ஹாட் லீக்ஸ்: காலில் விழுந்த மா.செ; கடுகடுத்த ஸ்டாலின்

By காமதேனு

ஃபீலிங் பெரியசாமி!

திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவுக்கு திமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பு கொடுத்ததில், துணைப் பொதுச் செயலாளரும் திண்டுக்கல் முன்னாள் மாவட்டச் செயலாளருமான ஐ.பெரியசாமிக்கு ஏக வருத்தம். கடந்த மூன்று மாதங்களாக அறிவாலயம் செல்லாமல் விவசாயப் பணியில் மூழ்கியிருந்த  அவர், தற்போதைய மாற்றங்களால் மேலும் அப்செட்டாம். அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக இருந்துவரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் மேயர் பதவியை ஐ.பெரியசாமியின் மருமகளுக்குக் கேட்கச் சொல்லி குடும்பத்தினர் வற்புறுத்தினார்களாம். ஏற்கெனவே நமக்கு முக்கியத்துவம் இல்லை. இந்தப் பதவியைக் கேட்டால் இதைச் சொல்லியே வேறு பொறுப்புகளிலிருந்து மொத்தமாக ஓரம்கட்டிவிடுவார்கள் என்று சொல்லிவிட்டார் ஐ.பி.

தலைமை இல்லாததால் தலைவலி!

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதுபோல், கேரள பாஜக தலைவராக இருந்த ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் கேரளத்திலும் மாநிலத் தலைவர் பதவியிடம் காலியாகவே இருக்கிறது. இந்நிலையில் ‘குடியுரிமைத் திருத்தச் சட்ட விஷயத்தில் கேரளத்தில் பாஜகவின் குரல் வலுவின்றி போனதற்கு மாநிலத் தலைவர் இல்லாததுதான் காரணம்’ என அம்மாநிலத்தின் ஒரே பாஜக எம்.எல்.ஏவும், முன்னாள் மாநிலத் தலைவருமான ஓ.ராஜகோபால், அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். பாஜக தலைவர் நட்டாவை நேரில் பார்த்துச் சொல்லிவிட்டும் வந்திருக்கிறார். மீண்டும் தலைவர் பதவிக்கு அடிபோடுகிறார் ராஜகோபால் என்கிறார்கள் கட்சிக்காரச் சேட்டன்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE