முதுமை எனும் பூங்காற்று 19: நடைப்பயிற்சி / குளியலறை அபாயங்கள்

By விவேக பாரதி

அன்றாடம் நாம் செய்யும் செயல்கள் நம் உடம்புக்கும் மனதுக்கும் இதமானவையாக அமைய வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்க முடியாது. எனினும், நம் வாழ்க்கையில் தினசரி நிகழ்வுகளில் இடம்பெறக்கூடிய பல விஷயங்களில் நாம் பெருமளவு கவனம் செலுத்துவதில்லை. அன்றாடம் நடக்கும் விஷயங்கள்தானே என்ற அலட்சியம்தான் காரணம். ஆனால், வயோதிகப் பருவத்தில் பெரும்பாலானவர்களுக்குப் பிரச்சினை தரக்கூடியது அந்த அன்றாடச் செயல்களின் கவனக்குறைவுதான். பெரியவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் அறையும் அவர்கள் உடல் நலனுக்காகச் செய்யும் நடைப்பயிற்சியும் பல நேரங்களில் அவர்களுக்குக் கஷ்டத்தை ஏற்படுத்திவிடுவதும் உண்டு.

ஆரோக்கியம் பேண நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். இளைஞர்கள் அதைச் செயல்படுத்துகிறார்களோ இல்லையோ, பணி நிறைவு பெற்றவர்கள் பொழுதுபோவதற்காகத் தங்கள் சம வயதினரைப் பார்ப்பதற்காகவே நடைப்பயிற்சி செய்வார்கள். அப்படிச் செல்லும்போது பல்வேறு விஷயங்களைக் கடைப்பிடிப்பது அவசியம். மேம்போக்காகப் பார்த்தால் இவையெல்லாம் பெரிய பிரச்சினைகளாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், உரிய கவனம் செலுத்தாவிட்டால் பெரிய சிக்கலை ஏற்படுத்தக்கூடியவை.

நடைப்பயிற்சி பாதகங்கள்

பெரியவர்கள் அணிந்திருக்கும் வேஷ்டி, புடவை தடுக்கிவிடலாம். அணியும் செருப்பு நடப்பதற்கு உகந்ததாக இல்லாமலிருக்கலாம். கண்ணாடி அணியும் பழக்கம் உள்ளவர்கள் அதை அணிய மறந்துவிட்டால், பார்வையில் பிரச்சினைகள் இருக்கும். சாலை மேடும் பள்ளமுமாக இருந்தால் கால் இடறி விழ நேரிடலாம். அதிகாலை நடைப்பயிற்சி செய்யும்போது வாகனங்கள் மோதும் வாய்ப்புகள் உண்டு. இரவில் சரியாகச் சாப்பிடாமல் காலையில் வெறும் வயிற்றில் நடக்க ஆரம்பித்து தலைசுற்றல் ஏற்படலாம். இரவு உணவு சரியாகச் செரிமானமாகாமல் இருந்தால், வாந்தி வரலாம். ஒரு சிலருக்கு சிறுநீரகப் போக்கு கட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்காவிட்டால் பிரச்சினையை ஏற்படுத்தலாம். கையில் இருக்கும் செல்போனையோ, கழுத்தில் இருக்கும் சங்கிலியையோ வழிப்பறித் திருடர்கள் பறித்துக்கொண்டு சென்றுவிடலாம். என்ன இது, ஒரு நடைப்பயிற்சிக்கு இத்தனை சோதனைகளா என்று நினைக்கிறீர்களா? சரியாகத் திட்டமிட்டால், இவற்றைச் சரிசெய்துகொள்ள முடியும்.

என்னென்ன செய்யலாம்?

முதலில் இவற்றைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. வாழ்வில் எத்தனையோ கஷ்டங்களை ஏற்று, குடும்பப் பிரச்சினைகளையும் ஏற்ற இறக்கங்களையும் சந்தித்திருக்கும் அவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமல்ல. எந்த பயமும் கவலையும் தேவையில்லை. சின்னச் சின்ன முன்னேற்பாடுகள் செய்துவிட்டால் தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

முதலில் நடைப்பயிற்சியின்போது காற்றில் பறக்கும் வகையிலான உடைகளைத் தவிர்ப்பது நல்லது. வேஷ்டி, சேலை போன்ற உடைகளைத் தவிர்த்து நடை பயில எளிதான உடைகளை அணியலாம். இல்லை, பாரம்பரிய உடையைத் தவிர வேறு உடைகளை அணிவதில்லை என்றால், அணியும் உடைகள் நெகிழ்வாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளலாம்.

கண்ணாடி அணியும் பழக்கம் உள்ளவர்கள் மறக்காமல் கண்ணாடி அணிய வேண்டும். இது அவர்களுக்கு மட்டுமல்ல எதிரில் வருபவர்களுக்கும் நல்லது. காலுக்குப் பொருத்தமான காலணி அணிவது முக்கியம். நம் கட்டைவிரலில் வைத்துப் பிடித்துக்கொள்ளும் வகையில் இல்லாமல், கணுக்காலை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும் வகையிலான காலணியாக இருந்தால் எளிதாக நடக்க முடியும்.

சாலையில் மேடு பள்ளம் அறிந்து வீட்டுக்கு அருகில் இருக்கும் பாதையில் ஏது ஓரளவு நல்லது என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் நடக்க வேண்டும். செல்போனைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதில் ஒரு தாளில் அவசரத்துக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய வீட்டு முகவரி, தொலைபேசி எண்ணை எழுதி லேமினேட் செய்து எப்பொழுதும் பையில் வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் நகைகளை அணிவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். மஞ்சள் கயிறு தாலி போட்டிருந்தால் தங்கச் சங்கிலியைக் கழற்றிவைத்துவிட்டுச் செல்லலாம். காலையில் டீ, காபி, பால் தண்ணீர் என ஏதாவது சாப்பிட்டுவிட்டு வரலாம். இதனால் தலைசுற்றல், மயக்கம், வாந்தி என அனைத்தையும் தவிர்க்கலாம். காது கேட்கும் கருவி உபயோகிப்பவர்கள் அது இல்லாமல் வெளியே செல்லக்கூடாது. வாகனங்கள் கடந்துசெல்லும்போது கவனமாகச் சென்றால் பெருமளவு விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

குளியலறை கவனக் குறைவுகள்

முதியோருக்கு விபத்து நடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ள இடம் குளியலறை / கழிப்பறைதான். மகனோ மருமகளோ எண்ணெய் தேய்த்துக் குளித்து அந்த எண்ணெய் படிந்து இருக்கலாம். பேரப்பிள்ளைகள் சோப்புத் தண்ணீரைச் சரியாகக் கழுவி விடாமல் சோப்பு நுரை படிந்திருக்கலாம். குளியலறையில் பதிக்கப்பட்டுள்ள தடைக்கற்கள் வழுவழுப்பாக இருக்கலாம். மிதியடி கூட வழுக்கலாம். இவை அனைத்துமே ஆபத்துக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டவை.

கவலை ஏன்?

பெரியவர்கள் முதலில் குளியலறையில் கால் வைக்கும்போது ஒவ்வொரு முறையும் புதிதாகக் கால் வைப்பது போல கவனமாகச் சுவரைப் பிடித்துக்கொண்டு கால் வைக்க வேண்டும். விளக்கை ஆன் செய்யாமல் குளியலறைக்குச் செல்ல வேண்டாம். பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்கள் இருக்கின்றனவா, தண்ணீர் தேங்கியிருக்கிறதா என்பதையெல்லாம் உறுதிசெய்துகொள்ள வெளிச்சம் அவசியம்.

கழிப்பறையில் உட்கார்ந்து எழ வசதியாகக் கைப்பிடிகள் வைக்கலாம். பெரியவர்கள் உபயோகிக்கும் குளியலறை / கழிப்பறை சமதளத்தில் இருக்குமாறு அமைத்தல் நலம். மிதியடிகள் மென்மையாக இல்லாமல் சொரசொரப்பாக இருந்தால் வழுக்காமல் இருக்கும். குளியலறை / கழிப்பறை தரைகள் வழுவழுப்பாக இல்லாமல் சொரசொரப்பாக இருந்தால் கால் வைத்தாலும் வழுக்காது.
இவையெல்லாம் எல்லோருக்கும் எப்போதும் நடக்கக் கூடியதல்ல. ஆனால், யாரும் தனக்கு நடக்காது என இருந்துவிட முடியாது. எனது வீட்டுக்கு அருகில் ஒரு முதியவர் எப்போதும் கழுத்தில் தங்கச் சங்கிலி, விரல்களில் மோதிரம் அணிந்திருப்பார். ஒரு நாள் நடைப்பயிற்சி சென்று திரும்பும்போது ஒரு கார் மோதி தெருவுக்கு அருகிலேயே விழுந்துவிட்டார். நகைகள் அணிந்து இருந்த காரணத்தால் யாரும் அவர் அருகில் செல்லத் தயங்கினார்களாம். வெகு நேரம் கழித்து காவலர்கள் வந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது வழியிலேயே அவரது உயிர் பிரிந்துவிட்டது என்று தகவல் வந்தது. நகைகள் அணிந்திருந்த காரணத்தால் ஏற்பட்ட அநாவசியமான குழப்பமும் தயக்கமும், ஒரு உயிர் போகக் காரணமாகிவிட்டன.

இந்த வாரம் நாம் அலசியிருக்கும் இந்த விஷயங்களை எதிர்மறையாக எடுத்துக்கொள்ளாமல், அக்கறையுடன் கூடிய எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுதல் நலம். இதை வாசிக்கும் பெரியவர்கள் இனி இந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தட்டும். இளைஞர்கள் தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இந்த விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும். சிறு பிரச்சினைகள்கூட நம்மைச் சீண்டாமல் பார்த்துக்கொள்வோம்!

(காற்று வீசும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE