தொடாமல் தொடரும்- 16

By பட்டுக்கோட்டை பிரபாகர்

“அஞ்சலி… மழை நின்னாலும்கூட நீ இப்ப போக முடியாது. வழில பவர் கட். ஒரு பெரிய மரம் வேரோட சாஞ்சிக் கிடக்குது. ரோடெல்லாம் சறுக்குது. நானே ரொம்பப் பாத்து பாத்துதான் வந்தேன்” என்றான் சத்யா உள்ளே வந்து.
“அப்டின்னா இங்கயே தங்கிடு அஞ்சலி” என்றார் சரஸ்வதி.

சத்யா தன் அறைக்குள் சென்று உடை மாற்றிக்கொண்டு வேறு ஸ்வெட்டர் அணிந்து வந்தான்.
அரையிருட்டைத் துடைக்கும் முயற்சியில் காம்பவுண்டில் நின்ற இரட்டை விளக்குகள் தீவிரமாக இருக்க…வெள்ளித் தூசுகளாகத் தெரிந்த மழையை ஜன்னல் வழியாகப் பதற்றத்துடன் அஞ்சலி பார்த்தாள்.

மேஜை மீதிருந்த சால்ட் பிஸ்க்கெட் பாக்கெட்டைக் கையில் எடுத்துக்கொண்டு அவளருகில் வந்து நின்றான் சத்யா.
“ரொஸாரியோ சார் வீட்லதான இருக்கான் பரணி? எதுக்கு டென்ஷனாகிறே அஞ்சலி?”
“நைட்டு சில சமயம் பெட்டை நனைச்சிடறான் அவன். அவங்களே வயசானவங்க. பாவம்…பெரிய தொந்தரவாயிடும். நிச்சயமா போகவே முடியாதா சத்யா?”

“ரிஸ்க்கு. ப்ளீஸ்… வேணாம். அவங்க பாத்துப்பாங்க. விடு. கொஞ்சம் ரிலாக்ஸ்டாதான் இரேன். பிஸ்கெட்?”
சத்யா பாக்கெட் நீட்ட, “சாப்ட்டேன். டீயும் ஆச்சு. உனக்கு டீ போட்டுத் தரவா?” நகரப் போனவளை சரஸ்வதி தடுத்தார்.
“நான் போட்டுட்டு வர்றேன். நீங்க பேசிட்டிருங்க'' என்று சமையலறைக்குப் போனதும், “அம்மா கேமை நான் ஆடறேன். வா… வந்து உக்காரு” என்று கேரம் முன்னால் அமர்ந்து, “இப்ப யார் ஸ்ட்ரைக்?” என்றான்.
“நீதான்'' என்று எதிரில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி.

கேரம் ஆடியபடி,“நானும் அம்மாவும் சென்னைக்கு ஒரு கல்யாணத்துக்குப் போறோம்” என்றான் சத்யா.
“அம்மா சொன்னாங்க.”

“ரகுவைப் பார்த்துப் பேசலாமான்னு உங்கிட்ட கேக்கச்சொன்னாங்க.''
“அவங்களே கேட்டுட்டாங்க.''
“என்ன சொன்னே?”
“அப்பதான் நீ வந்தே.”
“சரி… என்ன உன் பதில்?''
“சத்யா…அது முடிஞ்சிப் போச்சு! விட்டுடேன்.''
“ஏன் மறுபடி ஆரம்பிக்க முடியாதுன்றதுக்கு நீ சரியான காரணம் சொல்லு. நான் விட்டுடறேன்.''
அமைதியாக ஆட்டத்தை மட்டும் தொடர்ந்தாள்.

“இந்தக் கேள்விக்குப் பல தடவை நீ மவுனம் சாதிச்சிட்டே. இன்னிக்காவது நீ பேசித்தான் ஆகணும்.''
“ஏன் இப்படி வற்புறுத்தறே?”
“உன் மேலயும் பரணி மேலயும் அக்கறை!”
“அதே அக்கறை உங்கம்மாவுக்கும், எனக்கும் உன் மேல இருக்கக் கூடாதா?”
“அது வேற… இது வேற!”

“ரெண்டும் ஒண்ணுதான் சத்யா. புரியாத மாதிரி நடிக்காத!”
“இல்ல அஞ்சலி. ரெண்டும் ஒண்ணு இல்ல…”
“எப்படி ஒண்ணுல்ல?”

“நான் வாழ்ந்தது ரொம்ப சந்தோஷமான வாழ்க்கை. ஒரு முழுச் சாப்பாடு சாப்பிட்டு முடிச்சி பீடாவும் போட்டவனை மறுபடி பந்தியில உக்காரச் சொல்ற மாதிரியான விஷயமாதான் என் செகண்ட் மேரேஜை நான் பார்க்கறேன். உன் விஷயம் அப்படி இல்ல. அது சந்தோஷமா ஆரம்பிச்சி சங்கடமாகி வருத்தத்துல முடிஞ்சது. இதுல அந்த வருத்தத்தை மட்டும் சரிசெஞ்சிட முடியாதான்னு நாங்க நினைக்கிறது எப்படி தப்பாகும்?''

“அது நடக்காது சத்யா.''
“சரி… ஏன் நீயா நெகட்டிவா யோசிக்கணும்?''
“இது நெகட்டிவ் இல்ல. பிராக்டிகல்!''

“நடக்கணும்னு நான் சொல்றேன். அதுக்கான காரணத்தையும் சொல்றேன். நியாயமா இல்லையான்னு நீ சொல்லு. முதல் காரணம்…பரணி! நீங்க பிரிஞ்சப்போ அவன் குழந்தை. இப்ப அப்படியில்ல. யோசிக்கறான். ஏங்கறான். என்ன விதமா சொன்னாலும் சமாதானமாகாம கேள்வி கேக்கறான். பரணி ரத்தத்துல பாதி ரகு இருக்கார் அஞ்சலி.''
“முடிச்சிட்டியா?”

“இல்ல. ரெண்டாவது காரணம்… பிரிஞ்சப்போ இருந்த அதே கோபம் இப்பவும் ரகு மேல உனக்கு இல்லைன்னு உன் மனசாட்சிக்கே தெரியும். பிடிவாதம் பிடிக்கிறதும் ஒரு வேஷம் போட்டுக்கறதும் நல்லால்ல.''

“இப்ப என்ன நான் வேஷம் போட்டேன் உங்கிட்ட? சத்யா…என் கல்யாண வாழ்க்கையில ஏற்பட்ட எல்லா கசப்புகளையும் நீ, ரொஸாரியோ சார், நான்ஸி ஆன்ட்டி உங்க மூணு பேருக்கும் எதையுமே மறைக்காம சொல்லிருக்கேன்.”
“நான் அதைச் சொல்லல. மறுபடி ரகுவோட வாழ ஒரு வாய்ப்பு வந்தா மறுக்கறதுக்கு உங்கிட்ட ஸ்ட்ராங்கான காரணம் அப்ப இருந்திச்சி. இப்ப இல்லைன்றேன். அந்தக் கொந்தளிப்பும், வேகமும், சூறாவளிக் கோபமும் இப்ப டைல்யூட் ஆயிடுச்சின்றேன். அதை மட்டும் நீ ஒத்துக்க மாட்டே.”

மீண்டும் அமைதியானாள் அஞ்சலி.
“மவுனத்துக்கு ஆமோதிப்புதான அர்த்தம்?”
“மவுனத்துக்குப் பல அர்த்தம் இருக்கு சத்யா.”

“இந்த மவுனத்துக்கு என்ன அர்த்தம்னுதான் சொல்லேன். புரிஞ்சிக்க முயற்சி பண்றேன்.”
“உன் அளவுக்குச் சாமர்த்தியமா என்னால வாதம் செய்ய முடியலன்னா…எங்கிட்ட நியாயமான காரணம் இல்லன்னு அர்த்தம் இல்ல சத்யா. அதைச் சொல்றதுல தயக்கம் இருக்கும்னும் புரிஞ்சுக்கலாமே.''
“நான் ரெண்டு கையையும் தூக்கிட்டேன். இனிமே இதைப் பத்திப் பேசினா…செருப்பால அடி!''
“எதுக்கு இத்தனை கோபம் சத்யா?''

