தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்திய குரூப்-4 எழுத்துத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மிகவும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டிருக்கும் இந்த முறைகேட்டில், இடைத் தரகர்கள், தேர்வுத் துறை ஊழியர்கள், அதிகாரிகள் சிலர் துணைபோயிருப்பதும், இதற்கு முன் நடந்த குரூப்-2ஏ போன்ற தேர்வுகளிலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்று எழுந்திருக்கும் ஊகங்களும் மிகுந்த கவலையளிக்கின்றன.
ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 99 இடங்களில் வந்திருப்பது தொடர்பாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் தொடங்கிய விசாரணையில், திகைக்கவைக்கும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. முறை
கேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் அழியும் மை மூலம் தேர்வு எழுதியது, விடைத்தாள்கள் ரகசியமாக மாற்றப்பட்டது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றது என்று வெளியாகிவரும் செய்திகள், நேர்மையான வழிமுறைகளில் நம்பிக்கை வைத்திருப்பவர்களை ஏமாற்றத்தின் விளிம்பில் தள்ளக்கூடியவை.
லட்சக்கணக்கில் பணம் விளையாடியிருக்கும் இந்த முறைகேடு தொடர்பான விசாரணை தீவிரமடைந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. ‘எங்கள் நேர்மையான செயல்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் நடவடிக்கை
எடுக்கப்படும்’ என்று டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முறைகேடு செய்து பணியில் சேர்பவர்கள் ஒட்டுமொத்த துறை மீதும் ஊழல் கறைபடியும் வகையில்தான் செயல்படுவார்கள். எனவே, இந்த வாக்குறுதி உறுதியுடன் நிறை
வேற்றப்பட வேண்டும்.
குற்றவாளிகள் எந்தப் பின்னணி கொண்டிருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட்டால்தான், இப்படியான குற்றங்களில் ஈடுபடுட யாரும் துணிய மாட்டார்கள். இப்படிப்பட்ட முறைகேடுகள் இளம் தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கையின்மையை விதைத்துவிடும், நேர்மையான வாழ்க்கைக்கான குறிக்கோளைச் சிதறடித்துவிடும் என்பதால் இவ்விஷயத்தில் பாரபட்சமற்ற விசாரணையும், கடுமையான சட்ட நடவடிக்கைகளும் அவசியம். அரசு அவற்றைச் செய்யும் என்று நம்புவோம்!