தொடாமல் தொடரும் 17

By பட்டுக்கோட்டை பிரபாகர்

ஒலித்த போனில் பெயரைப் பார்த்த ரகு, எழுந்து சற்று விலகிவந்து, “என்ன பவித்ரா?'' என்றான் குரலைக் குறைத்து.
“உடனே உங்களைப் பாக்கணும் ரகு!''

“உடனே எப்படி முடியும்? நாளைக்குப் பாக்கலாமா?''

“நாளைக்குப் பொணமாதான் பார்ப்பீங்க'' என்றாள் பவித்ரா.
“ஏய்! என்ன பேச்சு இது?” பதறினான் ரகு.

எதிர்முனையில் சடசடவென்று பேசியதைக் கவனித்தவன், “சரி…நான் இப்பவே வர்றேன். நேர்ல பேசிக்கலாம்” என்று போனைத் துண்டித்துவிட்டு, “மதன் நான் அவசரமா புறப்படணும்டா'' என்றான்.

“ஆபீஸுக்காப் போறே?”

“இல்ல…இது… வேற ஒரு மேட்டர். அர்ஜன்ட். இன்னொரு நாள் டீட்டெய்லா சொல்றேன்.”
கோயிலுக்கு வெளியில் வந்து பைக்கை எடுத்து ஹெல்மெட் மாட்டி புறப்பட்டான் ரகு.

அந்த இரவின் மழை, வேகம் இல்லாமல் அலைக்கழிக்க காற்றும் இல்லாமல் பூவாளியிலிருந்து செடிக்குச் சீராகக் கவிழ்ப்பதைப் போல கொட்டியது.

தொங்கும் மூங்கில் கூடையில் முதுகுக்குத் தலையணை கொடுத்து அமர்ந்திருந்த ரொஸாரியோ, லேப்டாப்பில் வீடியோ காலில் மகன் அகஸ்டினுடன் பேசிக்கொண்டிருக்க… டைனிங் மேஜையில் இட்லி சாப்பிட்டபடி அவர் முகத்தையே பார்த்தான் பரணி.
“இல்லப்பா. உன் ஃபீலிங்ஸ் எனக்குப் புரியுது. அதே மாதிரி என் ஃபீலீங்ஸை நீயும் கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன்.”
“நான் பிராக்டிக்கலா பேசறேன். நீங்க விதண்டாவாதமா பேசறிங்கப்பா.”

“என் மனசுல இருக்கறதைக் காரண காரியத்தோட டீட்டெய்லா எடுத்துச்சொன்னா அது விதண்டாவாதமா?”
“உங்க ஃப்ரெண்டு நாகராஜன் ஊர்ல உள்ள எல்லா ப்ராப்பர்ட்டீஸையும் வித்துட்டு கலிஃபோர்னியால பையன், மருமகளோட செட்டிலாகலையா? யாருமே செய்யாத ஒண்ணையா உங்களைச் செய்யச் சொல்லிட்டேன்?”

“வாரம் ஒரு தடவை நாகராஜ் எங்கிட்ட பேசிட்டிருக்கான்ப்பா. அவன் முழு மனசோட செஞ்ச காரியம் இல்ல அது.”
“டாடி…இது முழு மனசோட முடியாதுதான். ஆனா முடியவே முடியாதது இல்ல. அட்ஜஸ்ட்மென்ட்தானே வாழ்க்கை?''
“அதைச் சின்னவங்க பண்ண மாட்டிங்க. பெரியவங்கதான் பண்ணணும். இல்லையா?”

“இப்ப வருஷத்துக்கு என் சம்பளம் எத்தனை லட்சம்னு உங்களுக்கே தெரியும். இதே சம்பளத்துல எனக்கு இந்தியால வேலை வாங்கிக்குடுங்க. நான் வந்துடறேன்.”

“எவ்வளவு சொத்து இருந்தா சந்தோஷம்ன்றது ஆளாளுக்கு மாறுபடும்ப்பா. முதலமைச்சரா இருந்தாலும் காமராஜருக்கு நாலு வேட்டி போதுமானதா இருந்திச்சி.”

“அவரு கல்யாணம் பண்ணிக்கலை. குழந்தையை லட்சம் ரூபா கொடுத்து எல்.கே.ஜில சேர்க்கல. காமராஜர் காலத்து வாழ்க்கைய உதயநிதி காலத்துல எப்படிப்பா வாழ முடியும்?”

“சரி… போதும். இந்த மேட்டரைப் பல தடவை பேசிட்டோம்.”

“ஆனா எப்பவும் முடிவுக்கு வந்ததில்லை…”

“எதுக்கு நீ வற்புறுத்தறே?”

“வலிக்குதுப்பா. ஒரு குற்ற உணர்ச்சிய நிரந்தரமா என்னைச் சிலுவை மாதிரி சுமக்க வைக்கிறிங்க.”
“டேய்! அது சிலுவையும் இல்ல. நீ ஏசுநாதரும் இல்ல. ரொம்பப் பேசறே… வைடா போனை!'' வெடுக்கென்று வீடியோ காலைக் கட் செய்துவிட்டு லேப்டாப்பை மூடினார் ரொஸாரியோ.

சமையலறையிலிருந்து ஆவி பறக்கும் இட்லி தட்டுகளிலிருந்து சின்ன ஸ்பூன் வைத்து இட்லிகளை எடுத்து ஹாட்பேக்கில் வைத்தபடி நான்சி, “ஒரு நாளாச்சும் கோபப்படாம ஒழுங்காப் பேசி முடிச்சிருக்கிங்களா நீங்க?” என்றார்.

“ஒரு நாளாச்சும் என்னைக் கோபப்படுத்தாம பேசிருக்கானா உன் புள்ளை? இதை அவன்ட்ட கேக்க மாட்டியே நீ?''
“கேக்கற சமயத்துல கேட்டுட்டுதான் இருக்கேன். ரெண்டு பேருக்கும் நடுவுல பாக்கு வெட்டில பாக்கு மாதிரி நான்தான் சிக்கிக்கறேன்.”

“சும்மா உதட்லேர்ந்து பேசறான் வெட்டிப் பய. அப்படியே குற்ற உணர்ச்சியில துடிக்கிறானாம்… போனை வெச்ச நிமிஷமே பொண்டாட்டிகிட்ட கண்ணடிச்சி சிரிச்சிருப்பான் ராஸ்கல்.”

“அவன் என்னதான் செய்யணும்ன்றிங்க?”

“இப்படி வேஷம் போடாம இருந்தாப் போதும். இனிமே அவன் போன் செஞ்சா நீ பேசு. எங்கிட்ட குடுக்காத. எதுக்கு இந்த ஆக்டிங்னு கேக்கறேன்? அப்பப்ப அவர் பாசமா இருக்கறதா காட்டிக்குவாராம். நானும் நம்பிக்கணுமாம். எனக்கு இந்த ஆக்டிங் வராதுடி.”
மூங்கில் கூடையிலிருந்து எழுந்து பக்கத்தில் இருந்த படுக்கையறைக்குள் சென்றார் ரொஸாரியோ.

நான்சி டைனிங் மேஜைக்கு வந்து பரணியின் தட்டில் சூடான இட்லிகளை வைத்தார்.

“தாத்தாக்கு அங்கிள் மேல என்ன கோபம் பாட்டி?”

“உனக்குப் புரியாதுடா. விடு.”

“எது கேட்டாலும் அம்மாவும் புரியாதுன்றாங்க. நீங்களும் அப்படித்தான் சொல்றிங்க… எனக்கு எப்பதான் புரியும்?'' என்று பரணி கேட்டதும் வாய்விட்டுச் சிரித்தார் நான்சி.

ரகு பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டபோது அபார்ட்மென்டே வெகு அமைதியாக இருந்தது.

இரவு வாட்ச்மேன் பின்புறம் பீடியை மறைத்துக்கொண்டு, “என்ன சார்… இன்னிக்கு இவ்ளோ லேட்டா வர்றிங்க?” என்றான்.
“உனக்கு அவசியம் சொல்லணுமா? வேலையப் பாருய்யா'' கடுப்படித்துவிட்டு லிஃப்ட்டுக்குள் நுழைந்தான்.

தன்னிடமுள்ள சாவியைப் போட்டு கதவை ஓசையில்லாமல் திறந்து உள்ளே வந்தான்.

சத்தத்தைக் குறைவாக வைத்துக்கொண்டு பழைய பாடல்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தாள் அஞ்சலி.
“இன்னும் படுக்கலையா?”

இயல்பாகக் கேட்டபடி படுக்கையறைக்குள் சென்று லுங்கியைக் கையில் எடுத்தான்.

“தூக்கம் வரலை. டிரெஸ் மாத்திட்டு வா…பேசணும்.”

உடை மாற்றியதும் தூளியில் உறங்கிய பரணியைத் துணி விலக்கிப் பார்த்துவிட்டு, சோபாவில் அவளருகில் அமர்ந்தான்.
“ஆபீஸ் முடிஞ்சதும் மதனோட கோயிலுக்குப் போய்ட்டு வருவேன்னு சொன்னே. அதுக்குன்னு இவ்ளோ நேரமா?”
“அவன் பசிக்குதுன்னான். அப்டியே ஹோட்டலுக்குப் போய்ட்டு ஊர் கதையெல்லாம் பேசிட்டுப் புறப்பட நேரமாய்டுச்சி.”
“உனக்குப் பொய் சொல்ல வரல ரகு.”

“என்ன பொய் சொல்லிட்டேன்?”

“உன் போன் கிடைக்கல. மதனுக்கு போன் செஞ்சேன். கோயில்ல இருந்தப்ப ஏதோ போன் வந்துச்சாம். அவசரமா புறப்பட்டுப் போனியாம். எங்க போன ரகு?”

ரகு தடுமாறிப்போனான்.

“ஆமா. ஒரு சைட்லேர்ந்து பிளம்பர் போன் செஞ்சான். ஒரு இஷ்யூ. போய் அதைக் கிளியர் செஞ்சிட்டு வர்றேன்.''
“இதை மொதல்லயே சொல்லிருக்கலாமே?”

“எப்பப் பாரு ஆபீஸ் வேலைன்னா மத்த எல்லாத்தையும் போட்டுட்டு ஓடிடுவேன்னு அடிக்கடி சொல்வே. அதனாலதான் மாத்தி சொன்னேன்.”

“எந்த சைட்டுக்குப் போனே?''
“கந்தன்சாவடி.''
“அப்ப டின்னர் சாப்பிடலைதான?”

“இல்ல. ரெண்டு தோசை ஊத்திக்குடேன். மாவு இருக்குல்ல?''

“இருக்கு.''

எழுந்து ஃபிரிட்ஜிலிருந்து மாவு எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள் அஞ்சலி. ஸ்டவ்வைப் பற்றவைத்து தோசைக் கல்லை எடுத்துவைத்தாள்.

ரகு பெருமூச்சுடன் எழுந்து கழிவறைக்குச் சென்றான். முகம் கழுவி லுங்கியால் துடைத்தபோது ஹால் டீப்பாயிலிருந்த தன் செல்போன் ஒலிப்பதைக் கேட்டு அவசரமாக வெளியே வர… அதற்குள் இயல்பாக அஞ்சலி எடுத்து, “ஹலோ… யாரு?'' என்றாள். “சார் இல்லைங்களா மேடம்?”

“நீங்க யாருன்னு சொல்லுங்க.”

“கந்தன்சாவடி சைட்லேர்ந்து ப்ளம்பர் பேசறேன். இங்க ஒரு பிரச்சினை. சார்ட்ட அவசரமா கன்சல்ட் செய்யணும் மேடம்…”
“ஏம்ப்பா… இவ்ளோ நேரம் அங்கதான இருந்துட்டு வந்தாரு?''

“அவர் எப்ப மேடம் இங்க வந்தாரு? அவர் இந்த சைட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆச்சே.”

“நாளைக்குப் பேசிக்க” போனை வைத்த அஞ்சலி உச்சமான கோபத்துடன் திரும்பி ரகுவைப் பார்த்தாள்.

(தொடரும்...)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE