலையேற்ற பயிற்சி பள்ளியில் சேருமாறு அறிவுறுத்தினார். ஆனால், பச்சேந்திரியின் பெற்றோர் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனாலும் பச்சேந்திரி பால் விடவில்லை. பெற்றோரிடம் அடம் பிடித்து மலையேற்ற பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். அதேநேரத்தில்  பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற எம்.ஏ., முதுகலை பட்டமும் பெற்றார்.

மலையேற்ற பயிற்சி மையத்தில் இருந்த காலகட்டத்தில்   மவுன்ட் கங்கோத்ரி,   மவுன்ட் ருத்ரகாரியா ஆகிய மலைகளில் பச்சேந்திரி பால் ஏறினார். இவரது திறமையைப் பார்த்து ‘நேஷனல் அட்வெஞ்சர் ஃபவுண்டேஷன்’ என்ற சாகசப் பயிற்சி மையம் இவருக்கு பயிற்றுநர் வேலை தந்தது. இந்த சூழலில் பல்வேறு மலைகளில் ஏறி சாதனை படைத்த பச்சேந்திரி பால்,  1984-ம் ஆண்டு இமய மலை மீது ஏறுவதற்காகச் செல்லும் குழுவில் சேர்க்கப்பட்டார்.

பச்சேந்திரி பால் உட்பட 6 பெண்கள் 11 ஆண்களைக்  கொண்ட குழுவினர், 1984-ம் ஆண்டு  மே முதல் வாரத்தில் தங்கள் பயணத்தைத் தொடங்கினர்.  இனிமையாகத் தொடங்கிய இப்பயணம்,  மே 16-ம் தேதி மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்தது. புத்த 
பூர்ணிமா தினமான அன்று,  மலையேறும் குழுவைச் சேர்ந்த அனைவரும் 24 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள  தங்கள் டென்டு
களில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் பல டென்டுகள் தரைமட்டமானதுடன், பலரும் காயமடைந்தனர்.  அக்குழுவில் இருந்த பலரின் மனோதைரியத்தை இது குலைத்தது.    

  பச்சேந்திரி பாலைத் தவிர மற்ற பெண்களும், சில ஆண்களும் பயணத்தில் இருந்து பின்வாங்கி, கீழே இறங்க முடிவெடுத்தனர். குழுவின் தலைவராக இருந்த கர்னல் குல்லார் பச்சேந்திரி பாலிடம் வந்தார். “அடுத்தகட்ட பயணம்  ஆபத்து நிறைந்ததாக இருக்கும். நீ பயணத்தைத் தொடர்கிறாயா அல்லது  கீழே திரும்புகிறாயா??’ என்று கேட்டார். தான் பயணத்தைத் தொடர விரும்புவதாக உறுதியாகச் சொன்னார் பச்சேந்திரி பால். அந்த உறுதிதான் அவரை இமய மலையில் முதலில் ஏறிய பெண் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆக்கியது. 1984-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி தனது 30-வது பிறந்த நாளுக்கு ஒருநாள் முன்னதாக இமய மலையின் உச்சியை அடைந்த பச்சேந்திரி பால், இமயத்தின் உச்சியைத் தொட்ட முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார். அவரது இந்த சாதனை மேலும் பல பெண்களை இமய மலையின் உச்சம் தொட தூண்டியது.

வாழ்க்கைப் பயணம்

1984-ம் ஆண்டில் முதல் முறையாக இமய மலையில் ஏறிய பச்சேந்திரி பால், அதன் பிறகு பல முறை இமய மலையில் ஏறி சாதனை படைத்தார். இதில் முக்கியமாக 1993, 1994 மற்றும் 1997 ஆகிய ஆண்டுகளில்  முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட குழுவுக்கு தலைமை ஏற்று, இமய மலையின் உச்சியை அடைந்து சாதனை படைத்தார். மலையேறுதலில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள பச்சேந்திரி பாலுக்கு மத்திய அரசு, அர்ஜுனா விருது, பத்ம, பத்மபூஷண் ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE