கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
ஊட்டி - கல்லாறு மலைச்சரிவில் வாகனங்களுக்குப் பசுமை வரி வசூலிக்கும் சோதனைச் சாவடியில் கவனம் ஈர்த்தார் ஒரு காவியுடை மனிதர். துருவேறின பைக். அதன் பின் பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் அரதப் பழசான சைக்கிள். கேரியரில் கொஞ்சம் பித்தளைப் பாத்திரங்கள், பைகள் என்று வித்தியாசமாக வந்தவரிடம், “பசுமை வரி 30 ரூபாய் கொடுத்தே ஆகணும்” என்று சோதனைச் சாவடி ஆட்கள் கேட்க, அவரோ தன் பையிலிருந்த புகைப்படங்களையும் சில குறிப்புகளைக் காட்டினார்.
“நான் ஒரு வித்தைக்காரன். பங்களாதேஷ் வரைக்கும் கூட போயிட்டு வந்திருக்கேன். எந்த எடத்துலயும் யாரும் துட்டு கேட்டதில்லை, நீங்க கேட்கிறீங்களே…” என வாதிட்டுக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், யாரும் எதிர்பாராத வகையில் பைக்கை ஸ்டார்ட் செய்து ஊட்டி முதலாவது கொண்டை ஊசி வளைவுக்குச் சென்று திரும்பினார். ஹேண்டில் பாரிலிருந்து கையை எடுத்துவிட்டு எம்பி பைக் மீது ஏறி நின்றார். கைதட்டுகிறார். பல்டி அடித்து வண்டியிலேயே அமர்கிறார். படுத்த வாக்கிலேயே வண்டியை ஓட்டுகிறார். சோதனைச் சாவடி ஊழியர்களுக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது.
“அய்யா சாமி… போதும். ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகிடப்போவுது. வரியும் வேணாம் கிரியும் வேணாம். எங்கியோ போய் என்னவோ செய்” என்று அரற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.