“நீ செய்ற வாதத்துல என்னைப் புறக்கணிக்கறே. தள்ளி வெச்சிப் பார்க்கறே. இந்தக் கோட்டைத் தாண்டி வராதேன்னு நிறுத்திவைக்கிறே. அது வலிக்குது. வலிச்சா கோபம் வரும். உனக்கு வந்த மாதிரிதான்! அம்மா வர்றாங்க! அப்பறம் பேசலாம்'' என்றவன் சரஸ்வதி எடுத்து வந்த டீக் கோப்பையை வாங்கியபடி எழுந்து, “நீயே ஆடும்மா. எனக்குத் தலை வலிக்குது. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கறேன்'' என்று அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான்.

அமர்ந்த சரஸ்வதி, “என்னாச்சி? அவன் கல்யாணத்தைப் பத்திப் பேசுனியா? எதுக்கு துரை இப்ப கோவிச்சிட்டுப் போறாரு?” என்றார்.

நிமிர்ந்த அஞ்சலி, கண்களிலிருந்து விடுதலைக்குத் துடித்த கண்ணீர் முத்துக்களை ரகசியமாக மறைத்து, “அதெல்லாம் ஒண்ணும் இல்லயே” என்றாள்.

கோயில் பிரகாரத்தில் படிக்கட்டில் அமர்ந்திருந்த ரகுவிடம் தொண்ணைகளில் வெண்பொங்கலுடன் வந்தான் மதன்.
“சூடா இருக்கு. இந்தா.''

“இதைவிட நான் சூடா இருக்கேன். சர்ப்ரைசா ஸ்கூட்டர் வாங்கிக் குடுன்னு சொன்ன உன்னைத்தான் உதைக்கணும்.”
“எனக்கென்னடா தெரியும் உன் பொண்டாட்டியும் அதே சமயத்துல ஒரு ஸ்கூட்டர் வாங்கிருப்பாங்கன்னு?”
“எந்த விஷயமும் பிரச்சினையிலதான் வந்து முடியுது.”

“இப்ப ரெண்டு ஸ்கூட்டரும் யூஸ் பண்றிங்களா?''

“எங்கிட்டதான் பைக் இருக்கே. ஒண்ணை வித்தாச்சு.”
“யார் வாங்கினதை?''

“அந்த லோனை உடனே மொத்தமா க்ளோஸ் செஞ்சா ஃபெனால்ட்டி கட்டணும்னு சொன்னாங்க. கணக்கு போட்டுப் பாத்தோம். எங்க அபார்ட்மென்ட்ஸ்லையே ஒருத்தர் நான் வாங்கினத அஞ்சாயிரம் தள்ளி வாங்கிக்கறேன்னார். கொடுத்துட்டேன். வாங்கின மறு நாளே வண்டிய வித்தவன் நானாதான் இருப்பேன்.''

பொங்கல் சாப்பிட்டு தொண்ணைகளைக் குப்பைத் தொட்டியில் போட்டு, பைப்பில் கை கழுவிவிட்டு மீண்டும் அமர்ந்தார்கள்.
“இன்னொரு ஐடியா சொல்லவா ரகு?”

“உதை வாங்குவே! பேசாம இருடா!”

“இந்த ஐடியா கண்டிப்பா வொர்க் அவுட் ஆகும். பரணி பொறந்தப்பறம் எங்கயாச்சும் டூர் போனீங்களா?”

“இல்ல…அவன் இன்னும் நடக்கவே ஆரம்பிக்கலைடா.''

“அதனால என்ன? கைக்குழந்தையோட டூர் போறவங்களைக் காட்டவா? ஆனா ஒண்ணு. இந்தத் தடவை சர்ப்ரைஸ் செய்யாத. கலந்து பேசியே பிளான் பண்ணு.''

ஒலித்த போனில் பெயரைப் பார்த்த ரகு, எழுந்து சற்று விலகிவந்து, “என்ன பவித்ரா?'' என்றான் குரலைக் குறைத்து.
“உடனே உங்களைப் பாக்கணும் ரகு!''

“உடனே எப்படி முடியும்? நாளைக்குப் பார்க்கலாமா?''

“நாளைக்குப் பொணமாதான் பார்ப்பிங்க'' என்றாள் பவித்ரா.

(தொடரும்…)

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE